இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி- வடிவேலு ஓப்பன் டாக்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராயநகர் அக்கார்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசியது

என்ன சொல்வது என்றே எனங்கு தெரியவில்லை. நான் அனுபவித்துள்ள துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க முடியாது. வைகைப் புயல் என என்னை சொல்வார்கள் , இடைப்பட்ட ஆண்டுகளில் என் வாழ்வில் நான் சூறாவளிப் புயலையே சந்தித்து விட்டேன்.

கடந்த 4 ஆண்டில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுள்தான் காரணம் .

இந்த கொரோனா எல்லோரையும் மிரள வைத்துவிட்டது. கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி என் மனசை தேற்றி கொண்டேன். சுபாஷ்கரன் எனக்கு வாழ்க்கை கொடுத்து சபாஷ்கரன் ஆகிவிட்டார். எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும் வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை.

முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்தபிறகு எனக்கு வாழ்க்கை பிரெய்ட் ஆகி விட்டது.

நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய மூளை என்னுடையதுதான்.

இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக எல்லாம் எனக்கு எந்த தகவல் இல்லை. இந்த படத்தில் கதாநாயகி கிடையாது.

எனக்கு END -ஏ கிடையாது. இடைப்பட்ட காலத்தில் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக அமைந்தது.

என் மூலம் நட்டம் ஏற்பட்டதாக இயக்குநர் ஷங்கர் சொன்னது எல்லாம் பொய். சங்கரின் சாவகாசமே இனி எனக்கு வேண்டாம் , சங்கர் இருக்கும் ஏரியா பக்கமே இனி போக மாட்டேன்.

வரலாற்று படம் நடிப்பதற்கு இனி வாய்ப்பில்லை . அரசியல் குறித்து எந்த முடிவும் இல்லை.

எனக்கு ரெட் கார்ட் போடப்பட்டது என்பதே பொய். வாய்மொழியாக கூறப்பட்ட வார்த்தை அது.

முன்பு நடித்ததை விட இனி பிரமாண்டமாக நடிப்பேன்.

நடிகைகள் பலரிடமிருந்து என்னுடன் நடிப்பதற்கான அழைப்பு வருகிறது. லாரன்ஸ் , அர்ஜூன் போன்றவர்களும் புதிய படம் பண்ண முடிவாயிருக்குது

இப்பல்லாம் சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ் மூலம் உடனுக்குடன் கவுண்டர் கொடுக்கிறார்கள்.மீம்சில் இருந்து யாரும் தப்ப முடியவில்லை.

எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் சந்திரபாபு , தங்கவேலு , தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் . சூரி , யோகிபாபுவும் நன்றாகவே நடிக்கின்றனர்.

இதுவரை இணையத் தொடரில் நடிக்கவில்லை.

இப்ப உள்ள மன நிலையில் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. என்று பாடத் தோன்றுகிறது.

இனிமே உதயநிதி கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது , மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மறைந்த நடிகர் விவேக் எனக்கு அருமையான நண்பன் . அவரது இறப்பு பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

இந்த படத்தின் இரு பாடல்களில் ஒரு பாடலை நான் பாடுகிறேன் ” என்று கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுராஜ் “இந்த படம் நகைச்சுவையாக இருக்கும். நானும் வடிவேலுவும் 2 ஆண்டுகள் உழைத்து இந்த கதையை தயாரித்தோம். கதைக்கான தயாரிப்பாளர்களை கண்டறிவதில் நிறைய தடங்கல் ஏற்பட்டது. இறுதியில்தான் GKM தமிழ்க்குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம் வடிவேலுவின் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி சுபாஷ்கரன் இந்தியா வந்து , தாம் சொன்னப்படி பிரச்சனைகளை தீர்த்தார்.

இதற்கு முன்பு நான் சில ப்ளாப் படங்கள் கொடுத்திருக்கலாம், இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்திருக்கிறோம். வடிவேலுவுக்கான இடம் எப்போதும் இருக்கிறது.

இந்த படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைக்க உள்ளோம். இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள் வடிவேலுவுக்கு வேண்டியவர்கள் எனவே அந்த டைடிலை கண்டிப்பாக எங்களுக்கு கொடுத்து விடுவர் என நம்புகிறோம் “என்று நம்பிக்கை தெரிவிச்சார்.