குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

28 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகி இன்னிக்கும் நினைவில் நிற்கும் ஜென்டில்மேன் – சில நினைவுகள் By கட்டிங் கண்ணையா

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரா இன்னிக்கும் இருக்கும் டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல் படம் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில் மேன்’ சூப்பர் ஹிட் திரைப்படம் தான். இந்த படம் உருவானது குறிச்சு ஸ்டில்ஸ் ரவி ஒரு முறை கட்டிங் கண்ணையாவுக்கு அளிச்ச பேட்டியின் போது, “நான் இயக்குநர் பவித்ரனோட 2 படங்களுக்கு ஸ்டில்ஸ் ஒர்க் செஞ்சேன். அப்போது அவரிடத்தில் கோ டைரக்டரா  இருந்த ஷங்கர் எனக்கு நல்ல பழக்கம். நல்ல அறிவாளி. காமெடி சென்ஸ் உள்ளவர். அவர் தனியாக படங்களுக்கு முயற்சி செஞ்சுகிட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஏ.வெங்கடேஷுடன் என் வீட்டுக்கு வந்து ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதையை என்னிடத்தில் சொன்னார். எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்துது. எக்ஸ்ட்ரார்டினரி கதையா தோன்றிச்சு. ஆனால், அதில் அதிகமாக இருந்த பிராமண பாஷையை மட்டும் குறைச்சு கொள்ளும்படி அட்வைஸ் செஞ்சு அந்தக் கதையை படமாக்கும்படி சிவஸ்ரீ பிக்சர்ஸ், தாணு ஸார், அன்பாலயா பிரபாகரன் உள்ளிட்ட பல  தயாரிப்பாளர்களிடத்தில் சிபாரிசு செஞ்சேன். ஆனாலும், அவர்கள் யாரும் ஷங்கரை இயக்குநராக முன் வரவில்லை.

இந்த நேரத்தில் குஞ்சுமோன் ஸாருக்கும், பவித்ரனுக்கும் இடையில் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. பவித்ரன், குஞ்சுமோனைத் தவிர்த்துவிட்டு தனியாக படம் செய்யப் போய்விட்டார். இந்தப் பிரச்சினையைக் கேள்விப்பட்டு அவர்களுக்கிடையில் சமரசம் செய்து வைக்க நான் குஞ்சுமோன் ஸாரை சந்திக்கச் போயிருந்தேன்.  அப்போ அவர் பவித்ரன் தன்னை விட்டுப் போனதில் கடுங்கோபத்தில் இருந்தார். பவித்ரன் தனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சுப்புட்டார் அது இது-ன்னு திட்டிக் கொண்டிருந்தார். கூடவே அடுத்து ஒரு மலையாள இயக்குநர், ஒரு தமிழ் இயக்குநரை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செஞ்சிருந்தார்.

இந்த நேரத்தில்தான் நான் குஞ்சுமோனிடம், ஷங்கர் பற்றிச் சொன்னேன். “ஓ.. எனக்குத் தெரியுமே.. பவித்ரன் அஸிஸ்டெண்ட்…” என்றார் குஞ்சுமோன். அப்போ, “ஆமா . அந்த ஷங்கரிடம் ஒரு நல்ல கதை இருக்கு. நிச்சயமாக தயாரிக்கலாம்…” என்று குஞ்சு மோனிடம் சொன்னேன். உடனேயே “ஷங்கரை வரச் சொல்லுங்க…” என்றார் குஞ்சுமோன். எனக்கு அடுத்த நாள் வேறொரு படத்தில் வேலை இருந்ததால் வெளியூருக்குக் கிளம்பினேன். அப்போது ஷங்கர், பவித்ரனுடன் இணைந்து அடுத்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக வெளியூர் போய்விட்டார்.

இதனால், “நீங்களே உங்களது மேனேஜரை வைத்து ஷங்கரை அழைத்துக் கதை கேளுங்கள்…” என்று குஞ்சுமோனிடம் சொல்லிவிட்டு நானும் வெளியூர் போய் விட்டேன்.நான் சொன்னது போலவே ஷங்கர், குஞ்சுமோனை நேரில் பார்த்து ‘ஜென்டில்மேன்’ கதையைச் சொல்லியிருக்கிறார். குஞ்சுமோனுக்கும் அந்தக் கதை பிடித்துப் போய் உடனேயே ஷங்கருக்கு ஓகே சொன்னார். இப்படித்தான் அந்தப் படம் துவங்கியது” அப்ப்டீன்னு சொல்லி இருந்தார். (கட்டிங் கண்ணையா)

இதில் ஹீரோவாக நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிச்சிருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மதுபாலா நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் ராஜன்.பி.தேவ் நடிச்சு இருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் சரண் ராஜன்.பி.தேவ் சுபஸ்ரீ, வினித், மனோரமா, நம்பியார், அஜய் ரத்னம் நடித்திருந்தனர். நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடியில் கலக்கியிருந்தனர்.இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த இந்த படத்துக்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார், பி.லெனின் – வி.டி.விஜயன் இணைந்து படத்தொகுப்பாளர்களாக பணியாற்றியிருந்தனர். இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் மெகா பணியாற்றி யிருந்தனர்.இப்படத்தினை தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதுக்கிடையிலே இந்தப் படத்துலே ஹீரோவாக நடிக்க முதலில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் மற்றும் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் ஆகிய இருவரையும் ஷங்கர் அணுகினார். ஆனால், சில தவிர்க்க முடியாத இவங்க இருவருமே நடிக்க மறுத்துட்டாய்ங்க. அதன் பிறகே ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனிடம் கதை சொல்லி , அவர் கதாநாயகனாக கமிட்டானார். பிறிதொரு சமயம் , நடிகர் கமல் ஹாசன் இந்த படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணம் குறித்து பேச்சு வந்த போது ‘ ஷங்கர் எடுத்த ‘ஜென்டில் மேன்’ படத்தின் இப்போதைய கதை வேறு. ஆரம்பத்தில் அவர் எனக்கு சொல்லும்போது, ஒரு பார்ப்பன பிள்ளையினுடைய militancy பற்றிய கதை.  பார்ப்பனனா நான் எனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை என்று கூறினேன். அப்படியே நீங்கள் இப்படத்தை செய்தால் கூட, கதையில்  மாற்றம் செய்து கொள்ளுங்கள் அப்ப்டீன்னு சொன்னேன். பின்பு, அவர் அப்படிதான் செய்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன்” என்று கமல் ஹாசன் தெரிவிச்சிருந்தாராக்கும்