பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த நாளின்று!

பழக்கத்தினாலும்., மனதை விட்டு நீங்காத பல தமிழ் பாடல்கள் மூலமும் இன்றும் நம்மிடையே வாழும் கவிஞர் தம்பி நா. முத்துகுமார் பிறந்த தினம் இன்று (ஜூலை 12) இறந்துவிட்டவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா என்ற விவாதம் எப்போதும் நடைபெறுவதுண்டு. இதுகுறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோர்கள் இறந்துவிட்ட பிறகு அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டையும் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை அவர்களுடைய இன்றியமையாமையை அவர்கள் விட்டுச் சென்றதால் விளைந்த இழப்பை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துவது தமிழ்ச் சமூகத்தின் மரபு.அப்படிப்பட்ட பெரியோர்களுக்கு இணையாக தமிழர்களால் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இயங்கும் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் நா.முத்துக்குமார்.

திரைப்படங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான பாடல்களையும் வெகு சிறப்பாக எழுதிவந்தார் முத்துக்குமார். நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் காதல் பாடல்கள், புத்துணர்வூட்டும் நாயக அறிமுகப் பாடல்கள், ஆட்டம் போடவைக்கும் பாடல்கள், அதிநவீன நகர வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாடல்கள், கிராமியப் பாடல்கள், மனதை உருக்கும் சோகப் பாடல்கள், துவண்ட மனங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கைப் பாடல்கள், கதைகளின் கருப்பொருளை ஒரே பாடலில் விளக்கத் தேவைப்படும் தீம் பாடல்கள் என அனைத்து வகையான பாடல்களிலும் முத்துக்குமார் எழுதிய சிறப்பான வெற்றிபெற்ற பாடல்களை வைத்து தனித் தனிப் பெரும் பட்டியல்களைத் தயாரிக்கலாம்.

1999 ஆம் ஆண்டு முதல் பல படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார் நா. முத்துக்குமார். விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற “உன் பேர் சொல்ல ஆசைதான்” பாடல் நா. முத்துக்குமாருக்கு முதல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.அதன்பின் சலாம் குலாமு, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, தாவணியே என்ன மயக்குறியே போன்ற பாடல்கள் அந்த வருடத்தின் மக்கள் கொண்டாடும் பாடல்களாய் அமைந்தது. நா. முத்துக்குமார் இயற்றிய பாடல்களில் பல பாடல்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தை நமக்கு புரிய வைக்கும்படி அமைந்திருக்கும். எளிமையான வரிகளில் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் நா. முத்துக்குமாரின் வரிகள் அமைந்திருக்கும்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே நா. முத்துக்குமார் எழுதியிருப்பார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களுமே 2004 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. அதிலிருந்து யுவன் சங்கர் ராஜா – நா. முத்துக்குமார் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி ஆகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே நா. முத்துக்குமாரின் பொக்கிஷ ஆல்பமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த ஆல்பத்தில் அமைந்த “ஒரு நாளில்” பாடல் வாழ்க்கையின் ஆழத்தை கேட்போருக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.

நா முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். தங்க மீன்கள் படத்தில் அமைந்த “ஆனந்த யாழை” பாடலுக்காகவும் சைவம் திரைப்படத்தில் அமைந்த “அழகே” பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா. முத்துக்குமார் வென்றுள்ளார். தூசிகை, பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா போன்ற கவிதை புத்தகங்களையும் நா. முத்துக்குமார் இயற்றியுள்ளார். இதுமட்டுமின்றி கிரீடம், ஜெகதீஸ்வரன் படங்களுக்கு நா. முத்துக்குமார் வசனமும் எழுதியுள்ளார்.

பொதுவாழ்வில் ஒரு கவிஞராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக வியக்க வைக்கும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள நா.முத்துக்குமார் ஒரு நல்ல மனிதராகவும் இருந்தார். திரைத் துறைக்குள்ளும் வெளியேயும் அவரை உற்ற நண்பனாக பாசத்துக்குரிய சகோதரனாகக் கருதும் நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். இன்றுவரை அவர் இல்லாததை உணர்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்