இசையமைப்பாளர் சி.சத்யா இந்த வருடம் ரொம்ப பிசி.அவர் கைவசம் பத்துப் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்….
நான் இசையமைத்த ‘நாங்க ரொம்ப பிசி’ படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இயக்குநர் பத்ரியின் ‘ஆடுகிறான் கண்ணன்’ தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை. ‘நாங்க ரொம்ப பிசி’ படத்தின் மூலம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து வேலை செய்தோம். படத்தில் இரண்டு பாடல்கள், ஒன்று கானா பாடல் இன்னொன்று மூட் சாங். இரண்டும் நன்றாக அமைந்திருந்தன.
இந்தப் படம் தொடங்கி நாற்பத்தைந்து நாட்களில் படம் வெளியாகிவிட்டது. முதலி லேயே பின்னணி இசைக்கு ஒரு வாரம்தான் நேரம் என்று சொல்லி விட்டார்கள். நகைச் சுவைப் படம் என்பதால் படம் நெடுக பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பு இருந்தது. அதனால் லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வைத்து பின்னணி சேர்க்கத் திட்டமிட்டு அதற்கு தயாராக இருந்தேன். பத்து நாட்களுக்குள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுத்தேன். அவ்வளவு நாட்களும் தூங்காமல் இரவு பகலாக வேலை செய்தோம்.
இந்தப் படம், நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியானதால் அதிகம் பேர் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் குறைவாகவே இருந்தது. திரை யரங்குகளில் படம் வெளியானால்தான் என் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது கவனம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது, த்ரிஷா நடிப்பில் லைகா தயாரிப்பில் சரவணன் இயக்கியுள்ள ‘ராங்கி’ தயாராகி விட்டது. எழில் , ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘தீதும் நன்றும்’, ஆரி நடித்துள்ள ‘அலேகா’, ‘அரண்மனை- 3’ ஆகியன இருக்கின்றன.
‘ராங்கி’ படத்தின் பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது. ‘அரண்மனை- 3’ படத்தில், சுந்தர் சி படங்களில் இடம்பெறும் கொண்டாட்டமான பாடல்கள் மற்றும் மாஸ் பாடல்கள் இருக்கும். மெலடி பாடலும் இருக்கிறது. மொத்தம் ஐந்து பாடல்கள். மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன.
‘ஆயிரம் ஜென்மங்கள்’, எழில் படம் என்பதால் வேலை செய்கிறோம் என்கிற எண்ண மில்லாமல் குடும்பத்தில் ஒருவரோடு பேசிக்கொண்டிருப்பது போல் பேசிப் பாடல்கள் உருவாக்கினோம். ஒவ்வொரு பாடலுக்கும் ‘சூப்பர் ப்ரோ, கலக்கிட்டீங்க ப்ரோ’ என்று ஜீ.வி. மெசேஜ் அனுப்பினார்.
கொரோனா காலத்தில் கொரோனா என்ற சொல்லைச் சொல்லாமலே ‘விழித்திரு தனித்திரு’ என்கிற பாடலை உருவாக்கினேன். அஜீத் பிறந்த நாளுக்காக ஒரு பாடல், பெண் காவலர்களுக்காக ஒரு பாடல் ஆகியன உருவாக்கினேன். இன்னும் சில பாடல் கள் தயாராக இருக்கின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். அமேசான் இணையத்தில் பிரபல பாடல்களின் ரீமிக்ஸ் தொடர் போல் வெளியிடவிருக்கிறார்கள். அதற்காக எம்ஜிஆர் நடிப்பில் கேவிமகாதேவன் இசையில் எஸ்பிபி பாடிய முதல்பாடலான ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை கெடுக்காமல் ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். அது வெளியாகும்போது பெரிய வரவேற்பு இருக்கும்.
2021 ஆம் ஆண்டின் திரைப்பாடல்கள் மற்றும் தனிப்பாடல் தொகுப்புகளில் சத்யாவின் பங்கு பெரிதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.