பிரபாஸ் & தீபிகா படுகோனேவுடன் இணைந்தார் அமிதாப்பச்சன்!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனேவுடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

முன்னணி தென்னிந்திய தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், இந்திய மொழிகளில் ஏராளமான மறக்க முடியாத படங்களை உருவாக்கியதுடன், தெலுங்கு சினிமாவின் மகிமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியுள்ளது.

அதன் சமீபத்திய படைப்பான, புகழ்பெற்ற நடிகை சாவித்திரியின் கதையான, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற  ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு பிறகு, வரவிருக்கும் அடுத்த படம் வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிறுவனருமான அஸ்வினி தத்தின் கனவுப் படமாகும்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாகவும், இந்தியாவின் நாயகியான தீபிகா படுகோனே நாயகியாகவும் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தில் இருக்கும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் நடிக்கவிருக்கிறார் என்று இந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பல புகழ் பெற்ற திரைப்பட கலைஞர்கள் இணையவிருக்கும் இத்திரைப்படத்தை பிரபல திரைப்பட இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கவிருக்கிறார்.

இன்றைய இந்திய சினிமாவின் ஜாம்பவான்களான அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட கனவு நடிகர்களுடன், சினிமா ஜாலக்காரர் நாஜ் அஷ்வின் (நடிகையர் திலகம் புகழ்) இயக்கும் இப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

இப்படம் 2022-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.