கண்ணீர் வரவழைக்கும் யேசுதாஸ் வாழ்க்கைக் கதை!

உலகில் மிக அதிகமாக பாடல்கள் பதிவு செய்யப்பட்ட பாடகர்களில் ஒருவர் யேசுதாஸாகும். கடந்த 48 வருடங்களில் நாற்பதாயிரத் துக்கும் மேற்பட்ட அவரது பாடலகள் பதிவாகியுள்ளது. ஏழு முறை தேசிய விருதுகளையும், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரளாவின் 16 மாநில அரசு விருதுகள் உட்பட மொத்தம் 34 மாநில அரசு விருதுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்பாடல்களிலும் பக்திப்பாடல்களிலும் ஒரு உச்ச்நட்சத்திரமாக மாரிய பின்னர் யேசுதாஸ் தன்னை ஒரு கர்நாடக சங்கீதப் பாடகராகவும் முன் நிறுத்தினார். பல்வேறு கர்நாடக இசைக்கச்சேரிகளை உலகமெங்கும் நிகழ்த்தினார். இப்போதும் அவரது கச்சேரிகள் நிகழ்கின்றன. கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்க முயன்றவர்களில் முதலிடத்தில் இருப்பது யேசுதாஸே என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். அவரது பக்திப்பாடல்கள் இதயத்தை உருகவைப்பவை என பல பக்தர்கள் கருதுகிறார்கள். வயதையும் காலத்தையும் கடந்த, என்றும் இனிமையான பாடகராகவே அவரை அவரது பெரும்பாலான ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

அதனால் அவர் குறித்து இங்கே கொடுத்திருப்பது கொஞ்சம் நீளமான பதிவுதான் .. ஆனால் உண்மைச் செய்தியுடன் சுவைமிக்கது.அதனால் பொறுமையாக முழுவதும் படித்து இன்று 80வது பர்த் டே கொண்டாடும் யேசுதாஸூக்கு விஷ் பண்ணுங்க!

மலையாள சினிமா துளிர்விட்டு வந்த 1940களின் கடைசியில் கடலால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சி பகுதியில் கட்டச்சேரி அகஸ்டின் ஜோசப் என்ற ஒரு பாடக நடிகர் இருந்தார். நாடகங்களில் சிறப்பாக பாடி நடிக்கும் திறன் கொண்டவராகவும் பொலிவான தோற்றமுடையவராகவும் இருந்தார் அவர். சினிமாவில் பாடி நடித்து திரையுலகின் ஒரு பிரபல நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவர். 1950 களின் முதல் பகுதியில் சினிமாவில் பாடவும் நடிக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் திரையுலகில் எந்த வெற்றியும் அவருக்குக் கிடைக்கவில்லை. விரைவில் பாடி நடிக்கும் நடிகர்களின் தேவையே இல்லாத காலமும் வந்தது. ஐந்து குழந்தைகளுடன் மிகவும் சிரமம் நிறைந்த வாழ்கையை வாழ்ந்தார். அவருடைய முதலாவது மகனாக1940ல் பிறந்த கட்டச்சேரி ஜோஸப் யேசுதாஸ் என்பவரே பிறகு கே.ஜே.யேசுதாஸ் என்றழைக்கப்பட்டார்.

தனது மகனின் ஐந்தாவது வயதிலேயே அவனுடைய பாடும் திறமையை அறிந்து கொண்ட அகஸ்டின் ஜோஸப், இசையின் ஆரம்ப பாடங்களைக் அவனுக்கு கற்றுக் கொடுத்தார். அவனது தனித்துவமான திறமையை உணர்ந்து கொண்ட அவர் தன்னால் அடையமுடியாத இடத்தை தன் மகன் பெறவேண்டுமென்ற எண்ந்த்தோடு அவனுக்கு இசைப் பயிற்சிகளை வழங்கினார். பள்ளியிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் எல்லாம் நடந்த பாடல் போட்டிகளில் அவரது மகனே சிறந்த பாடகனாக தேர்ந்தேடுக்கப்பட்டான். ஆனால் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு கர்நாடக இசையை கற்றுக்கொள்ள முயல்வதாக எல்லோராலும் பரிகசிக்கப்பட்டான் அவன்.

மிகுந்த ஏழ்மையிலேயே வளர்ந்தார் யேசுதாஸ். இசைப்படிப்புக்கான கட்டணம் செலுத்த முடியாததால் பல்வேறு இசைப்பள்ளி களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் பின்னர் குறிப்பிட்டிருக் கிறார். ஆயினும் இசைப் பள்ளிகளில் சாதனையான மதிப்பெண் களுடனும் இரட்டைத் தகுதி உயர்வுகளுடனும் தனது இசைப் பாடங்களை கற்றுத்தேர்ந்தார். உயர்கல்விக்காக திருவனந்த்தபுரத் தில் உள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் மிகவிருப்பமான மாணவராக அவர் திகழ்ந்தார் என கூறப்படுகிறது. ஆனால் அவரது தந்தையால் கல்விச்செலவுகளை வழங்க இயலாததால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். திருவனந்தபுரத்தில் தங்கும் வசதி இல்லாததால் செம்மாங்குடியின் வீட்டின் கார் கொட்டகையில் மாதக்கணக்கில் படுத்துறங்கியதாக யேசுதாஸ் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

குழாய் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு வாய்ப்புக்கள் தேடி சென்னையில் கணக்கில்லாத மைல்கள் நடந்து திரிந்ததையும் திறமையில்லாதவர் என பல இசையமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டதையும் பதிவு செய்திருக்கிறார். திருவனந்தபுரம் ஆல் இந்தியா ரேடியோ அவரது குரலை ஒலிபரப்புக்கு தகுதியில்லாதது என நிராகரித்தது. கடைசியில் ஒருவழியாக 1962ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ஆண்டனி தனது ‘கால்ப்பாடுகள்’ என்ற படத்தில் ஒரு சுலோகத்தின் நான்கு வரிகளைப் பாட வாய்ப்பளித்தார். இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைத்த அப்படத்தின் முக்கிய பாடகர் கே.பி.உதயபானு. யேசுதாஸின் வசீகரக் குரலைக் கவனித்த எம்.பி.ஸ்ரீனிவாசன் அப்படத்திலேயே ஒரு டூயட் பாடலையும் அவரைப் பாடவைத்தார். யேசுதாஸின் குரல் சினிமா வட்டாரங்களில் உடனடியாக பேசப்பட்டது. அதே வருடத்திலேயே மேலும் 7 படங்களில் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது! தனது மகன் வெற்றிப்பயணத்தை தொடங்கியிருப்பது பார்த்துவிட்டு 1964ல் காலமானார் அகஸ்டின் ஜோசப்.

ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் பாடியிருந்தாலும் மலையாளத்துக்கு அடுத்தபடியாக தமிழில் தான் யேசுதாஸ் நட்சத்திரப் பாடகராக மாறினார். ஆனால் மலையாளத்தைப்போல அவ்வளவு எளிதாக அவர் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.1963 ஆம் ஆண்டில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கி இசையமைத்த ‘பொம்மை’ என்ற படத்தில்தான் முதன் முதலாக தமிழில் பாடும் வாய்ப்புக் அவருக்குக் கிடைத்தது. ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடல். அடுத்த தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைக்க மேலும் ஒரு வருடம் காத்திருக்க நேர்ந்தது. ‘காதலிக்க நேரமில்லை’ (1964) படத்தில் ‘என்ன பார்வை உந்தன் பார்வை’ என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார். அடுத்த பத்தாண்டுகள் தமிழில் சிறப்பான பாடல்கள் ஏதும் இல்லாமல் சென்றது யேசுதாஸுக்கு. ஆனால் இது தான் மலையாளத்தில் யேசுதாஸ் உச்சமான படைப்பூக்கத்துடன் பாடிய காலகட்டம்.

பின்னர் எம் ஜி ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் (1973) படத்தில் ‘தங்கத் தோணியிலே’ பாடலைப் பாடியினார். ஆனால் எம் ஜி ஆரின் ‘விழியே கதையெழுது’ (உரிமைக்குரல்-1974) பாடல்தான் யேசுதாஸின் பெரிதும் ரசிக்கப்பட்ட முதல் தமிழ் பாடல். அதன் பின்னர் எம் ஜி ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க (1975) படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடும் வாய்ப்பும் யெசுதாஸுக்கு கிடைத்தது. அதில் “போய்வா நதியலையே”, “ஒன்றே குலமென்று பாடுவோம்”, போன்ற வெற்றிபெற்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் “என்னை விட்டால் யாருமில்லை” (நாளை நமதே -1975), “இந்த பச்சைக் கிளிக்கொரு” (நீதிக்கு தலைவணங்கு -1976) போன்ற பாடல்களையும் எம் ஜி ஆரின் நடிப்பில் பாடினார் யேசுதாஸ். சிவாஜி நடித்த படங்களிலும் பல வெற்றிப் பாடல்களை பாடினார் . ‘மலரே குறிஞ்சி மலரே” (டாக்டர் சிவா), கங்கை யமுனை இங்குதான் சங்கமம்” (இமயம்) போன்றவை உதாரணம். ஆனால் இதை எல்லாம் விட ‘அவள் ஒரு தொடர்கதை’ (1978) படத்தில் இடம்பெற்ற “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு” பாடல் தான் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.

இளையராஜா தொடர்ந்து யேசுதாசுக்கு வாய்ப்புகள் வழங்கி வந்தார். பெரும் வெற்றிபெற்ற ‘பூவே செம்பூவே’, ‘ஆராரிரோ பாடியதாரோ’, ‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘கண்ணே கலைமானே’, ‘பூங்காற்று புதிதானது’, ‘வெள்ளைப்புறா ஒன்று’ எனபல இளையராஜாப் பாடல்கள் யேசுதாஸின் குரலில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது. தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை எட்டு முறை வென்றிருக்கிறார் யேசுதாஸ். ‘அதிசய ராகம்’ (அபூர்வ ராகங்கள்), ‘செந்தாழம் பூவில்’ (முள்ளும் மலரும்), ‘கல்யாண தேனிலா’ (மௌனம் சம்மதம்), ‘உன்னிடம் மயங்குகிறேன்’ (தேன் சிந்துதே வானம்) போன்று வெகுசிறப்பாக ரசிக்கப்பட்ட யேசுதாஸ் பாடல்களின் வரிசை நீளமானது.