நேர் கொண்ட பார்வை – பட விமர்சனம்!

தேசபக்தி, ரவுடிகள் ஒழிப்பு,அரசியல் என்ட்ரி அடிதடிகள் மட்டுமே செய்துகொண்டிருந்த நம் மாஸ் ஹீரோக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வேறுமாதிரியான சமூக அக்கறை வர ஆரம்பித்திருக்கிறது. இயற்கை விவசாயம், தண்ணீர் பாதுகாப்பு, கார்பரேட் ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், ஏரிகள் பாதுகாப்பு என அது வளர்ந்து கிட்டத்தட்ட மாஸ் ஹீரோக்களின் திரைக்கதைகள் எல்லாம் மார்க்ஸிய மேனிஃபெஸ்டோவாக மலரத்தொடங்கி விட்டன. அந்தப்பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது பெண்கள் பாதுகாப்பு.

விஜய் (தெறி), விஷால் (அயோக்யா), ஜெயம்ரவி(அடங்கமறு) தொடங்கி அதர்வா(100) கௌதம்கார்த்திக் (தேவராட்டம்).. என மாஸ் நடிகர்களில் பாதிப்பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களை பாதுகாத்து விட்டார்கள். ஏராளமான ரேப்பிஸ்டுகளை போட்டுத் தள்ளிவிட்டார்கள். குறைந்த பட்சம் வெள்ளித்திரையிலாவது அயோக்கியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினாலும் தர்மத்தின் தராசிலிருந்து தப்பமுடியாது என்கிற உத்திரவாதத்தை வழங்கிவிட்டார்கள்.

இப்படி ஒரு காலகட்டத்தில்தான் அஜித் தன் பங்குக்கு பெண்களை காக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால் இது முந்தைய மாஸ் ஹீரோ படங்களைப்போன்ற `தர்மல் இன்றே போட்டுத்தள்ளும்’ பாணி கொலமாஸ் படமல்ல. மாறாக தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வ்வ்…. என நிதானமாக நீதிமன்றபடியேறி நீதியை பெற்றுத்தருகிற படம்.

இன்னொரு முரண்பாடு ஒன்றும் இருக்கிறது. முந்தைய அத்தனை ஹீரோக்களும் காப்பது யாரை? ஒரே ஒரு காதலனோடு… குடிக்காமல், பப்புக்கு போகாமல்… தனியாக வீடெடுத்து வாழாமல்… துப்பட்டா அணிந்த… புனிதப்படுத்தப்பட்ட பெண்களை மட்டுமே… ஆனால் அஜித் அதற்கு நேர்மாறாக இந்த அத்தனை புனிதங்களையும் உடைத்துவிட்டு வாழ்கிற சமூகத்தால் வெறுப்புநோக்கில் பார்க்கப்படுகிற பெண்களை காக்கிறார். இங்குதான் `நேர்கொண்ட பார்வை’ மற்ற பெண்கள் பாதுகாப்பு படங்களில் இருந்து தனித்து நிற்கிறது. அநீதி என்பது யாருக்கு நடந்தாலும் அது அநீதிதான் என்பதை உரத்து சொல்கிறது.

பொள்ளாச்சி சம்பவத்தின் போது சிலர் முக்கியமான விமர்சனங்களை பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே வைத்தார்கள். அந்தப் பெண்கள் அங்கு சென்றதால்தானே அப்படி நடந்தது. ஒழுக்கமாக இருந்திருந்தால் நடந்திருக்குமா என்பதாக இருந்தது. Victim shaming நமக்கு புதிதல்ல. உண்மையில் பாலியல் ரீதியில் படமெடுத்து மிரட்டுகிற அத்தனை பேருக்கும் இந்த விக்டின் ஷேமிங்தான் ரகசிய ஆயுதம். சமூகத்தின் இந்த ஷேமிங் நாக்குகளுக்கு அஞ்சிதான் பெண்கள் மிரட்டல்களில் சிக்கிக்கொள்வது. நேர்கொண்ட பார்வை நம் Victim shaming mentalityக்கு எதிராகத்தான் பேசுகிறது.

அஜித் ஒரு காட்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணோடு பூங்காவில் நடந்துசெல்ல.. அந்தப்பெண் வெளியே தலைகாட்ட அஞ்சி தன் Hoodieயால் முகத்தை மறைத்துக்கொள்வார். அஜித் கோபமாக அதைத் தட்டிவிடுவார். அவனுகளுக்கே வெட்கமில்லை நீ ஏன் முகத்தை மூடணும் என்பதாக அந்தகாட்சி பார்க்கிற எல்லோருக்குமே புரியும். இது படத்தில் வருகிற மிகமிகமுக்கியமான காட்சி.

அடுத்து நே.கொ.பா பிரதானமாகப் பேசுவது சம்மதமில்லாமல் நடக்கிற பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்கள். இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான திருமணங்கள்தான் இதன் தொடக்கப்புள்ளி. கணவன் என்கிற அதிகாரத்தால் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதில் தொடங்கி நான் காசு கொடுத்துவிட்டேன் இவள் விபச்சாரி என்று துன்புறுத்துவது வரை அத்தனையும் தவறு என உடைத்துப்பேசுகிறது நே.கோ.பா. சம்மதமில்லாத எல்லா பாலியல் உறவும் குற்றம்தான் என்கிறது.

அஜித் போன்ற ஒரு பெரிய ஹீரோ மூலமாக இந்த ‘நோ மீன்ஸ் நோ’ என்கிற வசனத்தை பேசவைப்பது அத்தனை சுலபமில்லை. அதிலும் Patriarchal மனோபாவம் கொண்ட பெரிய இளைஞர் கூட்டத்துக்கு முன்னால் இப்படிப்பட்ட இத்தகைய வசனம் பேசி நடித்திருப்பதை எவ்வளவு வேண்டுமென்றாலும் பாராட்டலாம். காரணம் தமிழ்சினிமா வரலாறு அப்படி. இங்கே மாஸ் என்பதே பெண்களுக்கான ரூல் புக் எழுதுதல்தான். `இப்படிதான் இருக்கவேண்டும் பொம்பள’ எம்ஜிஆரில் தொடங்கி… பொம்பளை பொம்பளயா இருக்கணும்… ரஜினி வழி… அடிடா அவள வெட்றா அவள… தனுஷ் சிம்பு வரைக்குமாக நம் மாஸ் ஹீரோக்கள் நிறையவே விதிமுறை நூல்களை எழுதியிருக்கிறார்கள். அஜித்தும் அதற்கு விதிவிலக்கல்ல… அஜித் மூலமாக இந்தப்படம் அந்த மாஸ் ஹீரோக்களின் ரூல்புக்கைதாதன் போட்டு எரிக்கிறது. ஆணாதிக்க விதிமுறைகளின் சாம்பல்களில் ஆண்களுக்கான விதிமுறைகளை எழுதுகிறது. இதுதான் விஷத்தை விஷத்தால் முறித்தல்.

இந்தப் படத்தில் அஜித் பேசிய வசனங்களில் 90 சதவீத வாக்கியங்களில் தமிழ் ரசிகர்களுக்கு உடன்பாடு இருக்காது. சில திரையரங்குகளில் ரங்கராஜ் பாண்டேவின் வசனங்களுக்கு சிலர் கைதட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆணாதிக்க சமூகத்தில் அப்படிப்பட்ட எதிர்வினைகள் சகஜம்தான். இதையெல்லாம் தாண்டியும் ஒரு சின்ன தீப்பொறியை, அலையை நே.கொ.பா உருவாக்கும் என்று நிச்சயம் நம்பலாம். அதற்கு காரணம் அஜித். இதே படத்தில் வேறு எந்த நடிகர் செய்திருந்தாலும் காமெடியாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். நகைப்புக்குள்ளாகி இருக்கும்.

அஜித் நிச்சயம் தன் சமூக பொறுப்பை உணர்ந்த நடிகராகவே தெரிகிறார். அவருக்கு பாராட்டுகள்.

அதிஷா வினோத்