பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை. யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான். சொல்லிக் கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறு விதமாகத்தான் பார்க்கிறது.
கல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும் பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம். ஒரு தேசம் அது. அவர்கள் அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். செடிகளும் மரங்களும் ஒரே நிலத்தில் ஒன்று கூடி வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய்ப் பழகும் நட்பையும் உருவாக்குகிறது, எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும் பகையும் வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம் தான் மயூரன்” என்றார்
இதனிடையே படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார்.
கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம்.
கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.