இந்த சினிமா எத்துனையோ தயாரிப்பாளர்களை அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறது. இங்கே எவருக்கும் நிரந்தர உயரமில்லை என்பதைத் தெரிந்தே களமாடுவோர் பலர்.. இப்போது தன் கம்பெனி பெயர் மற்றும் பட்ஜெட்–டை மிகைப்படுத்தி பிரமாண்ட படம் என்று போடுவது பேஷனாகி விட்டது.. ஆனால் நம் தமிழ் திரையுலகில் முதன் முறையாக ஒரு தயாரிப்பாளர் படத்தின் புரமோசன்களில் தன் படத்தை போட்டுக் கொண்டது முதன் முதலில் இவர்தான். சிரித்தபடி மீசையில் கை வைத்திருக்கும் இவர் படத்தைப் பார்த்த உடனேயே சொல்லிவிடலாம் இது பிரமாண்ட படம் என்று.அது மட்டுமல்ல, தான் தயாரித்த ஜெண்டில்மேன் என்ற படத்தின் பெயரையே தனது பெயரின் அடையாளமாகவும் வைத்துக் கொண்டவர். ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் என்றே பின்னாளில் அழைக்கப்பட்டார். அவர் வளர்ந்த , வீழ்ந்த கதை குறித்து முன்னரே நம் ஆந்தை சினிமா குரூப்-பில் கட்டிங் கண்ணையா விரிவான ரிப்போர்ட் கொடுத்துள்ளது நினைவிருக்கும்
நம் சக நிருபர் ஒருவர் சொன்னது போல் திரைப்படம், ஒரு படம் கப்பலோடு ஒப்பிடப்படும்போது இயக்குநர் என்பவரை நாம் அந்த கப்பலின் கேப்டன் என்று குறிப்பிடுகிறோம். அதே சமயம் அந்த கப்பலை செலுத்த பயன்படும் எரிபொருளாக செயல்படுபவர் தான் அந்த படத்தின் தயாரிப்பாளர். அந்த வரிசையில் 1985ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான Ee Thanalil Ithiri Nerum என்ற படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் பிரபல தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன். பல மலையாள படங்களை தயாரித்த இவர் தமிழில் தயாரித்த முதல் படம் சுப்பீரிம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான வசந்தகால பறவை. பிரமாண்ட இயக்குநர் சங்கர் அவர்களின் முதல் படமான ஜென்டில் மேன் திரைப்படம் இவர் தயாரிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இவருடைய தயாரிப்பில் உருவானது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் மற்றும் ரம்பா நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான என்றென்றும் காதல் என்ற படத்திற்கு பிறகு இவர் பட தயாரிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பயணத்தை தொடங்க உள்ளார் குஞ்சுமோன் அவர்கள். ஜென்டில் மேன் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் அவர் மீண்டும் களமிறங்குகிறார். அது குறித்த குஞ்சுமோன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இது குறித்து மேலும் கூறும்போது..
ஜென்டில்மேன் தமிழ் , தெலுங்கு, மொழிகளில் மெகா ஹிட் ஆக்கினார்கள் மக்கள். இந்திய மற்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட்டமாக வரவேற்றார்கள்.
ஜென்டில்மேன் படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டம் ஜென்டில்மேன்-2 வில் காணலாம். நவீன தொழில் நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்படும்.
நடிகர், நடிகை மற்றும், தொழில் நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஜென்டில் மேன்-2 பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளி வரும். இந்த திரைப்படம் முதலில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான பிறகு தான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.