புறா பந்தயத்தை மையமாகக் கொண்டு தயாரான ‘பைரி’

நம்ம தமிழ்நாட்டிலே ஜல்லிக்கட்டு, ஆந்திராவிலே சேவல் சண்டை, கர்நாடகவிலே ரேக்ளா ரேஸ் என்று பண்டிகை காலங்கள் போட்டிகளால் களைகட்டும். இவைகளுக்கிடையே நம்ம குமரி மாவட்டத்தில் வெயிலும் இல்லாத மழையும் இல்லாத தென்மேற்கு பருவக்காற்று காலம்தான் விசேஷம். காரணம், புறா பந்தயம்! இந்த சீசன் வந்துவிட்டால் போதும்… இளைஞர்கள் தங்கள் புறாக்களை தயார் செய்து கொண்டு, நாகர்கோவிலிலிருந்து விஜயவாடா, கடப்பா, ஓங்கோல் என்று ஆந்திர நகரங்களுக்கு ரயிலேறி விடுவார்கள். அங்கு புறாவை பறக்கவிட்டுவிட்டு வந்தால், மறுநாள் இவர்கள் வருவதற்குள் புறா வீட்டுக்கு வந்திருக்கும். எத்தனை மணி நேரத்திற்குள் வந்தது என்பதுதான் போட்டி. பணம், கோப்பை என பரிசுகள் குவியும்!

இப்படியான பந்தய புறாக்களில் ஹோமர், டிப்ளேர், மேய்ச்சல், ஃபேஷன்னு 4 வகை இருக்கிறது. ஹோமர், டிப்ளர் இரண்டையும்தான் போட்டிகளுக்காக வளர்க்க முடியும். ஹோமர் வெகு தூரம் பறக்கும். மணிக்கு 155 கி.மீ. வேகம் இதுக்கு உண்டு. அந்தக் காலத்துல மன்னர்கள் தூது விட்ட தெல்லாம் இந்தப் புறாக்களைத்தான். வேட்டைக்குப் போற மன்னர்கள் புறாவையும் கூட கொண்டு போவார்கள். நடுக்காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது ஏதாவது உதவி தேவைப் பட்டால், அதோட கால்ல ஒரு ஓலை கட்டிப் பறக்க விடுவாராம். அது நேரா அரண்மனைக்குப் போயிடும். அதே டெக்னாலஜிதான் இன்னைக்கு வரைக்கும் போட்டிகளில் தொடர்கிறது.

இப்படியாப் பட்ட புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது ”பைரி“.

குமரி மாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே ‘’பைரி’’.

” நாளைய இயக்குநர் சீஸன் 5 ”-ல் கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ’’ நெடுஞ் சாலை நாய்கள் ‘’ என்ற குறும் படத்திற்காக சீஸன் 5-ன் ’’ சிறந்த வசனகர்த்தா ‘’ விருது பெற்ற ’’ ஜான் கிளாடி’’ இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் திரு. சஞ்சீவ்,’’ மற்றும் சில இயக்குநர் களிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். மேலும்  கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று ’’ நாளைய இயக்குநர் சீஸன் 3 ‘’ – ல் முதல் பரிசு வென்ற  “ புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் ‘’ உட்பட பல குறும்படங்களை, நண்பர்களின் வளர்ச்சிக்காக தயாரித்து, 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத் , இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக, மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன், நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங் களில் விஜி சேகர், SR.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகர்கோவில் நகரைச் சார்ந்த 50-க்கும் மேற் பட்டவர்கள் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஏ.வி. வசந்த், படத்தொகுப்பு – R.S சதீஸ் குமார், இசை – அருண் ராஜ், பாடல்கள் – பிரான்சிஸ் கிருபா, கவித்ரன். ஆக்‌ஷன் – விக்கி, ஒலிப்பதிவு – ராஜா. நடனம் – சிவ கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன், விசு. பி.ஆர்.ஓ.– சக்தி சரவணன். இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு, நாகர்கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேகமாக நடந்து வருகிறது.