அக்னி தேவி – விமர்சனம்!

சில சினிமாக்களில் கதையே இருக்காது.. சில சினிமாக்களில் சொல்லும் கதை புரியாது, சில சினிமாக்களில் நமக்கு தெரிந்த கதையை சொல்லி இருப்பார்கள் இல்லையா? அந்த டைப்பிலான கதை கொண்ட படம்தான் , ‘அக்னிதேவி’. நம்மில் பலரும் மறக்க முடியாத நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை., கருப்பு பணம், மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு, கண்டெய்னர் விவகாரம், நேர்மையான போலீஸ் ஆபீசர் (பொன்.மாணிக்கவேல்?)., அடாவடி அமைச்சர் (சசிகலா?) ஆகியோரை மனதில் கொண்டு பின்னி பிசையப் பட்ட கதைதான் இது.

அதாவது நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இவரின் காதலி ஒரு நியூஸ் ரீடர் (ரம்யா நம்பீசன்) வற்புறுத்தலின் பேரில் ஒரு எக்ஸ்குளூசிவ் இண்டர்வியூ எடுக்க வரும் லேடி நிருபர், பஸ் ஸ்டாண்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதோடு, அவரது அண்ணனும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

இந்த வழக்கை நேரடியாக பாபி சிம்ஹா விசாரிக்க, அவருக்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதோடு, கொலை நடந்த போது பேருந்து நிலையத்தில் இருந்த அப்பாவி ஒருவரை குற்றவாளியாக்கமுயற்சிக்கிறார்கள். இதனிடையே,நடந்த கொலைகளுக்கு பின்னாள் இருக்கும் மர்மத்தை கண்டறியும் பாபி சிம்ஹா, இத்தனை சம்பவத்திலும் மாநில அமைச்சரான மதுபாலா உத்தரவின் பேரில், ஒட்டு மொத்த போலீஸூம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். பிறகென்ன? போலீசும், அமைச்சரும் நீயா? நானா? என்று சவடால் விட்டு மோதுவதுதான் கதை.

முன்னரே சொன்னது போல் கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து சுவையாக கொடுக்க முயன்று பாதிக் கிணறுதான் தாண்டியிருக்கிறார்கள். இந்த படத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நடித்தேன், என்று பாபி சிம்ஹா கூறியிருக்கிறார். ஆனால், படம் முழுவதுமே அவர்தான் வருகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் டூப் போட்டு எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு டப்பிங் மட்டும் மூனு பேருக்கு மேல் பேசி இருப்பார்கள் போல்.. ஒட்டவே இல்லை.

வில்லியாக நடித்திருக்கும் அந்த கால மதுபாலாவின் கெட்டப்பும் உச்சரிப்பும் நம்மூரில் சின்னமாவாக வலம் வந்த ஒருவரை நினைவுப்படுத்துகிறது. ஆரம்ப காட்சியில் ஆக்ரோஷமாகவும், அமர்க்களமாகவும் எண்ட்ரிகொடுக்கும் மதுபாலா, அடுத்தடுத்த காட்சிகளில் தனது ஓவர் ஆக்டிங் நடிப்பால், அந்த கதாபாத்திரத்தையே சிதைத்து விடுகிறார். அதிலும், அவரது உடலில் இருக்கும் குறைபாடுகள் தேவையா? என கேள்வி எழுப்பும் வகையில், ஒட்டாமல் போகிறது. எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா நம்பீசன், சதீஷ், லிவிங்ஸ்டன் என்று பிற நடிகர்கள் படத்தில் இருந்தாலும், சதீஷ் மட்டுமே அதிகமான காட்சிகளில் வருகிறார். அம்புட்டுத்தான் ரம்யா நம்பீசன் நியூஸ்ரீடர் ரோலில் எதற்கு இந்த படத்தில் நடித்தாரோ, அம்மணிக்கு சுத்தமாக வேலை இல்லை.

படத்தின் ஓட்டத்திற்கு பாடல் தேவை இல்லை என்பதால், படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. அதனால், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பீஜாய், பின்னணி இசைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அது படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது. ஜனாவின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களமாக உள்ளது.

மொத்தத்தில் அக்னிதேவி படத்தில் அவ்வளவாக ஃபயர் இல்லை