பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார். சாதீய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா ’ ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள். ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.