கிட்டத்தட்ட 35 வருடங்களாக கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவர். சுமார் 40 வருஷத்தில் கிட்டத்தட்ட 150 படங்கள் நடித்து முடித்து விட்டவர். அப்பேர் பட்ட ஒரு நாயகனின் அது எது எது -வை கொடுத்தால் யாருக்குப் பிடிக்கும் என்பதை உணர்ந்த ஒரு ரசிகன் இயக்குநராக வழங்கியுள்ள படைப்புதான் ‘பேட்ட’. ஆனால் பழைய ரஜினியைப் பார்க்க அவரின் பழைய படங்களைப் பார்த்தால் போதும் என்பதையும் ரஜினியிஸம் என்ற அவர் ஸ்டைல் களை காட்ட மெனக்கெட்ட ரசிகக் குஞ்சு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம்தான் பேட்ட.
படத்தின் கதை என்ன?
ஹலோ இது ரஜினி படம்
படத்தில் யார் யாரெல்லாம் நடித்து இருக்கிறார்கள்?
ஹலோ இது ரஜினி படம்
கேமரா யாரு? எப்படி இருக்குது?
ஹலோ இது ரஜினி படம்
ஹீரோயின் உண்டு இல்லையா?
ஹலோ இது ரஜினி படம்
படத்தின் ஸ்பெஷல் என்ன?
ஹலோ இது ரஜினி படம்
இப்படி எல்லா அல்லது எந்த கேள்வி கேட்டாலும் ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தை சொல்லியே மூன்று மணி நேரம் ரீல் ஓட்டுகிறார்கள்..
தற்போது சினிமாவைத் தாண்டி சோஷியல் மீடியாக்கள் மூலம் புதுப் புது ஹீரோக்கள் உருவாகி சூழலில் கடந்த நாலைந்து படங்களில் சோபிக்காமல் போய் விட்ட ரஜினி இனி கதையை நம்பி பலனில்லை, எஸ் பி எம் டைப் மசாலாவைத்தான் தன்னிடம் தற்போது ரசிகர்கள் எதிர் பார்க்கிறார் கள் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். ஆம் படம் நெடுக்க. அந்த கால விக்-கை வைத்துக் கொண்டு தலையிலேயே கை படாமல் கோதி விட்டப்படி, அதிரடியான நடையுடன், அப்பப்போ பஞ்ச் டயலாக், இடையிடையே பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள், அதிலும் துப்பாக்கிச் சூடு, அரிவாள் வீச்சு, ரத்த மயம் என தொடக்கம் முதல் எண்ட் கார்ட் வரை ஓம் ரஜினியாய நமஹ என்ற ஆலாபனைதான் இந்த பேட்ட..
இந்தப் பேட்ட படத்தைப் பற்றி வழக்கம் போல் அது சரியில்ல்லை.. இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் வரும் விமர்சனங்களை ஓரங்கட்டி விட்டு ஒரு பொழுது போக்கு சினிமாவை தியேட்டருக்கு போய் பார்க்க விரும்புவர்கள் சகலரும் பார்க்கத்தகுந்த படமிது என்பது தான் நிஜம்