“பெரிய சந்தோசம் என்ன வென்றால்..?” – குணச்சித்திர நடிகர் சு.செந்தில்குமரன் பேட்டி

பத்திரிக்கையாளர் , திரைப்பட இணை இயக்குநர் , பாடலாசிரியர் என்று பல துறைகளில் போராடிய சு. செந்தில் குமரன் ஒரு குணச்சித்திர நடிகராக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் .

 

அண்ணாதுரை படத்தின் மூலம் நல்ல குணச்சித்திர நடிகராக பலரின் கவனத்தை கவர்ந்த இவர், அண்மையில் வெளிவந்த திமிரு புடிச்சவன் படத்தில் அதே போன்ற நடிப்போடு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறார் . திரையில் பாடலும் பாடுகிறார் .

திமிரு புடிச்சவன் படத்தில் சண்டைக் காட்சியுடன் கூடிய அவரது சிறந்த நடிப்புக்காக அலெக்ரியா ஹாலிடே ரிசார்ட் விருது விழாவில் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது பெற்று இருக்கிறார் .

அவருடன் பத்திரிகையாளர் கணேஷ் குமார் தன் ஸ்டார்கட்சினிமா இணைய தளத்திற்காக  உரையாடிய பதிவு ..

விருது பெற்ற நிகழ்வு பற்றி சொல்லுங்கள் .

அலெக்ரியா ஹாலிடே ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் பல்துறைப் பிரபலங்களுக்காக விருதுகளை வழங்கும் விழா அது . அதில் திமிரு புடிச்சவன் படத்துக்காக என்னை சிறந்த குணச்சித்திர நடிகர் விருதுக்கு பரிந்துரைத்தது பத்திரிகைத் தொடர்பாளர் செல்வி பிரியா .

அது மட்டும்தான் எனக்கு ஆரம்பத்தில் தெரியும் . அங்கே போனபிறகுதான் தெரிந்தது என்னை தேர்ந்தெடுத்தது பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் , சண்டைப் பயிற்சி இயக்குனர் மற்றும் மிக முக்கியமாக தமிழின உணர்வாளரான ஜாகுவார் தங்கம் என்பது .

அது ஒரு இன்ப அதிர்ச்சி என்றால் இன்னொரு இன்ப அதிர்ச்சி திரைப்பட இயக்கத்தில் எனது குருநாதரான ஆர் வி உதயகுமார் அவர்கள்தான் எனக்கு விருது வழங்கப்போகிறார் என்பது .

அலெக்ரியா விருது பெற்றபோது…

விருது கொடுக்கையில் , ஜாகுவார் தங்கம் அவர்கள் திமிரு புடிச்சவன் படத்தில் நான் சண்டைக் காட்சியிலும் மிக சிறப்பாக நடித்து இருப்பதாக மனமாரப் பாராட்டினார் . நான் கூட விளையாட்டுக்கு , “மாஸ்டர் நீங்க பாராட்டும்போதுதான் நான் நல்ல சண்டை போட்டு நடிச்சிருக்கேன் என்று நானே ஒத்துக்கறேன் ” என்றேன் .

“இல்லை சார் எனக்கு தெரியாதா . ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க” என்று அழுத்தமாகப் பாராட்டினார .

எனது குருநாதர் இயக்குனர் ஆர் வி உதயகுமார் , ” செந்தில் என் கிட்ட உதவி இயக்குனரா இருந்தவன் . நல்ல திறமைசாலி . பி ஈ படிச்சிட்டு சினிமாவுக்கு வந்தவன் . இவன் சீக்கிரம் பெரிய டைரக்டர் ஆவான்னு நினைச்சேன் . ஏன் ஆகலை என்பது எனக்கே ஆச்சர்யம் . ஆனா நடிகன் ஆகி சிறந்த நடிகன் னு பேரும் வாங்கிட்டான் . அவன் டைரக்ஷனும் பண்ணனும் . நடிகராவும் டைரக்டராவும் இரண்டிலும் ஜொலிக்கணும் ” என்று வாழ்த்தினார் .

“நல்ல ஆக்ஷன் படம் பண்ணுங்க ” என்றார் ஜாகுவார் தங்கம், தனக்கே உரிய பாணியில் !

சிலிர்ப்புடன் நின்றேன் அந்த மேடையில் .

அண்ணாதுரை படத்தில் கதாநாயகியின் தந்தையாக சிறப்பாக நடித்ததற்காகவும் V4 அவார்ட்ஸ் வாங்கினீர்கள் அல்லவா? எப்படி கிடைத்தது அண்ணாதுரை படத்தில் நடிக்கும் வாய்ப்பு ?

அடிப்படையில் பி ஈ மெக்கானிக்கல் பட்டதாரியான நான் , கல்லூரியில் படிக்கும்போதே விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் சேர்ந்து நிருபர் ஆனேன் . ஆனால் அதற்கு முன்பிருந்தே எனக்கு சினிமா ஆர்வம் உண்டு .

சின்ன வயதில் அது நடிப்பு ஆர்வமாகவும் பின்னர் விவரம் தெரிந்த பிறகு டைரக்ஷன் ஆர்வமாகவும் மாறியது .

ஆக, சினிமாவுக்காக சென்னை வருவதற்கான வாய்ப்பை பத்திரிகை துறை வழங்கியது .

படிச்சுட்டு இருந்தப்போ , விகடன் மாணவ நிருபர் வாய்ப்புக்கு விண்ணப்பம் செஞ்சு தேர்வாகி , 1989 ஆம் ஆண்டு out standing reporter ஆக விருது பெற்று , சில வருஷம் எல்லா வித செய்திக் கட்டுரைகளும் எழுதி அப்படியே மெல்ல சினிமா செய்தி எழுத ஆரம்பித்தேன் . எல்லாரும் என்னை கிண்டலா பார்த்தாங்க. சிலர் தவறான நோக்கம் கற்பிச்சாங்க . ஆனா என் நோக்கம் சினிமா . அதை யாரும் புரிஞ்சுக்கல .

அதனால விகடன்ல இருந்துகிட்டே அசிஸ்டன்ட் டைரக்டர் வாய்ப்புத் தேடினா தப்பா பேசிடுவாங்கன்னு 1993 ல விகடனை விட்டு வெளியே வந்து ஆர் வி உதயகுமாருக்கு அசிஸ்டன்ட் டைரக்டரா போனேன் .

உதவி இயக்குனர், முதன்மை உதவி இயக்குனர்னு வளர்ந்த நிலையில் அசோசியேட் டைரக்டர் இணை வசனகர்த்தாவா பணியாற்றின சின்ன ராமசாமி பெரிய ராமசாமி படம் வெளிவரல .

வறுமை . அளவில்லாத வறுமை . பனிரெண்டு மணிக்கு பிளாட்பாரம் கடைக்கு போய் நாலு முட்டை தோசை சாப்பிடுவேன் . இரவு அஞ்சு வாழைப்பழம் . சில நாள் வாழைப்பழத்துக்கு வழி இருக்காது .

கதை சொல்லப் போனா யாரும் கேட்கல . கேட்கறவங்களும் நிஜ பட்ஜெட் சொன்னா ஒத்துக்கல .

“பட்ஜெட்டை பாதியா சொல்லு மச்சி . பாதிப் படம் எடுத்த தயாரிப்பாளர் மீதிப் படத்தை திட்டிக் கிட்டாவது முடிப்பான் ” என்ற நண்பர்களின் அறிவுரையை ஏற்க மனசு வரல. எந்த வார்த்தையில் திட்டுவாங்களோன்னு பயம் !

எத்தனையோ டைரக்டர்களுக்கு நேரமையான பட்ஜெட் சொல்லியே படம் எடுக்கும் வாய்ப்பு கிடைச்சு இருக்கு . எனக்கு அது அமையல

பணத்தின் அவசியம் புரிந்தது

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆக சேர்ந்தேன் .

2000 ஆம் ஆண்டு பிறந்த அந்த நொடியில் நான் எழுதி, இயக்கிய நூற்றாண்டுத் திரை இசை என்ற நிகழ்ச்சிதான் ஒளிபரப்பானது

சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு வந்த முதல் விளம்பரம் நான் எழுதி இயக்கிய சின்னச் சின்ன ஞாபகங்கள் என்ற நிகழ்ச்சிக்கே. இந்த இரண்டு விஷயங்களை என்னுடைய தொலைக் காட்சிப்,பணியின் பெருமையா நினைக்கறேன்

பிறகு ஒரே நேரத்தில் மாலை முரசு நாளிதழ், தேவி வார இதழ், கண்மணி , பெண்மணி மாத நாவல்கள், எல்லாத்துக்கும் கட்டுரைப் பகுதி ஆசிரியரா ( feature editor ) இருந்தேன் .

சினிமா ஆசை மேலோங்கும்போது வேலையை விட்டுட்டு வறுமையை வரவழைத்துக் கொண்டு வாய்ப்புத் தேடுவேன் .

குடும்பம் குழநதைகள் என்று பொருளாதாரத் தேவை விரட்டும் . மறுபடியும் எங்கயாவது வேலைக்கு போயிடுவேன் .

ஏற்றுமதி உலகம் என்ற பத்திரிகைக்கு விளம்பர ஏஜென்டா கூட ஊரு ஊரா போயிருக்கேன்

அடாவடி என்ற படத்தில் இசை அமைப்பாளர் தேவா சார் இசையில் ” திசை எட்டும் சதிராட… ” என்று துவங்கும் பாடல் மூலம் பாடல் ஆசிரியராக படத்தின் இயக்குனர் என் ஆருயிர் நண்பர் சிவராஜ் அறிமுகம் ஆனேன் . பாடல் பெரும் வெற்றி படப்பிடிப்பின் போது சத்யராஜ் சார் ” இந்த பாட்டு மட்டும் ஒரு முக்கியமான சமயத்தில் ஒரு ஹீரோவுக்குப்போ யிருந்தா தமிழக அரசியலே மாறி இருக்கும் சார் ” என்று பாராட்டினார் . ஆனால் படம் ஓடல .

இளையராஜா சார் இசையில் அஜந்தா என்ற படத்தில் ”வந்தது யார் ….. ” என்று துவங்கும் ஒரு பாடல் எழுதினேன் . வாலி சார், மேத்தா சார், முத்து லிங்கம் சார் , பா விஜய், என்று மொத்தம் ஒன்பது பாடல்கள் . ஒன்பது கவிஞர்கள் . அதில் நானும் ஒருவன் . எல்லா கவிஞர்களும் இருந்த ஒரு பொழுதில் இளையராஜா என்னைக் குறிப்பிட்டு ‘ எல்லா பாட்டும் நல்லா இருக்கு. ஆனா , செந்தில்….. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க” என்றார் . எனக்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது .

வெளியே வரும்போது வாலி சார் என் கழுத்தில் கை போட்டு இறுக்க அணைத்து “என்னய்யா ….” என்று ஆரம்பித்து ஒரு வாக்கியம் சொல்லிப் பாரட்டினார் . அது எனக்கு மிகப் பெரிய பாராட்டு . ஆனால் ஆத்தாடி… வாலி சாரின் குசும்பு காரணமாக அதை வெளியில் சொல்ல முடியாது .

அதே அஜந்தா படத்தில் முழு நீள கதாபாத்திரம் ஒன்றில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் முழு நீள கதாபாத்திரம் ஒன்றில் நடித்தேன் . தமிழ்நாடு அரசின் சிறந்த குணச் சித்திர நடிகருக்கான விருது இறுதிப் பட்டியலில் கடைசி வரை இருந்தேன் . விருது கிடைக்கல . காரணம் அந்த விருதை மிக மிக நியாயமாக பொருத்தமாக , அபியும் நானும் படத்தில் நடித்ததற்காக பிரகாஷ் ராஜ் சாருக்கு கொடுத்தாங்க . .அஜந்தா படமும் ஓடல .

இடையில் மணி ரத்னம் சாரின் குரு படத்தில் ஐஸ்வர்யா ராயின் அண்ணனாக நடிக்க மேக்கப் டெஸ்ட்டுக்கு மணிரத்னம் சார் ஆபிசில் இருந்து அழைப்பு வந்தது . ஆனால் நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நபரால் அது தடுக்கப்பட்டது .. காரணம் அவருக்கு வேண்டிய ஒருவருக்கான முயற்சி . அவரும் அந்த முயற்சியில் ஜெயிக்கல என்பது வேற விஷயம்

சசியின் பூ படத்தில் ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடிக்கமேக்கப் டெஸ்ட் எடுத்து தேர்வாகியும் விட்டேன் . ஆனால் நான் பாசத்தோடு உதவி செஞ்ச ஒரு நபரே அதைக் கெடுத்தார் .

இது போல எவ்வளவோ வஞ்சகங்கள்து, ரோகங்கள், ஏய்ப்புகள் , முதுகில் குத்தல்கள் , கழுத்தறுப்பு கள் …. எல்லாம் விலாவாரியா சொன்னா அழுது தீராது

வயிற்றுப் பாட்டுக்காக தினமதி , தினசெய்தி போன்ற பத்திரிக்கைகளில் மீண்டும் ஒரு சினிமா நிருபரா வேலைக்கு சேர்ந்தேன் செஞ்சேன் . அந்த வேலைக்கு உண்மையா இருந்துகிட்டு வாய்ப்புத் தேடவும் முடியல .

எனவே அதையும் விட்டு விட்டு ஒரு சினிமா இணைய இதழ் சொந்தமா ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு சில படங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் நடிக்க ஆயிரம் ரூபாய் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்குப் போனேன் .

‘இனி நாம என்ன செஞ்சு கிழிக்கப் போறோம் ? மானத்தோட கவுரவத்தோட , நல்லவர்கள் தூற்றாத அளவுக்கு கட்டிக் காப்பாத்தின நல்ல பேரோட– சீக்கிரம் ‘போய்ச் சேந்துருவோம்’ என்ற எண்ணம் அடிக்கடி வர ஆரம்பித்த நிலையில்தான் என் வாழ்க்கையின் ஒளிவிளக்காக வந்தார் விஜய் ஆண்டனி சார்.

‘நல்லவனா இருக்கான் . ஆனா சும்மாவே சுத்திட்டு இருக்கானே..’ என்று ஏதோ ஒரு பொன் பொழுதில் அவருக்குப் பட்டுருச்சி போல !

கூப்பிட்டு வாய்ப்புக் கொடுத்து சம்பளம் கொடுத்து மரியாதையும் மதிப்பும் கொடுத்து என் இஷ்டத்துக்கு நடிக்க சுதந்திரமும் கொடுத்தார் .

எத்தனையோ படைப்பாளிகளின் முதல் பேட்டிகளை , முதல் புகைப்படங்களை , பெரிய பேட்டிகளை எடுத்து அவர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறேன் .

ஆனால் விஜய் ஆண்டனி சாருக்கு நான் அப்படி எதுவும் பெருசா செய்யவே இல்லை .

ஆனால் எல்லோருக்கும் நான் வீசிக் கொண்டு இருந்த விளக்கை திருப்பி என் மேல் வெளிச்சம் வீசிய பெருந்தகை விஜய் ஆண்டனி சார் .

விருதுகள் பெற்றது பற்றி…

அண்ணா துரை படம் வந்த பொழுது பத்திரிகை உலக சகாக்கள் , தாங்களே ஜெயித்தது போன்ற உணர்வில் என்னை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் .

அதே போல உடன்பிறவா சகோதரர்களாக இருக்கும் பத்திரிக்கை தொடர்பாளர்களும் மனதார சந்தோஷமாய் வாழ்த்தினார்கள் .

அவர்களில் நால்வர்தான் இந்த V4 அவார்ட்ஸ் அமைப்பை வைத்திருக்கும் திரு .டைமன்ட் பாபு, திரு . சிங்காரவேலு, திரு. ரியாஸ் மற்றும் திரு .மவுனம் ரவி.

என்னதான் நல்லா நடிச்சதாகவே இருக்கட்டுமே . இதுவரை நம்ம கூட சுத்திட்டு இருந்தவனை எதுக்கு உயரத்துல தூக்கிப் பிடிக்கணும்னு நினைக்காம விருது கொடுத்தார்களே .

அந்த நாலு பேரின் பெருந்தன்மைக்கு என்றும் மறவா நன்றிகள்

உண்மையில் எனக்கு இது மூன்றாவது விருது . இதற்கு முன்பே அண்ணாதுரை படத்தில் சிறப்பான நடிப்புக்கான விருது ஆலந்தூர் ஃபைன் ஆர்ட்ஸ்., மகா ஃபைன் ஆர்ட்ஸ் என்று இரண்டு அமைப்புகளிடம் இருந்து எம் ஜி ஆர் விருது பெற்றேன் .

V4 அவார்ட்ஸ் என்ற இந்த மூன்றாவது விருதின் இன்னொரு பெயர் எம் ஜி ஆர் சிவாஜி விருது .

முதல் இரண்டு விருதுகளில் எம் ஜி ஆர் அவர்கள் பெயர் மட்டும் இருந்தது . இதில் சிவாஜி அவர்கள் பெயரும் சேர்ந்து இருந்தது .

இப்போ திமிரு புடிச்சவன் படத்துக்காக என் மரியாதைக்குரிய குருநாதர் ஆர் வி உதய குமார் மற்றும் அன்பு அண்ணன் ஜாகுவார் தங்கம் கைகளால் முதல் விருது

செந்தில் குமரன் வெரி ஹேப்பி அண்ணாச்சி !

உங்க இயக்குனர் ஆர் வி உதயகுமார் மற்றும் ஜாகுவார் தங்கம் பற்றி சொல்லிட்டீங்க .. ஒகே V4 விருதை பிரபல தயாரிப்பாளர் கே ஆர் , பார்த்திபன் , நடிகர் கிருஷ்ணா கையால் பெற்றபோது எப்படி இருந்தது ?

எங்கள் இயக்குனர் மற்றும் ஜாகுவார் அண்ணனைப் போலவே இந்த மூன்று பேரும் நிஜத்தில் என் நலம் விரும்பிகள் . அவர்கள் மேடையில் இருக்கும் போது நானே அறியாமல் நான் விருது பெற மேடை ஏறிய நொடி பேரு மகிழ்வானது

அதற்கு பின்னால் பல சுவையான நினைவுகள் உள்ளன .

எப்போதும் உற்சாகமாக இருக்கும் நடிகர் கிருஷ்ணா நல்ல மனிதர் . பத்திரிகையாளர் நடிகர் என்ற எல்லைகள் கடந்து பழகும் நண்பர் . மேடையில் என்னை பார்த்ததும் அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை .

சந்தன மாலையை வாங்கி அவர் அவ்வளவு மனப்பூர்வமாக அணிவித்த நொடி நெகிழ்ந்து போனேன் .

அடுத்து தயாரிப்பாளர் கே ஆர்.

நான் ஜூனியர் விகடனில் சினிமா செய்திகள் எழுதிக் கொண்டு இருந்த காலம். கே ஆர் ஆவாரம்பூ படத்தை ஆரம்பித்தார் . கதாநாயகன் தேடலில் இருந்தார் . அப்போது என்னுடன் ஜூவியில் பணியாற்றிய ஒரு நண்பரை அவருக்குப் பிடித்துப் போய் அவரை ஹீரோவாக ஆக்க, மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்க்க விரும்பினார் .

அந்த நண்பரை ஹீரோவாக மேக்கப் டெஸ்ட் எடுக்க விரும்பும் கே ஆர் சார் நம்மை சின்ன கேரக்டருக்குக் கூட அழைக்க மாட்டேன் என்கிறாரே என்று எனக்கு வருத்தம் . பத்திரிக்கையாளனாக இருந்து கொண்டு நானாக வாய்ப்புக் கேட்கவும் எனக்கு கூச்சம் .

ஆனால் கே ஆர் விரும்பும் நண்பரோ தயங்குகிறார் . நான் அந்த நண்பரை கன்வின்ஸ் பண்ணி அழைத்துப் போனேன் . மேக்கப் டெஸ்ட் எடுத்தார் கே ஆர் . அந்த நேரத்தில் அவரை விட பொருத்தமான நபராக வினீத் கிடைத்த காரணத்தால் நான் அழைத்துப் போன நண்பர் தேர்ந்தெடுக்கப்படவில்லை .

பின்னாளில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக சேர்ந்து இயக்குனர் ஆகி விஜய்காந்தை வைத்து நரசிம்மா என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த, மறைந்த திருப்பதி சாமி தான் அந்த நண்பர் .

அப்படிப்பட்ட கே ஆரிடம் விருது பெற்றது சந்தோசம் .

பார்த்திபன் சாருக்கும் எனக்குமான சம்பவம் இன்னும் சிறப்பானது .

அவரது முதல் படமான புதிய பாதை சரித்திரம் படைத்த நிலையில் அதீத எதிர்பார்ப்பு அவரது அற்புதமான இரண்டாம் படமான பொண்டாட்டி தேவை மாபெரும் வெற்றி பெறவில்லை .

மூன்றாவது படமாக ‘உள்ளே வெளியே’வுக்கு சுகன்யாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து போட்டோ ஷூட் நடத்தி இருந்தார் .

மிகவும் டைட்டான மெல்லிய பேண்ட்டில் சுகன்யா கில்லி தண்டா ஆடும் அந்த ஸ்டில்கள் செம சூடாக இருந்தன .

பத்திரிக்கை செய்திக்கு பார்த்திபனிடம் அதை கேட்டேன் .பார்த்திபன் தயங்கி , இப்போ இது வேணாம் வேற ஸ்டில் தர்றேன் என்றார் . நான் இதான் வேணும் என்றேன் . கொடுத்தார் .

ஜூ வி ஷோ என்ற பெயரில் நான் ஜூவியில் எழுதி வந்த சினிமா செய்திப் பக்கத்தில் கடைசி அட்டையில் கலரில் அந்த ஸ்டில் பிரம்மாண்டமாக லே அவுட் செய்யப் பட்டது . ( அப்போது ஜூனியர் விகடனில் நடுப்பக்கமும் முதல் அட்டை கடைசி அட்டை முன் பின் பக்கங்களும்தான் கலர் )

புத்தகம் அச்சாகும்போது பிரிண்டிங் ஏரியாவில் இருந்த ஒரு நண்பர் ‘ யம்மாடி .. அஞ்சு லட்சம் தொடைகள்” என்றார் . ஏன்னா அப்போ ஜூவியோட சர்க்குலேஷன் இரண்டரை லட்சம் !

இதழ் கடைக்கு வந்தது . கொந்தளித்த சுகன்யா படத்துல இருந்து விலகினார் . அந்த இடத்துக்கு ஐஸ்வர்யா வந்து நடித்தார் .

படத்தின் பூஜைக்கு போன நான் பார்த்திபனிடம் ”மனசு என்பது உள்ளே பாக்கெட் என்பது வெளியே . இந்தப் படத்தின் மூலம் உங்களுக்கு இரண்டும் நிறைய வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினேன் . படமும் ஹிட்.

அப்போதான் எனக்கு மனசு ஆறியது . இல்லை என்றால் குற்ற உணர்ச்சியில் குறுகி இருப்பேன் .

அதே போல பார்த்திபன் மகள் பிறந்த போது ஒரு வாழ்த்து அட்டை கொண்டு போனேன் . ஒரு நட்சத்திரம் இறங்கி வருவதை ஒரு கேமரா படம் பிடிக்கும்படியான போட்டோ உள்ள வாழ்த்து . புதிய நட்சத்திரம் பிறந்து இருக்கிறது என்ற வாசகமும் கொண்ட வாழ்த்து .

பின்னாளில் கீர்த்தனா மணிரத்னம் சார் படத்தில் நடித்த போது எனக்கு அவ்வளவு சந்தோசம் .

ஆக எனக்கு V4 அவார்ட்ஸ் வழங்கியவர்களில் அவரும் ஒருவர் என்பது மேலும் சந்தோஷமாக இருந்தது .

இவ்வளவு சுவாரஸ்யமான் விஷயங்கள் இருந்தும் அன்று நீங்கள் மேடையில் பேச வில்லையே ஏன் ?

நான் என்ன பேச மாட்டேன் என்றா சொன்னேன் ? நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பெண்மணி எல்லோரிடமும் விருது வாங்கிய உடன் பேசச் சொன்னார் . என்னை பேசச் சொல்லவில்லை . என் கையில் மைக்கை கொடுக்கவும் இல்லை . அவருக்கு நான் ஒரு பொருட்டாக இல்லை. இன்னும் ஒரு நொடி நான் மேடையில் நின்று இருந்தாலும் கெட் அவுட் சொல்லி இருப்பார் போல .

நானாக மைக்கை கேட்டு வாங்கி பேச மனசு வரவில்லை . ஒருவேளை கேட்டு இருந்தால் நேரம் இல்லை என்று சொல்லி இருப்பார்கள் . ஆனால் அன்று அவர் விழா மேடையில் வெட்டியாக சுவாரஸ்யமாக இல்லாமல் பேசி நேரத்தைக் கொன்றது அவர்தான் .

ஒரு விருது விழா மேடையில் யார் பேச வேண்டும் என்பதை, சம்மந்தமில்லாத இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் முடிவு செய்வது பெரிய அபத்தம் .

பொதுவாக சினிமா மேடைகளில் நேரம் கொல்வதே இவரைப் போன்ற சில நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்தான். . கொடுமை .

அதனால் என்ன திமிரு புடிச்சவன் படத்துக்கான விருது மேடையில் பேசி மனமார எல்லாருக்கும் நன்றி சொன்னேன் .

அடுத்தடுத்த படங்கள் ?

இயக்குனர் சுசீந்திரனின் சாம்பியன் , கென்னடி கிளப் படங்களிலும் ,சிம்புதேவன் இயக்கம் ஏழு ஹீரோக்கள் நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன் மேலும் சில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க பேசிக் கொண்டு இருக்கிறார்கள் . சில படங்களுக்கு பாடல்களும் எழுதுகிறேன்

டைரக்ஷன் லட்சியம் காரணமாத்தான் சினிமாவுக்கே வந்தேன். உதவி இயக்குனரா வேலை செய்ததும் அதுக்கு தான் . அதில் பெரும் பின்னடைவு வந்த போது, சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் பாட்டு எழுதினேன் . நடிக்க முதன் முதலில் அழைப்பு வந்தபோது அய்… நல்லாருக்கே என்றுதான் நடிக்கப் போனேன் .

அதே நேரம் என்னோடு சக அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி டைரக்டர் ஆகி புகழ் அடைந்த பலரும் கூட நான் நடிக்க ஆரம்பித்த நிலையில் அவர்களிடம் வாய்ப்புக் கேட்டபோது கிண்டல் செய்தார்கள் . எரிந்து விழுந்தார்கள் . நன்கு தெரிந்தவர்களே டி வி சீரியலில் நடிக்க எனக்கு வந்த ஒரு பெரிய வாய்ப்ப்பை தடுத்தார்கள் .

உதவி இயக்குனர் பணி, நடிப்பு, பாடல் என்று நான் எதை செய்தபோதும் வேஸ்ட் என்று எங்குமே பேர் வாங்கியது இல்லை . ஆனால் பொது வெளி அங்கீகாரம்தான் வரவில்லை .

இப்போது நடிகனாக வந்து இருக்கிறது .

பெரிய சந்தோசம் என்ன வென்றால் முதல் படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் பலரும் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள் . இன்னும் அவர்களில் பலருக்கு ஹீரோ யார் என்று கூட முடிவு செய்யவில்லை . சிலருக்கு தயாரிப்பாளரே இன்னும் கிடைக்கவில்லை .

‘ இப்போ என் கிட்ட சொல்லி என்ன பயன் ?” னு கேட்டா “இல்ல சார் … ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கு நீங்க பண்ணினா நல்லா இருக்கும் . அதான் உங்ககிட்ட முதல்ல சொல்லலாம்னு …. ” என்று கண்களில் ஏக்கம் வழியும் புன்னகையோடு பேசுகிறார்கள் . அவர்கள் எல்லோரிடத்திலும் என்னை நான் பார்க்கிறேன் .

இதைத்தான் பெரிய கவுரவமாக நினைக்கிறேன்.