சிவாஜி, கமல், ரஜினிக்கு முதன்முதலில் மேக்கப் போட்ட ஒப்பனைக்காரர் முத்தப்பா காலமானார்.

தென்னிந்திய சினிமாவின் மூத்த கலைஞர்களுல் ஒருவரான முத்தப்பா சிவாஜி, கமலுக்கு முதன் முதலில் மேக்கப் போட்டவர், ரஜினியின் ஆஸ்தான மேக்கப் மேன் போன்ற புகழுக்குச் சொந்தக் காரரான மேக்கப் மேன் முத்தப்பா, நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.

’ஏவிஎம்’முத்தப்பா என்றால் தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் அறிவுறுத்தலின் படி அப்போதைய முன்னணி இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சிபாரிசுடன் சினிமா உலகின் மூத்த தயாரிப்பாளர் பெரியவர் ஏவி.மெய்யப்பன் செட்டியாரால் மேக்-அப் மேனாக வாழ்க்கையைத் துவக்கியவர் முத்தப்பா.

சிவாஜி கணேசன் முதன்முதலாக நடித்த ‘பராசக்தி’ படத்தில், அவருக்கு மேக்கப் போட்டவர் முத்தப்பா. அதுமட்டுமல்ல, கமல்ஹாசன் முதன்முதலாக நடித்த ‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்கும் இந்த முத்தப்பா தான் மேக்கப் மேன். இப்படி சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி ஹீரோக்கள் தொடங்கி தற்போதுள்ள த்ரிஷா வரை பலருக்கும் மேக்கப் போட்டவர் முத்தப்பா. ஒருகட்டத்தில், ரஜினிக்கு மட்டுமே ஆஸ்தான மேக்கப் மேனாக மாறினார்.

அத்துடன், ரஜினி படங்களில் சின்னச்சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார் முத்தப்பா. ‘மேக்கப் மேன் முத்தப்பா படத்தில் நடித்தால் ராசி’ என்று சொல்லி, எப்படியாவது அவருக்கு ஒரு கேரக்டர் வாங்கிக் கொடுத்து விடுவார் ரஜினி.

முத்தப்பாவைப் பற்றி ‘ஒப்பனைக்காரன்’ என்றொரு புத்தகமே வெளிவந்துள்ளது. இள.அழகிரி எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை, நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முத்தப்பா, நேற்று காலை சென்னையில் காலமானார். அவருடைய உடலுக்கு, திரையுலகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினிகாந்த், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.