தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா!

தமிழ்நாட்டில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிற திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆகியவை இணைத்து ஒரு புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சங்கத்திற்கு ‘தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய சங்கத்தின் தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், பொதுச் செயலாளராக R.பன்னீர் செல்வமும், பொருளாளராக D.C.இளங்கோவனும் மற்றும் பல நிர்வாகிகளும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய சங்கத்தின் துவக்க விழா, சமீபத்தில் சென்னை இராமபுரம் Feathers – A Radha Hotel–ல் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலரான அபிராமி இராமநாதன் தலைமை தாங்கினார். உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ இருவரும் விழாவுக்கு வருகை தந்து, குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர். 

விழாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடையும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், வழங்க உள்ள சலுகைகளையும் பற்றி அமைச்சர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆணை வழங்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமிக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது,

மேலும் நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.