‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ – தமிழில் விஷால் ரிலீஸ்!

ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் 80 கோடி செலவில் கன்னடத்தில் உருவாகியிருக்கும் மெகா பட்ஜெட் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்’. கன்னடத் திரையுலகில் மிக அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் திரைப்படமும் இப்போதைக்கு இதுதானாம்..! ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இயக்குநரான பிரசாந்த் நீள், 2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘உக்ரம்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதினையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘கே.ஜி.எஃப்.’ இவர் இயக்கும் இரண்டாவது படமாகும்.

2014-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபர்’ திரைப்படம் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே சுரங்கத் தொழில்சாலைகள் மெல்ல, மெல்ல வளர்ந்து அரசியல் கட்சிகளையும் வளர்த்து, அரசியல்வாதிகளையும் வளர்த்து, குண்டர் படையினரையும் வளர்த்தெடுத்தது என்பதை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதேபோல் இத்திரைப்படமும் 1951-ல் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலாரில் தங்கம் இருப்பதை அறிந்து அங்கே தங்கச் சுரங்கம் அமைக்கப்பட்டு, கோலார் பகுதியே வளம் பெற்றதையும், இதைத் தொடர்ந்து அங்கே நடைபெற்ற அரசியல் கொலைகள், ரவுடியிஸத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

மும்பையில் வளரும் நாயகன் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பாகுபலி’, ‘2.0’ படங்களுக்கு பிறகு இந்த ‘கே.ஜி.எஃப்’ படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும். மேலும், கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் படக் குழுவினர் தெரிவித்தனர்.

கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 9-ம் தேதியன்று பெங்களூரில் உள்ள PVR Orion Mall-ல் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினர் மற்றும் கன்னட திரையுலகினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம்’ பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரையும் நடிகர் விஷால் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, “இந்தப் படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறேன்…” என்றார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.