அண்மையில் சன் டிவியில் கூட போட்ட நிலையிலும் பல தியேட்டர்களில் இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் ‘96’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் நடிக்கக் கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளது இந்தப் படம். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். முன்னதாக இந்த தயாரிப்பாளர் நந்தகோபாலின் சொந்த நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘கத்திச்சண்டை’, ‘துப்பறிவாளன்’, ‘வீர சிவாஜி’, ‘96’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது. கடைசியாக அந்த நிறுவனம் தயாரித்திருந்த மூன்று திரைப்படங்களான ‘துப்பறிவாளன்’, ‘வீர சிவாஜி’, ‘96’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நாயகர்களான விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகிய மூவருக்கும் பல கோடிகளை சம்பளப் பாக்கியாக வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் நந்தகோபால்.
இந்நிலையில்தான் , தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும், ‘வீர சிவாஜி’ படத்தில் நடித்ததற்காக விக்ரம்பிரபுவுக்கும் இன்னும் சம்பள பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ‘96’ படத்தில் நடித்த விஜய் சேதுபதியும் சம்பள பாக்கி பெற்றுக் கொள்ளாமலேயே படம் வெளியானது.
மேற்கண்டப் படங்களை வெளியிடும் கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை இந்தத் தயாரிப்பு நிறுவனம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து சம்பளம் வழங்காமல் படங்களை வெளியிட்டு வருகிறது. படம் வெளியீட்டின்போது இக்கட்டான சூழ் நிலையில் என்றுமே நடிகர்கள் தங்களின் சம்பளத்தை விட்டுக் கொடுத்தே தயாரிப்பாளர் களுக்கு உதவி வருகின்றனர். ஆனால், அந்த நல்ல செயலைப் பலவீனமாக எடுத்துக் கொண்டு, சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒப்புக் கொண்ட சம்பளத்தைத் தரமறுப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
கடந்த காலங்களில் இருந்தே பல நடிகர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழு கலந்து ஆலோசித்தது. அதன் அடிப்படையில், இனிவரும் காலங்களில் இதுபோன்று செயல் படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கும்/தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள், எந்த ஒரு நிகழ்வுக்கும் படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன் படி, தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எந்த ஒரு நிகழ்வுக்கும் படங்களுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் எந்த ஒத்துழைப்பும் நல்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.