“தேவர் மகன்-2′ கூடாது..! ‘தேவேந்திரர் மகன்’ என்று வையுங்க- கமலுக்கு கிருஷ்ணசாமி அடவைஸ்!!

“நடிகர் கமல்ஹாசன் ‘தேவர் மகன்-2’ என்று பெயரிட்டால் அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்று ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.

நடிகரும், ‘மக்கள் நீதி மய்ய’த்தின் தலைவருமான கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ படத்திற்கு பிறகு ‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி, “கமல்ஹாசன் தனது படத்தின் பெயரை மாற்ற வேண்டும். ‘தேவர் மகன்-2’ என்று அந்தப் படத்திற்கு தலைப்பினை வைத்தால் அந்தப் படத்தை வெளியிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்…” என்று கமல்ஹாசனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் எச்சரித்து உள்ளார். இந்தக் கடிதத்தில் ‘தேவர்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தாத டாக்டர் கிருஷ்ணசாமி வெறும் ‘மகன்’ என்கிற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்.

முன்னதாக கமல்ஹாசன்  2004-ம் ஆண்டு தயாரித்து, நடித்து, இயக்கி வெளியிட்ட ‘விருமாண்டி’ படத்திற்கு ‘சண்டியர்’ என்றுதான் பெயர் வைத்திருந்தார். ஆனால், இந்த ‘சண்டியர்’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்களிலெல்லாம் தனது ஆதரவாளர்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தார். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இது குறித்து நேரில் சென்று புகார் தெரிவித்தார் கமல்ஹாசன். ஆனால் இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதாவின் அறிவுரையை ஏற்று ‘சண்டியர்’ என்ற படத்தின் பெயரை ‘விருமாண்டி’ என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தந்தி தொலைக்காட்சியில் பாண்டே உடனான உங்களுடைய பேட்டியை நேற்றுதான் (நேற்று முன்தினம்) பார்க்க முடிந்தது. இதில் நீங்கள் ‘— மகன்-2’ என்ற பெயரில் படம் எடுப்பதாக கூறியிருந்தீர்கள்.

1993-ல் எந்த பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்போது படம் எடுப்பதாக கூறுகிறீர்கள். அந்த படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரையிலும் சாதிப் போர் நடந்துகொண்டே இருக்கிறது.

உங்களுடைய படத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். பெயர் மட்டுமே முக்கியம் உள்ளே என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.

‘தேவேந்திரர் மகன்’ என்று தங்களுடைய படத்துக்கு பெயரிடுங்கள். அது உங்களுக்கு மிகப் பெரிய மதிப்பையும், கவுரவத்தையும் பெற்றுத் தரும். அந்த படமும் நல்ல முறையில் ஓடும்.

ஒருவேளை நீங்கள் கூறியது போன்று படத்துக்கு பெயரிடுவதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஒட்டு மொத்த தேவேந்திரகுல மக்கள் முன்பு ‘சண்டியருக்கு’ கொடுத்த எதிர்ப்புகளை காட்டிலும் மிக, மிக கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய சூழல்கள் உருவாகும்.

முதல் திரைப்படத்துக்கு சமநிலையை உருவாக்கும் வகையில் தற்போது எடுக்கக் கூடிய படத்துக்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயர் சூட்டினால் நீங்கள் உண்மையிலேயே மையத்தை விரும்பக் கூடியவராக அனைவராலும் கருதப்படுவீர்கள்.

உங்களது கொள்கைப்படி மைய அரசியலை கையாள வேண்டுமென்றால், மறைக்கப்பட்ட அடையாளத்தை மீட்க போராடும் தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தி ‘தேவேந்திரர் மகன்’ என்ற பெயரில் படம் எடுங்கள். அது ஓடும். ஆனால் நீங்கள் கூறியது போன்று பெயர் வைத்து படம் எடுத்தால் ஓடாது. மாறாக முடங்கும்..” என்று எச்சரித்துள்ளார்.