தனுஷை இயக்கும் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர்! – கலைப்புலி தாணு தயாரிக்கிறார்!

பரியெறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ். இது தொடர்பான அறிவிப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றது பரியெறும் பெருமாள். சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும் விவாதங்களையும் எழுப்பியது அந்தப் படம்.இந்த நிலையில், மாரி செல்வராஜின் புதிய படத்துக்கான அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பரியெறும் பெருமாள் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த விதம் எதார்த்தத்துக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். அதேபோல, மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் இணைகிறேன். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து பா.ரஞ்சித், “மிக அற்புதமான செய்தி!!! அண்ணன் `கலைப்புலி’ தாணு அவர்களின் அரவணைப்பில், தன் மிகச்சிறந்த நடிப்பில் சிறக்கும் தனுஷ் அவர்களை இயக்கும் பொறுப்பை ஏற்றத் தம்பி மாரி செல்வராஜுக்கு என் இதயம் கனிந்த அன்பும்! வாழ்த்துகளும்! பெரும் மகிழ்ச்சி!!!,” என்று தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனுஷின் இந்த ட்வீட்டை தன் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டுள்ள கலைப்புலி தாணு, “இந்நாள் பொன்னாள் உவகை பொங்கும் நன்னாள்,” என மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடித்த கபாலி மூலம் பா ரஞ்சித்துக்கு நட்சத்திர இயக்குநர் அந்தஸ்தைத் தந்த கலைப்புலி தாணு, இப்போது மாரி செல்வராஜை அரவணைத்துள்ளார். இதன் மூலம் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.