மிக மிக அவசரம் படத்தின் கதை இதுதானா?

0
292

‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் கதையின் நாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா போலீஸாக வலம் வரவுள்ளாராம். மேலும், இயக்குநர் சீமான், ஹரீஷ், ஈ.ராமதாஸ், முத்துராமன், சக்தி சரவணன், வெற்றிக் குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘புதிய கீதை’ புகழ் இயக்குநர் ஜெகன்நாத் கதை – வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு திரைக்கதை எழுதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து, இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. இஷான் தேவ் இசையமைத்து வரும் இதற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

படம் குறித்து டைரக்டர்  சுரேஷ்  காமாட்சியிடம் கேட்ட போது, “நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத்தான் போலீஸ். ஆனால் அந்த போலீஸ் துறை ஒழுக்கமாக உள்ளதா? குறிப்பாக ஆண் போலீசும் பெண் போலீசும் இணைந்து பணியாற்றும் பகுதிகளில் அந்த ஒழுக்கமும் கண்ணியமும் பின்பற்றப்படுகிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இதுவரை எந்தப் படத்திலும் பதில் கிடைத்ததில்லை. உண்மையில் பெண் போலீசாருக்குப் பிரச்சினை வருவதே அவர்கள் சீருடையிலிருந்துதான்.

ஈழத்தில் விடுதலைப் புலிகள் படையில் பெண் புலிகள் கணிசமாக உண்டு. எல்லோரும் இளம் பெண்கள்தான். ஆனால் ஒரு முறை கூட அங்கே பெண்புலிகளிடம், ஆண் வீரர்கள் எல்லை மீறியதில்லை. அப்படி ஒரு சிறு செய்தி கூட ஈழத்திலிருந்து நம் காதுகளை எட்டியதே இல்லை. காரணம் புலிகளின் கட்டுப்பாடு என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவர்களின் சீருடை. பெண் புலிகளின் சீருடை கொஞ்சமும் வக்கிரத்தைத் தூண்டாத அளவுக்கு கண்ணியமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தமிழகத்து பெண் போலீசாருக்குத் தரப்பட்டிருக்கும் இறுக்கமான சீருடை அவர்களை காமக் கண்ணோட்டத்துடன் சக ஆண் போலீசாரை அல்லது பார்வையாளர்களைப் பார்க்கத் தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உண்டு. அதன் தொடர்ச்சிதான் பெண் போலீசார் சந்திக்கும் இதர இம்சைகள். இந்தக் கோணத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் படமெடுத்திருக்கிறார்களா, தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்க வருகிறது மிக மிக அவசரம். படத்தின் முதல் டீசரை இயக்குநர் சேரன் வெளியிட்டார். பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இந்த டீசருக்கு பெரும் வரவேற்பும், கவனமும் கிடைத்துள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.