எமதர்மனாக யோகிபாபு நடிக்கும் “தர்மபிரபு”!

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் ‘தர்ம பிரபு’. ஏற்கனவே ‘நாணயம்’, ‘கள்வனின் காதலி’, ‘இராமேஸ்வரம்’ மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடங்கள் அனுபவம் பெற்றவராக, முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் முத்துக்குமரன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து திரைக்கு வரவிருக்கும் ‘கன்னிராசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக இந்தப் படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், பாடல்கள் – யுகபாரதி, நிர்வாக தயாரிப்பு – ராஜா செந்தில், தயாரிப்பு – P.ரங்கநாதன், எழுத்து, இயக்கம் – முத்துக்குமரன்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, “எமலோகத்தில் எமனின் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள்…. தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தக் கதையை கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும். தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் சினிமா ரசிகர்களை தன் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது எங்களது படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.

இப்படத்திற்காக ஸ்டூடியோவில் பல ‘செட்’டுகள் அமைக்கப்படுகின்றன. முக்கியமாக எமலோகம் செட் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் C.S.பாலசந்தர் அரங்க அமைப்பிற்க்கான  வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடைபெறும். சில பாடல் காட்சிகள் மட்டுமே வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது…” என்றார்.