பி.ஆர்.பந்தலு – வெள்ளித்திரையைக் கல்வெட்டாக்கிய ஜாம்பவான்!!

ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப் படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது சென்னையில்தான். பந்தலுவுக்கு சென்னையும் தமிழும் வாழ்வாதாரமாயின. நடிப்பைவிட படத்தயாரிப்பிலும் இயக்கத்திலும் அவருக்கு ஆர்வம் அதிகமானது. 1957ல் வெளியான ‘தங்கமலை ரகசியம்’, பந்தலு தயாரித்து இயக்கிய முதல் படம். அதற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு உற்சாகம் தந்தது.

ஸ்கூல் மாஸ்டர், கிருஷ்ணதேவராயா போன்ற படங்களைக் கன்னடத்தில் எடுத்தார். அங்கும் அவருக்குப் பெயர் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் அவரது திறமைகள் வெளிப்பட்டன. சிவாஜியும் சந்திரபாபுவும் நகைச்சுவையால் அதகளம் செய்த ‘சபாஷ் மீனா’ படமும் இவரது இயக்கத்தில் வெளியானதுதான். எனினும், பி.ஆர்.பந்தலுவின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்திய படம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன்.

காட்சியமைப்புகளாலும் வசனங்களாலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே நம் கண்முன்னே நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் தோன்றுவார். கட்டபொம்மன் வரலாறு குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், வெள்ளையனை எதிர்த்து நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அந்த மாவீரனின் தியாகத்தைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் பி.ஆர். பந்தலுதான்.

கேவா கலரில் அவர் தயாரித்து-இயக்கிய அந்தப் படத்திற்குப் பெரும்பலமாக அமைந்தவர்கள் அதன் நாயகனான சிவாஜி, கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி., படத்திற்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர். படத்தின் இசையமைப்பாளரான ஜி.ராமனாதன் அருமையான பாடல்களைத் தந்தார். போர்க்களக் காட்சிகளை டபிள்யூ.ஆர்.  சுப்பாராவும் கர்ணனும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தனர். இப்படத்திற்காக ஆஃப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு விருது கிடைத்தது. கெய்ரோ பட விழாவில் இசையமைப்பாளர் ஜி.ராமனாதனுக்கு விருது கிடைத்தது. அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக இதற்குத் தேசிய விருது கிடைத்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக வரலாற்று நாயகர் களையும் புராண கதாபாத்திரங்களையும் திரைப்படத்தின் வாயிலாக மக்களிடம் நிலைநிறுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார் பந்தலு. 1961ல் வெளியான ‘கப்பலோட்டிய தமிழன்’ படமும் (வ.உ.சிதம்பரனார் வரலாறு) 1964ல் வெளியான ‘கர்ணன்’ படமும் அவரது தணியாத தாகத்தின் வெளிப்பாடுகள். கட்டபொம்மனைவிடவும் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரலாறும் அது சொல்லப்பட்ட விதமும் மேம்பட்டிருந்தது. வ.உ.சியாக வாழ்ந்து காட்டியிருந்தார் சிவாஜி. எனினும், கறுப்பு-வெள்ளையில் வெளியான அப்படம் வணிகரீதியில் பெரிய வெற்றியைத் தரவில்லை.

மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனை செல்லுலாய்டில் வண்ணமயமாகவும் அற்புதமாகவும் செதுக்கினார் பந்தலு. சிவாஜிதான் இந்தக் கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டினார். தலைமுறை களைக் கடந்து 2012ல் நவீன தொழில்நுட்பத்தில் கர்ணன் மறுவெளியீடு செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது. பலேபாண்டியா, முரடன் முத்து ஆகிய படங்களும் சிவாஜியை கதாநாயகனாக்கி பந்தலு தயாரித்து இயக்கிய படங்களே.

1965ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-செல்வி.ஜெயலலிதா நடித்த தமிழின் மிகச் சிறந்த பொழுது போக்குப் படங்களில் ஒன்றான ‘ஆயிரத்தில் ஒருவன்’ பந்தலுவின் வண்ணமிகு வெற்றிப்படங் களில் குறிப்பிடத்தக்கது. கடற்பயணம், கடற்கொள்ளையர்கள், அடிமைகள் வியாபாரம் போன்ற வற்றை மையமாக வைத்து இனிமையான பாடல்கள்-விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள்- நறுக்கென்று அமைந்த வசனங்கள் இவற்றை சரிவிகிதத்தில் கலந்து மக்களைக் கவர்ந்தார் பந்தலு. நாடோடி(1966), ரகசிய போலீஸ்115 (1968), தேடி வந்த மாப்பிள்ளை (1970) ஆகியவையும் எம்.ஜி.ஆர்-பந்தலு கூட்டணியில் வெளியான வெற்றிப்படங்கள்.

தில் தேரா தீவானா (இந்தி), குழந்தைகள் கண்ட குடியரசு, நம்ம வீட்டு மகாலட்சுமி, கங்கா கவுரி போன்ற பல படங்களை இயக்கிய பந்தலு. 1973ல் காலமானார். அவருக்குத் தாய்மொழி தமிழ் அல்ல. ஆனால், தமிழ்த் திரை வரலாற்றில் அவர் பதித்திருக்கும் முத்திரை அழுத்தமானது. வரலாற்று நாயகர்களை வெள்ளித்திரையில் கல்வெட்டாக்கி நிலைபெறச் செய்த பெருமை பந்தலுவுக்கு உண்டு.

தயாரித்து இயக்கிய திரைப்படங்கள்

தங்கமலை ரகசியம் (1957)
சபாஷ் மீனா‎ (1958)
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
குழந்தைகள் கண்ட குடியரசு‎ (1960)
கப்பலோட்டிய தமிழன்‎ (1961)
பலே பாண்டியா‎ (1962)
கர்ணன் ‎ (1964)
முரடன் முத்து‎ (1964)
ஆயிரத்தில் ஒருவன்‎ (1965)
நம்ம வீட்டு மகாலட்சுமி‎ (1966)
எங்க பாப்பா‎ (1966)
நாடோடி ‎ (1966)
ரகசிய போலீஸ் 115‎ (1968)
தேடிவந்த மாப்பிள்ளை‎ (1970)
கங்கா கௌரி‎ (1973)
ஸ்கூல் மாஸ்டர்‎ (1973)
தயாரிப்பு மட்டும் செய்த திரைப்படம்

கடவுள் மாமா‎ (1974)
இயக்கம் மட்டும் செய்த திரைப்படம்
சங்கிலித்தேவன்‎ (1960)