நடிகர் விக்ரமின் மகன் துருவ் ‘வர்மா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள இந்த படத்தை பாலா இயக்கி உள்ளார். துருவின் பிறந்தநாளையொட்டி வர்மா படத்தின் டிரைலர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, கதாநாயகியாக நடித்துள்ள மேகா, ரைசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம் “பாலா இயக்கத்தில் துருவ் அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாலா இயக்கத்தில் நடித்தால் எந்த ஒரு நடிகரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவார்கள். எனவே, துருவ் இந்த மோதிரக் கை குட்டு பெற வேண்டும் என விரும்பினேன். இப்போது அது நிகழ்ந்திருப்பதில் மகிழ்ச்சி.
பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால், அதில் ஒரு சிலர் இப்போது எனக்குக் துரோகி ஆகிவிட்டார்கள். இதுவரை என்னுடைய ரசிகராக இருந்த அவர்கள், இனிமே நான் துருவ் வின் ரசிகர் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களை நான் அப்புறமாக பார்த்துக் கொள்கிறேன்” என ஜாலியாக பேசினார்.
பாலா பேசும்போது, ‘விக்ரமை சேது படத்தில் நான் இயக்கியபோது, துருவ் 6 மாத குழந்தை. ரொம்ப ஷார்ப்பாக இருப்பான். அவனை இப்போது என் டைரக்ஷனில் ஹீரோவாக அறிமுகம் செய்வதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. தந்தையையும், மகனையும் இயக்கியது நல்ல விஷயம். ஷூட்டிங்கில் துருவ் என்னை கஷ்டப்படுத்தவில்லை. சொன்னதை புரிந்துகொண்டு, நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தான்’ என்றார்.
நாயகன் துருவ் பேசுகையில், ‘எனது டப்மாஷ் வீடியோவை பார்த்து இந்த வாய்ப்பு தேடி வந்தது. வெளிநாட்டில் பிலிம் மேக்கிங், ஆக்டிங் கோர்ஸ் படிக்கிறேன். பாலா அங்கிள் படம் என்றதும் நடிக்க ஒப்புக்கொண்டேன். அப்பா விக்ரமின் நடிப்புக்கு நான் பெரிய ரசிகன். ஆனால், தனித்தன்மையுடன் புகழ் பெற விரும்புகிறேன்’ என்றார்.