நானும் டைரக்டரா ஆகப் போறேன்!- ஐஸ்வர்யா ராய் அறிவிப்பு!

0
264

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான குரு படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ராவண் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இப்படம் 2010-ம் ஆண்டு வெளி யானது.இப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கு கிறார்.  ஃபன்னி கான் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தன்னுடைய இயக்குநர் கனவை வெளிப்படையாக அப்போது அறிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

‘ஏ தில் ஹாய் முஷ்கில்’ படத்துக்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் படம் ‘ஃபன்னி கான்’. அதுல் மஞ்ச்ரேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அனில் கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மியூஸிக்கல் காமெடிப் படமான இது, இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராய், இயக்குநராகும் தன் கனவை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், தன்னுடைய இந்தக் கனவுக்கு மிகப்பெரிய ஊக்கம் கொடுத்து வருவது கணவர் அபிஷேக் பச்சன் என்பதையும் தெரிவித்துள்ளார். அத்துடன், படம் இயக்கும் கலையைக் கற்றுக்கொள்ளும் தன் விருப்பத்தைப் பார்த்து, இயக்குநர்கள் கிண்டல் செய்யக்கூடும் எனவும் ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். தான் இயக்குநராக இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய இயக்குநர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராய். அவரை வைத்துப் படமெடுக்க பல இயக்குநர்கள் காத்திருக்கும் நிலையில், ஐஸ்வர்யா ராயின் அறிவிப்பு அவர்களுக்கு சந்தோஷமான அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.