மலையாளத்தில் பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்து சாதனை படைத்த நிறுவனமான ஆண்டோ ஜோஸப் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக ரிது வர்மா நடிக்கிறார். இத்திரைப்படம் துல்கர் சல்மானின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தக் காலத்திலும் ஏற்கப்படும் திரைப்படங்கள் காதல் கதைகள் கொண்டவையாக இருந்தாலும் அதற்கு பெரிதும் உதவியிருப்பது அவற்றில் இடம் பெற்றிருந்த மனதை கொள்ளை கொண்ட திரைப்பாடல்கள்தான். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் காதல் கொண்ட இந்தப் படத்தில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான ‘மசாலா காஃபி குழு’வை இசை யமைப்பாளராக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரான தேசிங் பெரியசாமி.கேரளாவில் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பது இந்த இசைக் குழுவினர்தான்.
இயக்குநர் தேசிங் பெரியசாமி இதைப் பற்றிக் கூறும்போது, “இசை இன்னும் புதுமையாக இருக்க வேண்டும், அதுதான் இந்தப் படம் சொல்லும் காதல் கதைக்கு பல வண்ணங்களை சேர்க்கும் என நினைத்தோம். இயற்கையாகவே, அழகான துல்கர் மற்றும் நேர்த்தியான ரிது வர்மா இருவரும் இந்தப் படத்தில் நடிப்பதால் இசையின் மூலம் இந்த காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல நினைத்தேன். அதற்கு இந்த இளைஞர் குழுதான் மிகச் சரியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். இதனாலேயே அவர்களை அழைத்து வந்திருக்கிறோம்.
எற்கனவே இவர்கள் ‘உறியடி’ படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அவை இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. ஆனால் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன, அவைகள் திரை ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும்…” என்றார்.
தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் பேசும்போது, “சமூக ஊடகங்களில் இந்த இசைக் குழுவிற்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது. நாளுக்கு நாள் இந்த இசைக் குழுவுக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே போவதும் இவர்களை இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய காரணம். நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என முழுக்க, முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாகி வரும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இளைஞர்களுக்கான படமாக இருக்கும் என நான் உறுதியாக கூறுவேன்…” என்றார்.