இயக்குநர் வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.நகர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்ட தொகுதி ஆர்.கே.நகர். இந்த தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாகும். அவருடைய மறைவுக்கு பிறகு இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா அதிகமாக இருந்ததால் இந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தொகுதியின் பெயரை தான் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, தன்னுடைய தயாரிப்பில் இரண்டாவது படமாக வைபவ் நடிக்கும் படத்திற்கு ஆர்.கே.நகர் என்று பெயர் வைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் பிறந்த நாளின்போது வெளியான ஆர்.கே.நகர் படத்தின் டீசரில் இடம்பெற்ற, “நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா… நீ என்ன எம். ஜி. ஆரா…” என்கிற வசனம் கமலை விமர்சிப்பது போல் உள்ளது என சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மேலும் முழுக்க அரசியல் விமர்சனப் படமாக உருவாகியிருக்கிறது என அந்த டீசரில் இடம்பெற்ற காட்சிகள் மூலம் அறிய முடிந்தது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தணிக்கைக்கு அனுப்பியதில் ‘யு/ஏ’ கிடைத்திருக்கிறது.
இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார். வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுபப்பட்டது. படத்தை பார்த்த குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.