நடிகை ஜெயந்திக்கு என்னதான் பிரச்னை?

0
267

காதோடுதான் நான் பேசுவேன் என்ற பாட்லுக்கு உடல் மொழியால் பேசி (நடித்து) தனி பெயர் வாங்கி இருந்த சீனிய நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைபாடு காரணமாக ஆபத்தான நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று நேற்று பிற்பகலில் ஊடகங்களில் செய்தி ஒளிபரப்பினர். மேலும் நேற்று இரவு தொடங்கி இன்று காலையிலும் சில செய்தி ஊடகங்களில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயந்தி மறைவு என்றும் ஃபிளாஷ் செய்தி வெளியாகி இருந்தது. இணையத்திலும் இந்தச் செய்தி காணக் கிடைத்தது. சில நொடிகளில் அந்தச் செய்தியை மறுத்து சில ஊடகங்கள் செய்தி சொல்லிக் கொண்டிருந்தன. ஊடகங்களில் வெளியான ஜெயந்தியின் மறைவுச் செய்தியில் உண்மையில்லை என அவரது குடும்பத்தார் கண்டனம் தெரிவித்திருந்தனர். தீவிர ஆஸ்த்துமா காரணமாக ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், அவர் தற்போது சிறிது, சிறிதாக நலம் பெற்று வருகிறார். இந்நிலையில் சில ஊடகங்கள் அவர் மறைந்து விட்டதாக செய்தி வெளியிட்டிருப்பது அதிர்ச்சிகரமானது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது என நடிகை ஜெயந்தியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஜெயந்திக்கு என்னதான் பிரச்னை?

நடிகை ஜெயந்திக்கு கடந்த பல ஆண்டுகளாகவே தீவிர ஆஸ்துமா பிரச்னை இருந்து வருவதாகவும், அப்போதெல்லாம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் சரியாகி விடுவார் என்றும் அவரது மகன் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, ஆஸ்துமாவால் தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை இதற்கு முன்பு வந்ததில்லை. இம்முறை ஆஸ்துமாவின் தீவிரம் மிகையாக இருந்ததால் அவரை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் கூறியதால் திங்களன்று ஜெயந்தி பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சையினால் அவரது உடல்நலன் தேறி வருகிறது. அவ்வளவு தான் நடந்தது. என்று ஜெயந்தியின் மகன் கிருஷ்ணா கன்னட செய்தி ஊடகம் ஒன்றுக்கு தனது தாயாரின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயந்தியை அறிந்திராத இந்த தலைமுறையினருக்கு ஒரு சிறு அறிமுகம்...

கன்னட நடிகையான ஜெயந்தி கன்னடப் படங்கள் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி உட்பட சுமார் 500 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். அவற்றில் 300 திரைப்படங்கள் கதாநாயகியின் நடிப்புத் திறனை தூக்கிப் பிடிக்கும் விதமான திரைப்படங்களாக அமைந்தவை ஜெயந்தியின் நடிப்புத் திறமைக்கு கிடைத்த வரம். தீவிர ஆஸ்துமா பிரச்னை காரணமாக நேற்று பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஜெயந்திக்கு வயது 73.

சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் விருதை 2 முறைகளும், சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்க விருதை ஒருமுறையும், சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றவர் ஜெயந்தி. பெல்லாரியில் பிறந்தவரான ஜெயந்தி கன்னட சினிமா உலகின் வலிமை மிகுந்த மன உறுதி மிக்க தைரியமான நடிகைகளுள் ஒருவராகக் கருதப்பட்டார். அந்தப் பெருமைக்காகவே கர்நாடக அரசு ஜெயந்திக்கு ‘அபிநய சாரதா ‘ விருது அளித்துக் கெளரவித்தது. முதன் முதலாக ஜீனு கூடு எனும் கன்னடப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஜெயந்தி. முதல் திரைப்படத்தில் இவருக்கு இணையாக நடித்தவர் கன்னட திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்ட ராஜ்குமார். இரண்டாவதாக ஜெயந்தி நடித்த மிஸ். லீலாவதி திரைப்படத்தின் கதை அந்நாளில் மிகப்புரட்சிகரமான கதைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. மிக கட்டுப்பெட்டித் தனமாக தாவணி மற்றூம் புடவை மட்டுமே அணிந்து நடிக்கும் அடக்க ஒடுக்கமான பெண்களை மட்டுமே கதாநாயகிகளாக காண்பிப்பது அன்றைய தென்னிந்திய திரையுலகின் எழுதப்படாத விதி. அந்த விதியை தமிழில் ஜெயலலிதா உடைத்தார் என்றால் கன்னடத்தில் அந்தப் பணியைச் செவ்வனே செய்தவர் ஜெயந்தி. கன்னடத் திரைப்படங்களில் முதன்முதலாக ஸ்கர்ட், டி.ஷர்ட், நைட்டி, ஸ்விம் ஷூட் எல்லாம் போட்டுக் கலக்கிய முதல் நடிகை ஜெயந்தி தான்.

ஜெயந்தியின் தந்தை பாலசுப்ரமணியம் பெங்களூரு செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஜெயந்தியின் குழந்தைப் பருவம் அத்தனை இனிமையானதாகக் கருதப்படவில்லை. அவர் சிறுமியாக இருக்கும் போதே அவரது பெற்றோருக்குள் கருத்து வேறூபாடு ஏற்பட்டு மனவிலக்குப் பெற்றுப் பிரிந்து விட்டனர். அதன் காரணமாக ஜெயந்தியின் அம்மா, தனது மகள் ஜெயந்தி மற்றும் தனது இரு மகன்களுடன் கணவரைப் பிரிந்து சென்னைக்கு வந்து விட்டார். திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன் ஜெயந்தியின் இயற்பெயர் கமலா குமாரி. . தென்னிந்திய திரைப்பட உலகில் 1962 முதல் 1979 வரை ஜெயந்தி பிஸியான கதாநாயகியாகத் திகழ்ந்தார். தமிழிலும் வலிமையான பெண் கதாபாத்திரங்களுக்கு ஜெயந்தியை அணுகலாம் எனும் நடைமுறையை உருவாக்கித் தந்த பெருமை இயக்குனர் கே. பாலச்சந்தரைச் சேரும். கே. பாலசந்தரின் இரு கோடுகள், வெள்ளி விழா, பாமா விஜயம், எதிர் நீச்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ஜெயந்தியின் புகழை தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாகப் பரப்பிய திரைப்படங்கள் எனலாம். தமிழில் அன்றைய காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த அனைத்து கதாநாயகர்களுடனும் ஜெயந்தி நடித்திருக்கிறார். அவர் ஜெமினி கணேசனுடன் அதிகத் திரைப்படங்களில் ஜோடியானவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அந்தக் காலகட்டத்தில் ஜெமினிக்கு, சாவித்ரியை அடுத்து பொருத்தமான ஜோடியாக ஜெயந்தி கருதப்பட்டார். இந்த ஜோடி இந்தியா முழுதும் பேசப்பட்ட ஜோடியாக அந்நாளில் கருதப்பட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் முன்னணியில் இருந்த வெற்றிகரமான அத்தனை கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையும் ஜெயந்திக்கு உண்டு. தமிழில் எம்ஜிஆருடன் படகோட்டி, முகராசி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் இவர் ஜோடியாக நடித்திராத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம். இந்தியா முழுவதும் அறியப்பட்ட முகமாக இருந்தும் ஏன் இப்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் கூட உங்களைப் பார்க்க முடிவதில்லை என்ற கேள்விக்கு ஜெயந்தி அளித்த பதில்;

‘எப்போதும் ஹீரோயினாகவே தான் நடிப்பேன் இல்லாவிட்டால் நடிக்கவே மாட்டேன் என்பதல்ல அதற்கு அர்த்தம், நான் நல்ல திரைப்படங்கள் பலவற்றில் பணிபுரிந்து விட்டேன். மிக நல்ல கதபாத்திரங்கள் பலவற்றில் மக்கள் என்னைப் பார்த்திருக்கிறார்கள். அதே போல இந்த பாத்திரத்தை ஜெயந்தி செய்தால் நன்றாக இருக்கும், அவரால் மட்டுமே இதை செய்ய முடியும் என்று இயக்குனர்கள் கருதினால் நான் தாராளமாக நடிக்கத் தயார். அப்படியில்லாமல், பெயருக்கு ஒரு அம்மா வேடம், அக்கா வேடம், அண்ணி வேடம், பாட்டி வேடமென்றால் என்னால் அது முடியாது’ என்பதே!

தமிழில் இருகோடுகள், வெள்ளி விழா, எதிர் நீச்சல், பாமா விஜயம் திரைப்படங்கள் வாயிலாக நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் மனதைப் பிரதிபலித்த ஜெயந்தியைப் பற்றி வெளிவரும் மாறுபட்ட செய்திகள் அவரது ரசிகர்களின் மனதை நிச்சயம் புண்படுத்தியிருக்கக் கூடும். ஆயினும் ஜெயந்தி நலமோடு இருக்கிறார் என்ற தகவலையும் தாண்டி ஜெயந்தி நலமாகவே இருக்க வேண்டும் என்றே சினிமா ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.