டி.எம்.சௌந்தரராஜன் பிறந்த நாளின்று

தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். செளந்தரராஜன், மதுரையில் 1923- ம் ஆண்டு இதே மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக் கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். அதிலும் தன் திறமையை மெருகேற்றிக் கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில் கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். “டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ” என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார்.

தெய்வாதீனமாக அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது. புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி செய்ய வந்திருந்தார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன் ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச் சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல் பாடிக் காண்பித்தான் சிறுவன். “சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர். திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.

சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடினார். மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின் சகாப்தம் துவங்கியது.

எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல…அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்…ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.

பாடல்களை பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின் இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம்பெறும் ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன் தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ் ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.

வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை. திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி ‘சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு’ என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.

இனிய நட்பான இசையமைப்பாளர் நன்று என்று சொன்ன பின்பும் தனக்கு திருப்தி வரவில்லை என்றதால் மீண்டுமொருமுறை சந்தர்ப்பம் வேண்டி பாடிய பாடலே இன்றும் நாம் கேட்டு மகிழும் எழுசிப்பாடலான ” நான் ஆணையிட்டால் ” என்ற பாடலாகும்.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தான் பாடி படமாக்கப்பட்ட பின்பு காட்சியை பார்த்துவிட்டு பொருந்தாது என்று மறுத்து அண்ணன் டி எம் எஸ் பாடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சிவாஜியின் வாயசைவுக்கு ஏற்ப திரையை பார்த்து பாடிய பாடல் ” பாலூட்டி வளர்த்தகிளி ” என்ற பாடல் என்று மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசைவிழாவொன்றில் டி எம் எஸ் -ஸை புகழ்ந்தார்.

அப்படி வாயசைப்பை உள்வாங்கி உணர்வை கூட்டி பாடுவது மிகவும் நுணுக்கமான வேலை அதை ஒரு போட்டியாக எடுத்து சாதித்திருக்கின்றார் டி எம் எஸ் என்றே நினைக்கின்றேன்.

கலையுலகில் பெரும் புகழுக்குரியவர்களாக இருந்த சிலரில் டி எம் எஸ் பெயரும் என்றும் நினைக்கத்தக்கது போற்றத்தக்கது..

டி.எம்.எஸ். பிறந்த நாள் சிறப்பு பதிவு