சின்னத்திரை நடிகர் & டப்பிங் சங்கத்தின் தேர்தல் கோஷம் என்ன?

தென்னிந்திய திரைப்பட,சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் சார்பில் வருகிற மார்ச் மாதம் 3 ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. ஜச்ட் 1300 பேர்கள் கொண்ட டப்பிங் சங்க வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் என்பது முறையாக நடத்தப்படாமல் தலைமையை தன்னிச்சையாக தேர்ந்தெடுத்து வந்தனர். முதல் முறையாக நீதிமன்ற தலையீட்டோடு நடுநிலையான ஒரு தேர்தலை இந்த முறை நடத்த இருப்பதால் “ராம ராஜ்யம் அணி”என்ற பெயரில் புதிய அணி களமிறங்குகிறது.

அந்த அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டிடும் ரோகினி தாங்கள் போட்டியிடுவது குறித்து விளக்கி பேசும் போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் எனக்கு தெரிந்து இதயத்தை திருடாதே என்ற படத்தின் மூலமாக நான் பின்னணி குரல் கொடுத்து வருகின்றேன். இதுவரை இந்த சங்கத்தில் எந்த பதவிக்கும் தேர்தல் நடந்தது கிடையாது நானும் எண்ணியது இல்லை ஆனால் இன்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. நான் வெளியில் சென்று பார்க்கும்போது விவசாய பிரச்சினைகள் உட்பட எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்கும் நான் என்னுடைய துறையில் நடக்கும் பிரச்சினையை நான் கவனிக்கவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்பதை நான் உணர்கிறேன். முதலில் நான் மூத்தவர்கள் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் நான் மற்ற வேலைகளை கவனித்து வந்தேன். ஆனால் மெல்ல மெல்ல முறைகேடுகள் நடைபெறுவதும் , உழல் நடைபெறுவதும் இன்னும் நிறைய பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருப்பதை பார்த்ததும் முதலில் இந்த பிரச்சினையை தான் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த ஒரு மாத காலமாக சங்கத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு நானும் பொறுப்புக்கு வரேன் அனைவரும் ஒன்றாக பணியாற்றலாம்..என்ற எண்ணம் தோன்றியது.

இதையடுத்து சங்க உறுப்பினர்கள் பலரின் வீடு வீடாக சென்று அவர்களை பார்த்த போது அவர்கள் அனைவரும் கூறிய ஓரே விஷயம் என்னவென்றால் நங்கள் டப்பிங் பேசியே ரொம்ப வருடங்கள் ஆகி விட்டதாக கூறினார்கள். பாலன் என்ற ஒரு உறுப்பினர் அவர் இறந்த பின்பு அவருடைய உறப்பினர் அட்டையை கொண்டுவந்து அவருடைய இறுதி சடங்கிற்கு தேவையான பணத்தை கேட்டதற்கு மதிக்கவே இல்லை என்றும் ஏனோ தானோ என்று 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறினர். இவ்வாறு பல நிகழ்வுகள் கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது இந்த நிலை மாறவேண்டும் என்றால் இந்த தேர்தலில் இவர்களுடன் கைகோர்த்து நிற்கவேண்டும். இந்த தேர்தலில் நான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன். 34 வருடங்களில் இவர்கள் உறுபினர்களுக்கு ஓய்வூதியம் பணம் , கல்வி உதவி தொகை என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு வேலை இல்லை என்பதை நான் ஓரு கலைஞராக உணர முடிகிறது. டப்பிங் கலைஞர்கள் அனைவர்க்கும் ஓரு சுழற்சி முறையில் வேலைகள் வர ஏற்பாடுகள் செய்யபட வேண்டும். இந்த முறைகேடுகளை எல்லா உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனபது தான் இந்த நிகழ்வு. இன்னும் 2 நாட்கள் மட்டும்தான் உள்ளது அணைத்து உறுப்பினர்களும் வந்து வாக்களிக்க வேண்டும். இனி ஒரு மாற்றம் வேண்டும் வேண்டும் அந்த மாற்றத்தினால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வந்து எங்கள் அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதே சங்க தேர்தலில் ராம ராஜ்ய அணி சார்பில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தாசரதி, “திரையில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கு உயிர் கொடுக்கும் அதாவது குரல் கொடுக்கும் கலையில் ஈடுபட்டுள்ள உறுபினர்களை கொண்டுள்ள சங்கம் எங்கள் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். இது 1983-ல் பதிவு செய்யப்பட்டது தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். அதில் இருந்து பல கட்ட வளர்ச்சிகளையும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளையும் எங்கள் சங்கம் பார்த்துள்ளது . திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை தவிர FEFSI கூட்டமைப்பில் உள்ள 23 சங்கங்களில் எங்கள் சங்கமும் ஒன்று. இதில் மற்ற 22 சங்கங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் எங்கள் சங்கத்தின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது மிகவும் பின்தங்கியே உள்ளோம் இதுவே உண்மை. காரணம் என்னவென்றால் மிகவும் பிரபலமான நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தால் மட்டுமே இந்த சங்கம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற மாயையை 3 தலைமுறைகளாக நம்ப வைத்ததுள்ளனர். அதை இந்த தலைமுறையிலாவது அதை உடைக்கவேண்டும் எனபது தான் இந்த போராட்டம்.

எங்கள் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கல்வி உதவித்தொகையில் முறைகேடு , சம்பளம் பிடித்தலில் முறைகேடு , மருத்துவ உதவி தொகையில் முறைகேடு , இதுமட்டுமல்லாமல் நல்உள்ளம் படைத்த சில கல்லூரிகள் வருடா வருடம் வழங்கும் குறிப்பிட்ட இலவச கல்லூரி சீட்டுகள் வரைக்கும் இவர்களின் முறைகேடுகள் நிகழ்கின்றன. சில முறைகேட்டை உறுப்பினர்கள் தட்டிகேட்டனர் ஆனால் அவர்கள் அனைவரும் அடக்கமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகினார்கள். சிலர் சங்க நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் சங்க விரோதிகள் என்கிற முத்திரையுடன் இந்த மாதிரியான செயல்களில் தொடந்து ஈடுபட்டு வருவதால் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ” ராம ராஜ்யம் ” அணியாக சந்திக்கவுள்ளோம்” என்றார்.

இவர்கள் குற்றம் சாட்டும் மற்றோரு அணித் தலைவரான ராதாரவியிடம் இது குறித்து கேட்ட போது, “இந்த சங்கத்துலே முறைகேடுன்னு லிஸ்ட் போட்டுத் எல்லாருக்கும் கொடுத்திருப்பதா கேள்விப்பட்டேன். அந்த லிஸ்டையும் அதற்கான ஆதாரத்தையும் எடுத்துக்கிட்டு வரட்டும், விளக்கம் சொல்லலாம். வெறும் 50 ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்த டப்பிங் கலைஞர்கள் இன்னிக்கு 4000 ரூபாய் வாங்கறதுக்குக் காரணம் நான். ராத்திரி ஒன்பது மணிக்கு மேல டப்பிங் போச்சுனா, பெண் கலைஞர்களுக்கு கார் தந்து அனுப்பி விடணுமுன்னு தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு அதையும் செய்து கொடுத்தேன்.

சங்கம் சார்பிலான ஃப்ரீ காலேஜ் சீட் வேணும்னா கல்லூரி நிர்வாகம் தரும். ஆனா, சங்க உறுப்பினர்கள் பையனோ, பொண்ணோ போதுமான மார்க் வாங்கி இருக்கணுமே… அதிக மார்க் வாங்கி சங்கத்தை அணுகினவங்களுக்கு காலேஜ் சீட் வாங்கிக் கொடுத்திருக்கோம். ஜெனரல் பாடிக்கு ஸ்டே வாங்கிட்டு பொதுக்குழு கூடலைனு சொன்னா, என்ன சொல்றது? யூனியனை சொந்தக் கட்டடத்துல இயங்க வச்சவனை யூனியன் பதவிக்கு வரக் கூடாதுக்கிறாங்க, நல்லதுக்கே காலமில்லாம போச்சு” என்றார் ராதாரவி.