மூன்றாம் பிறை ஸ்ரீதேவி-யும், ஊட்டி ரயில்வே ஸ்டேசனும்!

ஊட்டியை ஸ்ரீதேவி நடித்த பல படங்களில் ஓர் ஊராகப் பார்க்கமுடியும். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை உள்ளிட்ட படங்கள் ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டவை. ஆனால் ஒரு படத்தின் காட்சி மட்டும் இன்றும்கூட ஊட்டி மக்களின் மனங்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அது பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி. மூன்றாம் பிறையின் பெரும்பாலான காட்சிகள் ஊட்டிக்கு அருகில் எடுக்கப்பட்டவை.

மனம் கணக்கவைக்கும் க்ளைமேக்ஸ் காட்சி கேத்தி ரயில்வே நிலையத்தில் எடுக்கப்பட்டபோது, அந்தப் படப்பிடிப்பைப் பார்த்த அனுபவத்தை உள்ளூர் மக்களால் மறக்கமுடியவில்லை. நினைவுகளில் கரைபுரளும் சோகம்.

ஊட்டி ரயில் நிலையத்தில் தோட்டக்காரராகப் பணிபுகிறார் கேத்திக்கு அருகிலுள்ள உல்லாத்தி கிராமத்தைச் சேர்ந்த காக்கமல்லன், “மனதை உறையவைக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். எப்போதும் என் நெஞ்சத்தில் குடியிருக்கும் காட்சி அது. அந்த குறிப்பிட்ட காட்சியில் ஸ்ரீதேவிக்கு வசனங்கள் இல்லை. அதில் அவர் தனது சிறப்பான நடிப்புத் திறமையை நிரூபித்துக்காட்டினார்” என்கிறார்.

இந்தக் காட்சியை மூன்று நாட்கள் எடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

“மூன்றாம் பிறை படம் 1982 ஆம் ஆண்டு வெளியான பிறகு, கேத்தி ஸ்டேசன் சுற்றுலாப் பயணிகளால் பல ஆண்டுகளாக மூன்றாம் பிறை ஸ்டேசன் என்றே அழைக்கப்பட்டது. இன்றும் அப்படித்தான் அந்தப் படத்துடன் கேத்தி ஸ்டேசனை இணைத்துப் பார்க்கிறார்கள்” என்று நெகிழ்கிறார் காக்கமல்லன்.

அவரைப்போல கேத்தி கிராமத்தில் வசிக்கும் மதனும் படப்படிப்பைப் பார்த்திருக்கிறார். “அந்த ரயில்வே ஸ்டேசன் காட்சி படத்தின் முழு கதையையும் சொல்லிவிடும். எப்படி ஸ்ரீதேவி அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்தார் என்பதைு இன்னமும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவியின் ரோலை லட்சக்கணக்கான ரசிகர்கள் மறக்காமல் இருக்கிறார்கள்” என்கிறார்.

எத்தனையோ படங்களுக்கு ஊட்டியை படம்பிடித்திருந்தாலும், எப்போதும் இயக்குநர் பாலுமகேந்திராவின் இதயத்துக்கு நெருக்கமான இடத்தில் மூன்றாம் பிறை இருந்தது.