தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளரும், விஜயா-வாஹினி ஸ்டூடியோஸின் நிறுவனருமான மறைந்த பெரியவர் பி.நாகி ரெட்டியின் நினைவாக அவரது தபால் தலை இன்று வெளியிடப்பட்டது.நேற்று மாலை சென்னை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு, நாகி ரெட்டி நினைவு தபால் தலையை வெளியிட்டார். மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நாகி ரெட்டி பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது. புத்தகத்தை தமிழகத்தின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். இந்த புத்தகம் நாகி ரெட்டி அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின் ஒரு தொகுப்பாகும்.
இந்த புத்தகத்தை நாகி ரெட்டியாரின் மகனான மறைந்த B.வேணுகோபால் ரெட்டி அவர்களால் தொகுக்கப்பட்டது. விஜயா மருத்துவமனையின் அறங்காவலரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாரதி ரெட்டி இந்த புத்தகத்தை தொகுப்பதற்கு உதவி செய்துள்ளார்.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தமிழ்ச் சமுதாயத்திற்கும், தென்னக சினிமாவிற்கும் நாகி ரெட்டி செய்த செய்த பங்களிப்புகளை பற்றி உரையாற்றினார். மேலும் நாகி ரெட்டி அவர்களால் உருவாக்கப்பட்ட விஜயா குழும மருத்துவமனையை வழி நடத்தி கொண்டிருக்கும் தற்போதைய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வரிலால் புரோகித், தமிழக மீன் வளத் துறை மற்றும் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எம்.சம்பத், மூத்தத் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், பி.வெங்கட்ராம ரெட்டி, B.பாரதி ரெட்டி, நிர்வாகப் பொறுப்பாளர் B.வசுந்தரா, அறங்காவலர் B. விஸ்வநாதன் ரெட்டி மற்றும் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பல பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
பெரியவர் B. நாகி ரெட்டியார் ஓர் சிறந்த தயாரிப்பாளர், திரைப்பட கலைஞர், நூலாசிரியர், புத்தக வெளியீட்டாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். இவர் டிசம்பர் 1-ம் தேதி 1912-ல் பொம்மி ரெட்டி நரசிம்ம ரெட்டி – இருகுளம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாக ஆந்திர பிரதேசம், கடப்பா மாவட்டத்தில் உள்ள போட்டிபாடு கிராமத்தில் பிறந்தவர்.
இவர் ஆரம்ப காலத்தில் அவரது தந்தையுடன் இணைந்து குடும்ப தொழிலான வெங்காய வியாபாரத்தை கவனித்து கொண்டார். அனைவரின் மீதும் மாறாத அன்பும், எளிமையும் கொண்ட நாகி ரெட்டியார். தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் திறமை கொண்டவர்.
இவரது மூத்த சகோதரர் B.N. ரெட்டி திரைப்படத் துறையில் ஈடுபடுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார். 1948-ல் வாஹினி ஸ்டுடியோஸின் நிர்வாகத்தை தனது சகோதரர் பி.என் ரெட்டியிடம் இருந்து பெற்று, தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய ஸ்டூடியோவாக, 10 ஆண்டுகளுக்குள் அதை மாற்றிக் காட்டினார் நாகி ரெட்டியார்.
விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் தெலுங்கு படம் ‘செளகார்’. இந்த முதல் படத்தின் கதையை இவரது பல ஆண்டு வழிகாட்டியாக இருந்தவரும், இவரது நெருங்கிய நண்பருமான சக்ராபணி அவர்கள் எழுதியிருந்தார்.
1944-ல் ஒரு பத்திரிகையில் அச்சுப் பொறியாளராக பத்திரிகை துறையில் தனது தொழிலை ஆரம்பித்த பி.நாகி ரெட்டி, விரைவில் சக்ராபணியுடன் இணைந்தார். சமூக அரசியல் பத்திரிகையான ‘ஆந்திர ஜோதி’ பத்திரிக்கையை 1945-ல் வெளியிட்டார்.
இந்தியாவின் மிகப் பெரிய ஆஃப்செட் அச்சு பத்திரிகைகளில் ஒன்றான பிரசாத் பிரஸ்ஸை உருவாக்கி, அதில் இந்தியாவில் மிகப் பெரிய அளவிலான 24 தாள் ஒருங்கிணைந்த பதுக்கல் சுவரொட்டிகளை பிரத்தியேகமாக அச்சிட்டு அப்போதே இந்தியாவின் விளம்பர உலகத்தை மிரள வைத்தவர். பிரசாத்தின் பிரஸ் தென்னிந்தியாவிலேயே முதல் வகுப்பு பிரிண்டரை கொண்டிருந்தது. அச்சிடுவதில் சிறந்து விளங்குவதற்காக இந்தியாவில் அதிகபட்ச விருதுகளை பிரசாத் பிரஸ் பல முறை வென்றிருந்தது.
பி.நாகி ரெட்டியும் சக்ரபாணியும் இணைந்து இந்தியாவில் புகழ் பெற்ற குழந்தைகள் பத்திரிகையான ‘சந்தா மாமா’ பத்திரிகையை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் தொடங்கினார்கள். இந்தப் பத்திரிகையின் மூலம் இந்தியாவில் உள்ள குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்ளும் எண்ணம், தாய் மொழியை பற்றி அறியவும், சிந்திக்கவும் தூண்டுதலாகவும் இருந்தது.
இந்தப் புத்தகம் ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழிகள் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, ஒடியா, அசாமிஸ், குஜராத்தி, குரூமுகி (பஞ்சாபி), சிந்தி மற்றும் சாந்தலி போன்ற 14 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது. மேலும் ‘சந்தா மாமா’ பத்திரிக்கை பிரெய்ல் பதிப்பில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
நாகி ரெட்டி அவர்கள் தென்னிந்தியாவில் மிகப் பெரிய தொழிலதிபராக திகழ்ந்து, இதன் மூலமாக பல உயர் பதவிகளையும் வகித்தார். அனைத்து இந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் ஃபெடரேஷன் அமைப்பில் மூன்று முறை குழு தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக மூன்று முறையும், இந்தியாவின் திரைப்படக் கூட்டமைப்பு குழுவின் தலைவராக இரண்டு முறையும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
தனது நிறுவனத்திலிருந்து எந்தவித சுய லாபத்தையும் அடைய அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. பொதுமக்களுக்கு நல்லது செய்வதை மட்டுமே அவர் நினைத்தார். அவரது மிகப் பெரிய ஆசை, கனவெல்லாம் ஒரு தரமான மருத்துவ சேவையை தமிழ் மக்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் வழங்குவதுதான்.
இதற்காகவே 1972-ம் ஆண்டில் சென்னை, வடபழனியில் விஜயா மருத்துவமனையைத் தொடங்கினார். இது இப்போது சென்னையில் உள்ள மல்டி ஸ்பெஷல் சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர், விஜயா ஹார்ட் அறக்கட்டளை, மற்றும் விஜயா கண் அறக்கட்டளை ஆகிய அறக்கட்டளைகளை உள்ளடக்கியது .ஆரம்ப காலகட்டத்தில் விஜயா மருத்துவமனையில் 30 படுக்கைகள் மட்டுமே இருந்தன. தற்போது விஜயா மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் 600 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.விஜயா குழுமம் இப்போது தென் இந்தியாவின் மிகப் பெரிய சுகாதார பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், மிகவும் நம்பகமான மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஒரு பல் மருத்துவ நிலையத்தை துவங்கி நூற்றுக்கும் அதிகமான பேருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கினார்.
இத்தனை மிகப் பெரிய மனிதராக தென்னிந்தியாவில் திகழ்ந்து வந்த நாகி ரெட்டியாருக்கு பல விருதுகள் தேடி வந்தன. கிடைத்த விருதுகளெல்லாம் அவரால் பெருமையடைந்தன என்றே சொல்லலாம். 1987-ம் ஆண்டு ஆந்திர அரசாங்கத்தால் ‘ரகுபதி வெங்கையா விருது’ மற்றும் இந்திய அரசால் ‘தாதா சாஹேப் பால்கே’ உள்ளிட்ட விருதுகளையும் பி.நாகி ரெட்டி அவர்கள் பெற்றிருக்கிறார். 1973-ல் தமிழக அரசால் ‘கலைமாமணி’ விருதினை பெற்றார். 1978-ல் அனைத்திந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பில் இருந்து ‘ஜோகன்னஸ் குடன்ன்பர்க் ஃபெல்லோ’ விருது வழங்கப்பட்டது .
‘TMA Pai’ விருது மணிப்பாலின் அகாடமி ஆஃப் ஜெனரல் எஜுகேஷனில் இருந்து வழங்கப்பட்டது.1982-ம் ஆண்டு ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்திலும் 1990-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண தேவராயா பல்கலைக் கழகத்திலிருந்து D.Lit (Honoris Causa) பட்டத்தையும் பெற்றார்.
அவரது தபால் தலை வெளியிடப்பட்டது தென்னிந்தியாவின் சினிமாத் துறையினருக்கும், பத்திரிகை துறையினருக்கும், மருத்துவத் துறையினருக்கும் பெருமையளிக்கக் கூடிய செயலாகும்..!