ஏ.பி.நாகராஜன், பி.ஆர். பந்துலு தொடங்கி கே.பாலச்சந்தர், வஸந்த், கார்த்திக் சுப்புராஜ் வரை நீளும் இயக்குனர்கள் பலர் வெவ்வேறு கதைகளை ஒன்றிணைத்து ஒரு புள்ளியில் இணைக்குமாறு கதைகளை புனைந்து படங்களை உருவாக்கினர். அண்மையில் துல்கர் சல்மானின் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழில் வெளிவந்த சோலோ திரைப்படம் அந்தாலஜி முறையைக் கொண்டிருந்தது. அதாவது படத்துக்குள் இருக்கும் வெவ்வேறு விதமான கதைகளில் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் எவ்விதத் தொடர்புமிருக்காது. அப்படியான புதுவிதமான முயற்சியை தமிழில் 6 அத்தியாயங்கள் திரைப்படம் மூலம் கையாண்டுள்ளனர்.
இப்படத்தில் கேபிள் ஷங்கர், அஜயன் பாலா, சங்கர் தியாகராஜன் உட்பட 6 இயக்குனர்கள் இயக்கியிருக்கும் கதைகளில் பசங்க கிஷோர் , சேதுபூமி தமன் உள்ளிட்ட வளர்ந்து வரும் நடிகர்களும் பல புதிய கலைஞர்களும் பணிபுரிந்துள்ளனர். கதையின் உள்ளடக்கத்துக்கும், திரைமொழியின் வடிவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள கதைகளை அந்தாலஜி முறையில் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 23 அன்று திரைக்கு வருகிறது.
உலக சினிமா முதலான பல திரைப் புத்தகங்களை எழுதிய அஜயன் பாலா இதில் ஒரு படத்தை எடுத்துள்ளார். சி.எஸ்.சாம், தாஜ்நூர் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களைத் தவிர்த்து புதுமுக கலைஞர்களின் பங்களிப்பில் உருவான இப்படத் தொகுப்பு தரமானதாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஒட்டுமொத்த குழுவினரும் தெரிவித்துள்ளனர். இந்த 6 படங்களில் ஒரு படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் சங்கர் தியாகராஜனே இப்படங்களைத் தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.