சரத்குமார், அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாம்பன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்!

ஒரு கையில் எடுத்த சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல் ஆயுத்தை விடாமல் மறுபக்கம் ஏதாவதொரு சினிமாவில் தொடர்ச்சியாக பயணித்து வரும் சரத்குமார், அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாம்பன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் ஒரு நாள் 2 படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சரத் குமார். அதுமட்டுமல்லாது ரெண்டாவது ஆட்டம், நல்லாசிரியர் படங்களிலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது பாம்பன் என்ற பெயரில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 31) பாடல் பதிவுடன் துவங்குகிறது.

சரத்குமாரின் பல படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்தக் கூட்டணி இதற்கு முன்பு மகா பிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம் உள்ளிட்ட பல படங்களைத் தந்திருக்கிறது. தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது. வெங்கடேஷின் பல படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். உதயக்குமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிய, இந்திரா சௌந்திரராஜன் எழுத்துப் பணிகளை மேற்கொள்கிறார்.SSK புரொடக்‌ஷன் சார்பில் SSK. சங்கரலிங்கம் இந்த படத்தைத் தயாரிக்கிறார். இதன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.