ஜெயம் ரவியின் 25ஆவது படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல்!

தற்போதும் திரையரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மோகன் ராஜா அதை மறுத்து வந்தார். இதனிடையே பல தெலுங்குப் படங்களைத் தமிழில் ரீமேக் செய்தவர் மோகன் ராஜா. அவர் ரீமேக் செய்த ‘ஜெயம்’ படத்தில்தான், அவருடைய தம்பி ரவி ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதால், இன்றுவரை அவர் ஜெயம் ரவி என்றுதான் அழைக்கப்படுகிறார். அதன்பிறகு ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ போன்ற பல படங்களை இயக்கினார் மோகன் ராஜா.

direr

மோகன் ராஜாவே சொந்தமாகக் கதை எழுதி, இயக்கிய படம் ‘தனி ஒருவன்’. ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. அதன்பிறகு ‘வேலைக்காரன்’ படத்தின் கதையையும் சொந்தமாக எழுதி, இயக்கினார். சிவகார்த்திகேயன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிம்புதான் மோகன் ராஜாவின் அடுத்த ஹீரோ என புரளி கிளம்ப, அதை மறுத்துள்ளார் மோகன் ராஜா. நமக்கு கிடைத்த தகவல்படி, மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிப்பது அவருடைய தம்பி ஜெயம் ரவி தான் என்கிறார்கள். ஜெயம் ரவி தற்போது ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார். சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். வருகிற 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

‘டிக் டிக் டிக்’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அவரின் 24வது படம் இது. எனவே, 25வது படம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மோகன் ராஜா ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்குகிறார். இந்தத் தகவலை ஜெயம் ரவி உறுதி செய்துள்ளார்.