சாய் பல்லவி காட்டில் மழை!

விக்னேஷ் சிவன்-சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் `தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ள நிலையில், அதற்கான இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தையடுத்து செல்வராகவனின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 36ஆவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் நாயகிக்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் சாய் பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது குறித்த அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவிருக்கிறது. அடுத்த வருடம் தீபாவளியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டுவருகின்றனர்.

பிரேமம் படத்தின் மூலம் தமிழ், மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சாய் பல்லவி, தெலுங்கு சினிமாவுலகிலும் கவனம் செலுத்தி அங்கும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் `கரு’ படம் வெளிவருவதற்கு முன்பே தனுஷின் `மாரி 2’ மற்றும் சூர்யாவின் 36 ஆவது படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர கார்த்தியின் அடுத்த படத்தில் நடிக்க வைக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.