‘படத்துல யார் பேய்?’ – பலூன் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுவாரஷ்யம்!!

70 MM Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பலூன்’. இந்தப் படத்தில் ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் மூவரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை, சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் வெளியிடும்  பலூன் படத்தின் ட்ரைலர் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது.

balloon_press_meet-1

விழாவில் தயாரிப்பாளர் கந்தசாமி நந்தகுமார் பேசும்போது, “இது நான் தயாரிக்கும் முதல் படம். நண்பர் அருண் பாலாஜிதான் இயக்குநர் சினிஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். சினிஷ் என்னிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக கதை சொன்னார். அவர் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஜெயிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்குள் எழுந்தது. உடனேயே படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்டேன்.

போஸ்டர் நந்தகுமார் ஸார் நான் படம் தயாரிக்க இருப்பதை அறிந்தவுடன், ‘உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை?’ என்றார். ஆனாலும், ‘படத்தை நாங்க ஆரம்பிச்சிடுறோம். எங்களுக்கு உதவி தேவைப்படுறப்போ மட்டும் உதவி பண்ணுங்க’ன்னு அவரை கன்வின்ஸ் பண்ணிக் கேட்டுக்கிட்டேன். நந்தகுமாரும், தேனப்பன் ஸாரும் எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்தார்கள். நாங்கள் நினைத்த நிறைய விஷயங்கள் தவறிப் போனாலும், அதைவிட நல்ல விஷயங்கள் இந்தப் படத்தின் மூலம் எங்களுக்குக் கிடைத்தன…” என்றார்.

dhilip subbarayan

சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் பேசுகையில், “ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நானும் ஒரு தயாரிப்பாளராக இருந்தேன். பின்னர் ஒரு சில காரணங்களால் விலகிவிட்டேன். நட்புக்காக என்ன வேணாலும் செய்வான் இயக்குநர் சினிஷ். மிகவும் தன்னம்பிக்கையான மனிதன். தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கக் கூடிய ஒரு இயக்குநர் சினிஷ். அந்த எண்ணத்துக்காக இந்த படம் வெற்றி பெற வேண்டும்…” என்றார்.

பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில், “முதல்முறையாக இந்தப் படத்தில்தான் அனைத்து பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். அதற்காக இயக்குநர் சினிஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பட இயக்குநருக்கு இவ்வளவு பெரிய படம் அமைவது பெரிய விஷயம். காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என்ற ஒரு கலவையான படம் இது. நிறைய கஷ்டங்களை தாண்டித்தான் மொத்த படமும் முடிந்திருக்கிறது…” என்றார்.

படத் தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “இந்தப் படத்தில் எல்லோருமே பேய் மேக்கப் போட்டிருப்பதால், டிரெயிலரை பாத்தவங்க எல்லாரும், ‘படத்துல யார் பேய்?’ என்று கேட்கிறார்கள். உண்மையில் பேய், இயக்குநர் சினிஷ்தான். படத்தை முடிக்க, பேய் மாதிரி வேலை பார்த்திருக்கிறார்…” என்றார்.

janani iyer

நாயகி ஜனனி ஐயர் பேசுகையில், “இந்த ‘பலூன்’ திரைப்படம் என்னுடைய முதல் ஹாரர் படம். நிறைய படங்களில் முதலில் என்னிடம் பேசிவிட்டு, பின்னர் என்னிடம் சொல்லாமலேயே வேறு பெரிய நாயகிகளை ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் சினிஷ் உறுதியாக ‘எனக்கு உங்களை மாதிரி நன்றாக தமிழ் பேசும் நாயகிதான் வேண்டும். நீங்கள்தான் இந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்..’ என்று உறுதியாய் சொல்லி என்னை ஒப்பந்தம் செய்தார். இந்த ‘பலூன்’ திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது…” என்றார்.

mahesh govindaraj

படத்தை விநியோகிக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மகேஷ் கோவிந்தராஜ் பேசுகையில், “நான் இந்த படத்துக்குள் வர முக்கிய காரணமே இயக்குநர் சினிஷ்தான். போஸ்டர், டீசர்ன்னு இந்தப் படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘பலூன்’ படத்துக்கு முந்தைய வாரம் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனாலும் எங்கள் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என உறுதியாய் நம்புகிறேன். ரிலீஸுக்கு முன்பே ‘பலூன்’ படத்தின் எல்லா ஏரியாக்களும் விற்பனை ஆகிவிட்டன…” என்றார் சந்தோஷமாக.

director sinish

அறிமுக இயக்குநர் சினிஷ் பேசுகையில், “நான் துவக்கத்தில் ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவியாளராக வேலை செய்தேன். பின் ஒரு குறும்படம் எடுத்து அதுவும் சொதப்ப, அடுத்து ஒரு கதையோடு தயாரிப்பாளரை தேடி அலைந்தேன்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ‘ஒரு பேய் கதை வேண்டும்’ என்று கேட்டார். அதற்காக 30, 40 ஆங்கில படங்களை பார்த்து, அதை வைத்து ஒரு கதை ரெடி பண்ணினேன். ஆனால் அந்தப் படம் துவங்கவில்லை. அப்போது நான் தயாரித்த கதை இப்போதும் என்னிடம்தான் உள்ளது.

எதிர்காலத்தில் அதை வைத்து நான் படமெடுத்தால், அந்தக் கதை உருவாக்கத்துக்கு உதவிய, நான் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை நிச்சயமாக அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் போடுவேன்.

‘மெளன ராகம்’ படத்தை காப்பி செய்து புது படத்தை இயக்கிவிட்டு ‘மெளன ராகம்’ படத்தை நான் பார்த்ததே இல்லை என்றெல்லாம் நிச்சயமாக பொய் சொல்ல மாட்டேன்.

இந்தப் படத்தின் பாதி கதை ரெடியான நேரத்தில் கதையை கேட்ட நண்பர் திலீப் சுப்பராயன் படத்துக்கு ஹீரோ, தயாரிப்பாளர்கள் கிடைக்க உதவியாய் இருந்தார். நிறைய பிரச்சினைகள் வந்தன, அதையும் தாண்டி படம் வளர்ந்தது.

எனக்கு  பாஸிடிவ்வாக கூடவே இருந்தார் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ். நம்மை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவன் நான். அதற்கு நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். படத்தை ஓட வைக்க எல்லா வகையிலும் விளம்பரப்படுத்துவதில் தவறில்லை…” என்றார்.

படத்தின் நாயகி அஞ்சலி, கலை இயக்குநர் சக்தி, பேபி மோனிகா, மாஸ்டர் ரிஷி, நடிகர் கார்த்திக் யோகி, தயாரிப்பாளர் அருண் பாலாஜி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.