நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை என பல துறைகளிலும் தனிச் சாதனைப் ப்டைத்தவர் ‘மராட்டிய திரைப்பட மேதை’ வி.சாந்தாராம்.
மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் இதே நவம்பர் 18ம் தேதி பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சி யிலும் ஈடுபட்டுவந்தார். ஆனாலும் 1901-ல் கோல்காபூரில் இருப்புப் பாதை பராமரிக்கும் வேலையில் 15 ரூபாய் சம்பாதித்து வந்தார் இவர். இதுபோலவே தன்னுடைய 16-வது வயது வரை பல சில்லறை வேலைகளைச் செய்து வந்தார். எந்த வேலையைச் செய்தாலும் சினிமா பார்ப்பதை மட்டும் அவர் விடவே இல்லை. படங்களைப் பார்த்து அவராகவே நடிக்க ஆரம்பித்தார்.
அப்போது கோல்காபூரில் பாப்பு ராவுவால் ஆரம்பிக்கப்பட்ட மஹாராஷ்டிர சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார். அங்குதான் சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் முதலிய நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தார். தனது நண்பர்களுடன் இணைந்து 1929-ல் ‘பிரபாத் ஃபிலிம் கம்பெனி’யை நிறுவினார். இந்தியாவில் திரைப்பட ஸ்டுடியோக்கள் வட நாட்டில்தான் முதலில் தோன்றின. இந்தியாவின் பிற பகுதியில் இருந்தவர்கள் கூட மஹாராஷ்டிராவிலிருந்த ஸ்டுடியோக்களான கோல்காபூர், புனே, மும்பை ஸ்டுடியோக்களில் தான் தமிழ், தெலுங்கு படங்கள் தயாராயின. அதனால்தான் தொடக்ககாலத் தமிழ்ப் படங்கள் மராட்டியப் பண்பாட்டுடன் வெளிவந்தன.
1913-ம் ஆண்டு தாதா பால்கே, ‘ராஜா ஹரிச்சந்திரா’வை எடுத்திருந்தார். இதே கதையை 1932-ம் ஆண்டு ‘அயோத்தி எச்சே ராஜா’ என்ற பெயரில் இயக்கினார் சாந்தாராம். தொடக்க காலத்தில் பெண் வேடத்திற்கு ஆண்களே நடிப்பார்கள். அதை மாற்றி முதன் முதலில் பெண்களையே நடிக்க வைத்தவர் சாந்தாராம் தான். துர்கா கோட் என்ற நடிகை இவரது நிறைய படங்களில் நடித்தார்.
இப்படி மெளனப்படக் காலத்திலேயே 6 படங்களை இயக்கியவர், 1934-ம் ஆண்டு முதல் இந்தி, மராத்தி மற்றும் தமிழிலும் படமெடுக்கத் தொடங்கினார். அப்போது வெளிவந்த ‘அம்ரித் மந்தன்’ என்ற படம் இந்தியிலும், மராத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
1936-ல் இந்தியிலும், மராத்தியிலும் வெளிவந்த ‘அமர் ஜோதி’, வெனிஸில் நடைபெற்ற சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டு வெளிவந்த ‘துனியானாமேனே’ என்ற படத்தில் பெண்களின் பிரச்னையை முதன்மையாக எடுத்துக் கொண்டு, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுடன் காட்சிகளைப் படைத்தார். வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொள்ளும் வழக்கத்தைக் கண்டித்து விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இந்தப்படத்தின் பிரதிபலிப்பு 1930, 40-களில் தமிழ், தெலுங்கு, வங்கப்படங்களில் காணப்பட்டது.
1939-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘ஆத்மி’ என்கிற படம், பாலியல் தொழிலில் இருந்துகொண்டு மீள நினைக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் எடுத்துக் காட்டியது. 1941-ல் ‘படோசி’ என்கிற படம் வெளிவந்தது. இந்து, முஸ்லிம் உறவின் மேம்பாட்டை வலியுறுத்துவதாக அந்தப் படம் இருந்தது. நண்பர்கள் இருவர் இனக்கலவரத்தில் இறந்து விடுகின்றனர். அதை உருவகப்படுத்தி ஒரு பெரிய அணைக்கட்டு உடைவது போல காட்சிப்படுத்தியிருந்தார்.
1941-ம் ஆண்டு பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி, ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்கிற திரைப்படக் கம்பெனியை ஏற்படுத்தினார். அதன்மூலம் காளிதாசரின் சகுந்தலத்தை திரைப்படமாக்கினார். வெளிநாட்டில் வர்த்தக ரீதியில் திரையிடப்பட்ட முதல் படம் இதுதான்.
இந்திய மருத்துவர் ஒருவர் சீனப்போரில் கலந்துகொண்டு வீரர்களுக்கு முதலுதவி செய்து பெயர்பெற்றார். சீனச்செவிலியை திருமணம் செய்துகொண்டு அங்கேயே இறந்தார். அவர் ஒரு மராட்டியர். அவரது வாழ்க்கையை வைத்து கே.ஏ.அப்பாஸ் ‘திரும்பி வராத ஒருவர்’ என்ற நாவலை எழுதினார். அந்தப் புத்தகத்தைப் படித்த சாந்தாராம், நாவலாசிரியரை திரைக்கதையாக்கித் தரச்சொல்லி, அதனை ‘கோட்நிஸ்கா ககாணி’ என்கிற பெயரில் திரைப்படமாக்கி வெளியிட்டார். சோசலிச நாடுகளில் இந்தப்படம் சிறப்பாக வெளியிடப்பட்டது.
1959-ம் ஆண்டு பாடல், நாட்டியம் இவற்றை வலியுறுத்தி ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்கிற படத்தை வெளியிட்டார். இதுதான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம் ஆகும்.
ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்ட 6 சிறைக்குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை உயர்த்திய அதிகாரியின் உண்மைக் கதையை வைத்து ‘தோ ஆன்கி பாரஹாத்’ என்கிற படத்தை எடுத்தார். இதன் சமூக உள்ளடக்கம் கருதி 1957-ம் ஆண்டு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருதினை பெற்றது. தனது வாழ்வின் இறுதிவரை அவர் சிறந்த இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக விளங்கினார். முன்பு இயக்கிய ‘சகுந்தலா’ திரைப்படத்தை ‘ஸ்த்ரி’ என்ற பெயரில் வண்ணப்படமாகத் தயாரித்தார்.
தமிழ்நாட்டுடன் சாந்தாராமுக்கு நெருக்கமான உறவு இருந்தது. அவர் படம் தயாரித்ததால் மட்டுமல்ல; படத்தயாரிப்பினை எவ்வாறு செய்யவேண்டும், சமூகப்படங்களை எவ்வாறு எடுக்கவேண்டும் என்கிற முறையினைக் காண்பித்தார். சாந்தாராமின் ஆளுமை எம்.ஜி.ஆரைப் பெரிதும் கவர்ந்த்தது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சாந்தாராமின் காலில் விழுந்து ஆசி பெற்றார். சாந்தாராமின் ‘தோ ஆன்கி பராஹாத்’ என்ற படத்தை தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்று 20 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். எடுத்தார். இதே போல சாந்தாராமின் ‘அப்னாதேஸ்’ என்கிற படம் ‘நம் நாடு’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர்’ நடிப்பில் வெளிவந்தது. சாந்தாராமால் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மராட்டிய நடிகை சாந்தா ஆப்தே. இவர் அந்தக்காலத்திலேயே தமிழக ரசிகர்களுக்கு தமிழில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவரை நினைவுறுத்தி உள்ளது கூகுள்