சோலோ -படத்தைச் சாகடிக்காதீர்கள்! – துல்கர் சல்மான் வேண்டுகோள்!

0
421

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா சர்மா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிய படம் சோலோ. மாறுபட்ட விமர்சனங்களை பெற்று வரும் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படம் வெளியான பிறகு மாற்றப்பட்டது. இந்நிலையில், ‘சோலோ’வை கொன்றுவிடாதீர்கள். கெஞ்சிக் கேட்கிறேன் என்று துல்கர் சல்மான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது இதோ:

கடுமையான வேலைகளுக்கு மத்தியில் நான் நடித்த சோலோ படத்தை பார்த்தேன். நான் நினைத்துப் பார்த்ததைவிட படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். ஒரே நேரத்தில் இரு மொழியில் எடுக்கப்பட்டதால் இங்கும், அங்கும் வசன ரீதியாக சில பிரச்னைகள் இருப்பதை உணர்கிறேன். அதுமட்டுமின்றி ‘சேகர்’ பாகத்தை கொஞ்சம் நீட்டித்தி ருக்கலாம். எனினும் எனக்கு சோலோ ரொம்ப பிடித்திருக்கிறது. இதுவே உண்மையான வெர்சன். பிஜாய் நம்பியார் மனதில் நினைத்ததை அப்படியே படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

‘சோலோ’ போன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாகும். கதையைக் கேட்டது உடனே பிடித்துப்போய் நடிக்க ஒத்துக் கொண்டேன். படப்பிடிப்பில் ஒவ்வொரு நொடியும் விரும்பியே நடித்தேன். திரையில் அதன் இறுதி வடிவமும் ரொம்ப பிடித்திருக்கிறது. இந்த படத்துக்காக மனமுவந்து உழைத்தேன். வித்தியாசமாக இருக்கிறது என நாம் நினைக்கும் படங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் உழைக்கத் தயார்.

சார்லி, பெங்களூர் டேஸ் படத்தைப் போல `சோலோ’ இல்லை என சிலர் சொல்கின்றனர். ஏன் இதில் நடித்தேன் என்றும் கேட்கிறார்கள். இது போன்ற முயற்சி தேவையற்றது என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த மாதிரி வித்தியாசமான படத்தில் நடிக்கவே நான் விரும்புகிறேன். எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிக்கவே முயற்சிக்கிறேன்.

வித்தியாசம் என்ற வார்த்தை சினிமாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் ரசிகர்களில் சிலருக்கு வித்தியாசத்தை பிடிக்கவில்லை. இந்த பூமியில் இருக்கும் பல்வேறு கதைகளுக்கு ஏற்ப பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அந்த வித்தியாசங்களுக்கு பல்வேறு முரண்பாடுகளும் இருக்கிறது. உங்களுக்கு அது பற்றிய ஞானம் இல்லை என்றால் அதை தவறு என்று கூறுவது நியாயமாகாது. நீங்கள் அப்படி நினைத்தால் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

‘சோலோ’ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ருத்ராவின் கதையைப் பற்றி சிலர் கிண்டல் செய்யும்போது மனது வலிக்கிறது. எனக்கு தெரிந்து அந்தப் பகுதியில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் நடித்தார்கள். இதில் வரும் காட்சிகள் மிகவும் தனித்தன்மையுடனும், தைரியமாகவும் இருப்பதாக நினைத்து ஆர்வமாக இருந்தோம்.

அது சில உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டிருந்தது. அதைப் போன்ற சில செய்திகளையும் நாம் பார்த்திருக்கலாம். அதுபற்றி படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதை நகைச்சுவையாகச் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். அது எதிர்பாராதவிதமாக ரசிகர்கள் கிண்டலடிக்கும் விதமாக நகைச்சுவையாக மாறிவிட்டது என சிலர் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பிஜாய் அந்தப் பகுதியை சொல்லும்போது நகைச்சுவையாகத் தான் இருந்தது. நான் திரையில் பார்க்கும்போதும் நகைச்சுவையாகத் தான் இருந்தது. ஆனால் கதாபாத்திரங்களின் பார்வையில் அது நகைச்சுவை அல்ல. அவர்கள் சோகமாகவும், உடைந்து போயும் இருப்பார்கள்.

மக்கள் எங்களுடன் சேர்ந்து சிரிக்கிறார்களா, எங்களைப் பார்த்து சிரிக்கிறார்களா என்பது புரியவில்லை. டார்க் காமெடி வகை அப்படித்தான் விநோதமாக இருக்கும். அதுதான் எங்கள் நோக்கமும் கூட. உங்களுக்கு அது புரியவில்லை என்பதால், திரையரங்குகளில் கூச்சல் போட்டு, எதிர்மறையான எண்ணங்களைப் பரப்பி, படத்தை தரக்குறைவாக பேசுவது படத்தையே சாகடிக்கும். மனங்களை உடைக்கும். நீங்கள் கொடுத்த ஊக்கத்தை நீங்களே நொறுக்குவதா?

எனவே உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். சோலோவை சாகடிக்காதீர்கள். எந்தவித எதிர்பார்ப்பின்றி திறந்த மனத்துடன் படத்தைப் ஒருமுறை பாருங்கள். கண்டிப்பாக ரசிப்பீர்கள்.

நான் எப்போதும் இயக்குநர் பிஜாய் நம்பியார் மற்றும் படத்தின் அவரது வடிவத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். படத்தை வெட்டி மீண்டும் மாற்றுபவர்கள் படத்தை சாகடிப்பவர்களே என்று கூறியிருக்கிறார்.