தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் கூரிய போர் வாளாகவும், மாபெரும் நடிகனாகவும் மிளிர்ந்த நடிகவேள் என போற்றி புகழப்பட்ட எம்.ஆர்.ராதா குறித்து இன்றைய இளம் பெரியாரிய சிந்தனைவாதிகள் பலரும் மறந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. பெரியாரின் தலையாய தொண்டராக இருந்த எம்.ஆர்.ராதா, பெரியாரின் மறைவுக்கு பின் ஆறு ஆண்டுகள் கழித்து பெரியார் பிறந்த இதே செப்டம்பர் 17இல் உயிர் துறந்தார். கரகரப்பான குரலுக்கு சொந்தக் காரரான ராதா போன்ற ஒரு அறிவார்ந்த பகுத்தறிவுவாதியை தமிழ் சினிமா உலகம் இதுவரை கண்டது இல்லை. அவருக்குப் பிறகும் அந்த இடத்தை நிரப்ப இன்று வரை யாரும் பிறக்கவில்லை என்பதே உண்மை.
ஆம்.. கட்டியம்கூற தேவையில்லாத காவியக்கலைஞன். நடிகன் என்பவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற இலக்கணத்தை உடைத்தெறிந்த மாமனிதன்.. மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்கிற எம்.ஆர்.ராதா. இன்று அந்த மாபெரும் கலைஞனின் நினைவுநாளையொட்டிய பதிவிது.
எம்.ஆர்.ராதா பிறந்தது சென்னையில்தான்.. சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திய எம்.ஆர்.ராதா ஜெகநாத ஐயர் என்பவரின் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அங்கே கதரின் வெற்றி, பதிபக்தி போன்ற நாடகங்களில் நடித்தார். முதன்முதலாக 1937ஆம் ஆண்டு ‘ராஜசேகரன்’ என்ற சமூகப்படத்தில்தான் வில்லனாக நடிக்க எம்.ஆர்.ராதாவுக்கு வாய்ப்பு வந்தது..
எம்.ஆர்.ராதாவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன ‘மார்டன் தியேட்டர்ஸ்’ உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் அவருக்காக ‘சத்திய வாணி’ என்ற படத்தை எடுத்தார். அதில் எம்.ஆர்.ராதாதான் கதாநாயகன். 1940-ல் வெளிவந்த அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடாததால், தனக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று மீண்டும் நாடக உலகிற்கே திரும்பினார் எம்.ஆர்.ராதா.
பிறகு சொந்தமாக நாடகக் கம்பெனி தொடங்கிய எம்.ஆர்.ராதா. “ரத்தக்கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமிகாந்தன்”, “பம்பாய் மெயில்”, “விமலா”, “விதவையின் கண்ணீர்”, “நியூஸ் பேப்பர்”, “தசாவதாரம்”, “போர் வாள்” போன்ற நாடகங்களை நடத்தினார். இவற்றில் மிகவும் புகழ் பெற்றது “ரத்தக்கண்ணீர்” நாடகம்தான். கிட்டத்தட்ட 3500 தடவை மேடை ஏறிய நாடகம் இது.
‘இரத்தக் கண்ணீர்’ நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் கேட்கவே, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சினிமாவில் மீண்டும் காலடி எடுத்துவைத்தார் எம்.ஆர்.ராதா. ‘ரத்தக்கண்ணீர்’ படமாக்கப்பட்டபோது அதற்குமுன் சினிமாவில் அதிகபட்சமாக ஒருலட்ச ரூபாய் வாங்கிய கே.பி.சுந்தராம்பாளைவிட தனக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகம் தரவேண்டும் என்று கேட்டு வாங்கினார் ராதா. கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1954-ல் வெளியான இந்த படம் இன்றும் தமிழ்சினிமா எனும் மணிமகுடத்தில் ஒரு வைரமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது.
அதன்பின் மூன்று ஆண்டுகளுக்குப்பின், 1958-ஆம் வருடம் மூன்றே வாரங்களில் தயாரிக்கப்பட்டு வெளியான”நல்ல இடத்து சம்பந்தம்” வெற்றிகரமாக ஓடியது. இதில் ராதாவுக்கு ஜோடியாக சவுகார் ஜானகி நடித்தார். “மாறுபட்ட வேடங்களில் ராதா சிறப்பாக நடிப்பார். குறுகிய காலத்தில் படத்தைத் தயாரிக்க ஒத்துழைப்பு தருவார்” என்ற நம்பிக்கை பட அதிபர்களிடையே ஏற்படவே, போட்டி போட்டுக் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்தனர்.
அதன்பின்னர் ராதாவின் ஆளுமை சினிமாவிலும் தொடர்ந்தது. தமிழ்சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்களான எம்.ஜி.ஆரும் சிவாஜியும்கூட எம்.ஆர்.ராதாவிடம் மிகப்பெரிய மரியாதை கொண்டிருந்தனர். காரணம் இவர்கள் இருவரும் நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஆர்.ராதா நாடக உலகின் முடிசூடிய மன்னர். எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா என்றும், சிவாஜியை ‘கணேசா என்றும் அழைக்கும் உரிமை நடிகர்களில் அவர் ஒருவருக்குத்தான் இருந்த்து..
1959-ல், சிவாஜிகணேசனுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” வெளிவந்தது. படம் மகத்தான வெற்றி பெற்றதுடன், எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. சிவாஜியுடனும், எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார் எம்.ஆர்.ராதா.
ரத்தக்கண்ணீர், பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப்பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா, வேடைக்காரன் ஆகியவை எம்.ஆர்.ராதா நடித்த.. இல்லையில்லை.. வாழ்ந்துகாட்டிய சில படங்கள். 125 படங்கள் வரை நடித்த ராதா 1963ஆம் ஆண்டில் சாதனையாக 22 படங்களில் நடித்தார். அவர் நடித்த கடைசி படம் 1979ல் வெளியான ‘பஞ்சாமிர்தம்’.
மு.கருணாநிதி என்று அழைக்கப்பட்டு வந்தவரை ‘கலைஞர் கருணாநிதி என்று அழைத்து பட்டம் கொடுத்தவர் எம்.ஆர்.ராதா. நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் என்று கலைஞரும் அவரை பாராட்டி இருக்கிறார். ஈரோட்டில் ‘விதவையின் கண்ணீர்’ நாடகம் நடந்தபோது அந்த நாடகத்தை பார்த்த அறிஞர் அண்ணா, “நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவதும் ராதா ஒரு நாடகம் நடத்துவதும் சமம்” என்று புகழ்ந்தார்.
1966ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் ‘மொழி தெரியாத கவர்னர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்கமாட்டேன்’ என்று கூறி விருதுபெற மறுத்துவிட்டார் எம்.ஆர்.ராதா.
ஒரு நடிகன் என்ற முறையில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்தார் என்றாலும் எம்.ஆர்.ராதா என்ற ஆளுமையின் தாக்கம் அவர் எற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களின் மீதும் பதிந்திருந்தது. அதுதான் வில்லன் என்ற கதாபாத்திரத்தையும் மீறி அவர் சொல்லும் கருத்துக்களை ரசிகனிடம் கொண்டு சேர்த்தது.
விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். ‘ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு.. போர்த்துகிறவர் புனிதர்… அதனால ஏத்துக்கிறேன். என்றார் எம்.ஆர்.ராதா.
பெரியாரின் சிந்தனை வெளிச்சத்தை சினிமாவிலும் பொது வாழ்க்கையிலும் சரியாக பிரதிபலித்த கலைஞன் என்று ராதாவை சொல்லலாம். பெரியார் பற்றாளராகவே மாறிய எம்.ஆர்.ராதா சாகும்வரை பெரியாரின் மீது காதல் கொண்ட கிறுக்கனாய் வாழ்ந்தார். பெரியாரின் போர்ப்படைத்தளபதியாய் வாழ்ந்த சுயமரியாதை வீரன் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவிற்கு ‘நடிகவேள்’ பட்டம் அளித்தவர்.
பெரியாரை நிழல்போலவே பின்தொடர்ந்த ராதா 1979ஆம் வருடம் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இறந்ததுகூட பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்றுதான். அதேபோல இறந்த நேரம் பெரியார் இறந்த அதே காலை 7.25 மணி. தனது இறப்பில் கூட நாள்,நேரம் என தனது தலைவனை பின்பற்றி சென்ற ஒப்பற்ற கலைஞன் தான் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
வழக்கிலிருந்து விடுதலையாகி சிறையிலிருந்து வெளியே வந்த ராதா ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒருமுறை ராதா நடித்துக்கொண்டிருந்த ஸ்டுடியோவில் நாகேஷ் நடிக்கும் படத்தின் படபிடிப்பும் நடந்துகொண்டிருந்தது.. படபிடிப்பு தளத்திற்குள் நுழைந்த நாகேஷ் ஒரு மரத்தடியில் ஆட்களுக்கு நடுவே எம்.ஆர்.ராதாவை பார்த்திருக்கிறார். மரியாதை நிமித்தமாக அவரிடம், ‘இந்த படத்துல உங்க கேரக்டர் என்ன அண்ணே’ என்று கேட்க, அவர், ‘நிஜத்துல ஓழுங்கா சுடத்தெரியாத எனக்கு போலீஸ்காரன் வேசம்’, என்று அலட்சியமாக ஒரு போடுபோட, அதன் உள்ளர்த்தம் புரிந்துக்கொண்ட நாகேஷ் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நழுவியிருக்கிறார். இது நடிகர் நாகேஷே தனது சுயசரிதை புத்தகத்தில் பதிவுசெய்த விசயம்.
1924-ல் ஜெகநாத ஐயரின் நாடகக்குழு ‘கதரின் வெற்றி’ என்ற நாடகத்தை நடத்தியது. அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக காந்திஜி தம்பதியரும், சீனிவாச ஐயங்கார், ராஜாஜி போன்றோரும் வருகின்றனர். அப்போது பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்த ராதா, ‘பாயசம்’ என்ற நகைச்சுவைப் பாத்திரமேற்று அந்த நாடகத்தில் நடித்தார். நாடகத்தைப் பார்த்த ராஜாஜி, ‘‘பாயசமாக நடித்த பையனைக் கூப்பிடுங்கள், நான் பார்க்க வேண்டும்’’ என்று ராதாவை அழைத்து முதுகில் தட்டிக் கொடுத்து, ‘‘பாயசம் மிகவும் நன்றாக இருந்தது’’ என்று பாராட்டினார்.
பாகப்பிரிவினை திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது சுனில்தத் ‘சிவாஜியின் பாத்திரத்தில் திலீப்குமார் நடிக்கிறார். அவரால் சிவாஜியை விடவும் கூட சிறப்பாக நடித்துவிட முடியும். ஆனால் ராதாவின் பாத்திரத்தில்தான் ராதாவை விட வேறுயாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது” என்றார். தெலுங்கில் அப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டபோதும் ராதாவின் பாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்கினர்.
எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே அப்போதைய காங்கிரஸ் ஆட்சி நாடக தடைச்சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறுநாள் போடுவார்! கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா. ‘ராமன் வேடத்தைக் கலையுங்கள்’ எனக் கூறிய காவல்துறையினரிடம் ‘வேடம் கலையாது, வில் கீழே விழாது, கலசம் கீழே வராது’ எனக் கூறி, ஒரு கையில் கள்ளுக்கலயமும், மறுகையில் சிகரெட்டுமாக காவல் நிலையம் நோக்கி நடந்தார் எம்.ஆர்.ராதா.
125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். சினிமா வாழ்க்கையைக் குறிப்பிடும்போது ‘ரிட்டயர்டு லைப்’ என்றே குறிப்பிட்டார். படங்களின் வெற்றிவிழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. காரணம் கேட்டால் ‘ வியாபாரரீதியாக வசூலைக்குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே’ என்றார்.
ராதாவின் முதல் மனைவி பெயர் சரஸ்வதி. பின்னர் அவருடைய தங்கை தனலட்சுமியை மணந்தார். மூத்த மகனான எம்.ஆர்.ஆர்.வாசு, சில படங்களில் நடித்தார். ஆனால் இளம் வயதிலேயே காலமானார். அடுத்த மகன் ராதாரவி இப்போது திரை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்குகிறார். ராதாவின் மூன்றாவது மனைவி கீதா. இவருடைய மகள் ராதிகா, சினிமாவிலும், சின்னத்திரையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார். ராதிகாவின் தங்கை நிரோஷாவும் நடிகைதான்.
சினிமா முதல் சிவகாசி காலண்டர் வரை அனைத்திலும் கடவுளின் பின்புறத்தில் இன்றும் நாம் காணும் ஒளிவட்டத்தை உருவாக்கி பதிபக்தி நாடகத்தில் அறிமுகப்படுத்தியவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா தான்.