தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன். இதனால், ’சங்கமித்ரா’ படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
முன்னதாக இந்த சங்கமித்ரா படம் பற்றிய அறிவிப்பை கேன்ஸ் திரைப்படவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு வெளியிட்டனர். படத்தின் முக்கியமான சங்கமித்ரா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவரும் படத்துக்காக வாள் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார். பின் ஸ்ருதி, சங்கமித்ரா படத்திலிருந்து விலகுவதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து படக்குழுவும் ஸ்ருதியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். இதனால் சங்கமித்ரா கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது.
ஹன்ஸிகா உள்ளிட்ட சில நடிகைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க, எந்த நடிகையும் முடிவாகாமல் இருந்தது. தற்போது அந்தப் பாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த திஷா பதானி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
படம் குறித்து குஷ்பு தனது ட்விட்டரில், “ஒரு திரைப்படம் என்பது படப்பிடிப்பு மட்டும் கிடையாது. படத்தின் 70 சதவிகிதம் ஸ்க்ரிப்ட் ஒர்க்தான் என்பார் ஸ்பீல் பெர்க்” என்று படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்க் நடைபெற்று வருவதை மறைமுகமாகச் சொல்லியதோடு, டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் டிசம்பரில் தொடங்கவிருப்பதால், ‘கலகலப்பு 2’ படத்தை சுந்தர்.சி விரைவாக முடிக்க கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.