இலங்கை உள்நாட்டுப் போர் பின்னணியில் தயாரான ‘ நான் திரும்ப வருவேன்’

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகி யிருக்கும் “ஒக்காடு மிகிலாடு” Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது.இத் திரைப்படம் “நான் திரும்ப வருவேன்” என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளது. தமிழில் ‘ராவண தேசம்’ என்ற படத்தை இயக்கிய அஜய் ஆன்ட்ரூஸ்-தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். . இலங்கையிலிருந்து அகதிகளாகத் தப்பித்து தமிழ்நாட்டுக்கு படகில் வருபவர்களுக்கு நேரும் துயரங்களைப் பற்றி சொன்ன படம் அது.

இந்தப் படம் பற்றி அஜய், “ராவண தேசம்’ படத்தை நிறைய பேர் பார்த்திருக்க மாட்டீங்க. அது ஒரு உண்மைக் கதை. அந்தப் படத்தைப் பெருசா கொண்டு போய்ச் சேர்க்க முடியலை. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவங்க ஏன் இலங்கைப் பிரச்சனையை மையமா வச்சி படம் பண்ணக் கூடாதுன்னு கேட்டாங்க. அப்படி பண்ண படம்தான் ‘ராவண தேசம்’.இலங்கை அகதிகளோட வலி என்னன்னு எனக்குத் தெரியும். பசி எல்லாருக்கும் ஒண்ணுதான். இந்தப் பிரச்சனையை இந்தியா முழுக்க கொண்டு போய்ச் சேர்க்கணும்னு ஆசைப்பட்டேன்.

அதை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘நான் திரும்ப வருவேன்’. இது ஒரு மாணவர் தலைவர் பற்றிய கதை. அவர் ஒரு அகதி, அவரை அப்படி மாற்றிய விஷயம் எது என்று படத்தில் சொல்லியிருக்கிறேன். அங்க இருந்து அகதியா வந்தவர் இங்கயும் அதே மாதிரி ஒரு வலியை அனுபவிக்கிறாரு. இந்தப் படத்தை பார்த்தீங்கன்னா, பெரிய பட்ஜெட்டோட, கிராபிக்ஸோட, பெரிய அளவில் படமாக்கியிருக்கிறோம்,” என்றார்.

படத்தின் நாயகன் மனோஜ் மஞ்சு படம் பற்றி ,“தமிழில் இதுக்கு முன்னாடி ‘என்னைத் தெரியுமா’ன்னு ஒரு படத்தில் நடித்தேன். அதற்குப் பிறகு தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நல்ல கதைக்காக, கருத்துக்காக காத்திருந்தேன். அந்த மாதிரி சமயத்துலதான் இயக்குனர் அஜய் இந்தப் படத்தின் கதையைச் சொன்னார்.

இந்தப் படத்தோட கதையைக் கேட்டதும் எமோஷனலா இருந்தது. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை. இலங்கையைப் பத்தி மற்றவர்கள் சொன்னதைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன். ஆனால், தமிழ் மக்கள் ஒரு சுதந்திரத்துக்காகத்தானே போராடினாங்கன்னு நினைப்பேன். அதைப் பத்தி வெளிப்படையா பேச எனக்குத் தைரியம் இல்லை.

இயக்குனர் இபப்டி ஒரு கதையைச் சொன்னதும் கண்டிப்பா பண்ணணும்னு நினைச்சேன். வாழ்க்கை முழுவதும் ஞாபகம் வச்சிருக்கிற மாதிரியான படம் இது. ஒரு பெரிய தலைவரைப் பற்றிய படமும் கூட. எல்லாருமே நம்ம கூடப் பிறந்தவங்க, அவங்களை எல்லாம் சாகடிச்சத நடந்தது, எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து 2017ம் வருஷத்துல ஒரு மாணவர் தலைவர் மூலமா கதையை சொல்லியிருக்கிறோம். உலகத்துல கெட்டது நடக்கும் போது எல்லாம் ஒரு தலைவர் வருவாரு. அதுக்காகத்தான் ‘நான் திரும்ப வருவேன்’ என படத்திற்கு தலைப்பு வச்சோம்.

லட்சக்கணக்கான மக்கள் அங்க செத்து போயிட்டாங்க. அதை இன்றைய ஜெனரேஷனுக்கும் காட்டணும். அதனாலதான் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பண்ணியிருக்கோம். உலகப் பட விழாக்களில் இந்தப் படத்தைக் காட்டணும்.

இந்த மாதிரி ஒரு படத்தைப் பண்ணிட்டு செத்துப் போனால் கூட பரவாயில்லை, ஒரு நல்ல படம் பண்ணிட்டு செத்துப் போயிட்டான்னு சொல்வாங்க. இந்தப் படம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். உலகம் முழுவதும் அகதிகளாக பல பேர் இருக்காங்க. எத்தனையோ குடும்பங்கள் தவிச்சிட்டிருக்காங்க. சில நாடுகளில் மக்களை விட அகதிகள் அதிகமா இருக்காங்க.

ஒரு அகதியோட வாழ்க்கையை வலியோட சொல்லியிருக்கிற படம் இது. இந்தப் படத்தோட வெற்றி தோல்வி எல்லாம் பெருசில்லை. உலகம் முழுக்க இந்தப் பிரச்சனையைக் கொண்டு போய் சேர்க்கணும்னு நினைச்சோம்,” என்றார் மனோஜ் மஞ்சு. இப்படத்தை  செப்டம்பர் மாதம் வெளியிட  திட்டமிட்டு வருகிறார்கள்