திலீப் அரெஸ்ட்! – நானும் ஷாக் ஆயிட்டேன் – பாவனா ஸ்டேட்மெண்ட்!

0
260

மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்க பிரபல நடிகர் திலீப்பை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவ்யா மாதவனும் தலை மறைவாகியுள்ளார். கேரள காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை யும், பலரிடம் விசாரணையும் நடத்தி வருகிறது. திலீப் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாவனா யாரிடமும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் திலீப் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாவனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”ஒரு தொலைக்காட்சியிலோ, பத்திரிகையாளர் சந்திப்பிலோ உட்கார்ந்து கொண்டு என் எண்ணங்களை விவரிக்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால்தான் இப்போது இந்த அறிக்கையை இப்படி வெளியிடுகிறேன். கடந்த பிப்ரவரி 17 அன்று, துரதிர்ஷ்டவசமான, மறக்க முடியாத சோதனையைக் கடந்து வந்தேன். நேர்மையாக கேரள மாநில காவல்துறையிடம் புகார் தெரிவித்தேன். இப்போது வரை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அந்த விசாரணையில் சமீபத்திய கைதுகளும், தகவல்களும் உங்களைப் போலவே எனக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. எனக்கு யாரிடமும் எந்த முன் விரோதமும் இல்லை. அப்படி முன்விரோதம் காரணமாக நான் யாரையும் எந்த சூழ்நிலையிலும் சந்தேகத்துக்கு இடமானவர்க ளாக ஆக்கியதும் இல்லை. இதற்கு முன்பும் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. கடந்த காலத்தில் இந்த நடிகருடன் சில படங்கள் நான் நடித்துள்ளது உண்மைதான். பிற்காலத்தில் எங்களுக்குள் தனிப்பட்ட சில பிரச்சினைகளால் இருந்த நட்பும் முறியும்படி ஆனது.

ஊடகம் மற்றும் நண்பர்கள் மூலம், அவரது கைது குறித்த தகவல்களை சேகரிக்கும் போது, அவர் குற்றவாளி என நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் காவல்துறையிடம் இருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. அந்த நடிகர் தான் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார். அது உண்மையென்றால் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கத் தேவையான சாட்சிகள் வெளியே வர வேண்டும் என விரும்புகிறேன். அப்படி இல்லையென்றால் அவரது தவறுகள் விரைவில் வெளியே வர வேண்டும் என விரும்புகிறேன். சட்டத்தின் முன் அனைவரும் சமம். அப்பாவியும் தண்டிக்கப்படக் கூடாது, குற்றவாளியும் தப்பித்துவிடக் கூடாது.

அந்த குறிப்பிட்ட நடிகருடன் ரியல் எஸ்டேட் மற்றும் இன்ன பிற முதலீடுகளில் நான் கூட்டு வைத்திருப்பதாக சில தகவல்கள் வருகின்றன. அவை பொய்யே. அப்படி எதுவும் எங்களிடையே இல்லை. அத்தகைய உண்மையற்ற செய்திகள் சீக்கிரம் மறைந்து விடும் என நினைத்தேன். ஆனால் அவை மீண்டும் மீண்டும் ஊடகங்களில் வருகின்றன. அதனால் தெளிவு தர விரும்பினேன்.

வேண்டுமென்றால், தேவைப்படும் எல்லா ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகளிடம் தர தயாராகவுள்ளேன். மேலும், எனது சகோதரர் மூலமாக நான் தரும் அறிக்கையைத் தவிர, எனது அறிக்கை, வீடியோ என சமூக வலைதளங்களில் வருபவைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த மாதிரியான ஆதாரமற்ற தகவல்கள் பொதுமக்களிடமும், ஊடகங்களிடமும் குழப்பத்தை உருவாக்குவதால், அவற்றை பரப்பவேண்டாம் என என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அப்பாவியும் தண்டிக்கப்படக் கூடாது, எந்த குற்றவாளியும் தப்பித்துவிடக் கூடாது என மனமார விரும்புகிறேன். அனைவரும் சட்டத்துக்குட்பட்டவர்களே. உங்களது எல்லையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு பிரார்த்தனைகள், நன்றிகள்” என்று பாவனா தெரிவித்துள்ளார்.