எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ ஜூலை 7ம் தேதி ரீ ரிலீஸ்!

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடிமைப்பெண்’.  வசூல் சாதனை படைத்த ‘அடிமைப் பெண்’ 25 வாரம் அமோகமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இதில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்தார். ஜெயலலிதாவும் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலம். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது.

இந்நிலையில் “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது என்பதும் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கிய விதம் வியப்புக்குரிய விஷயமாகும்.

எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்திருக்கிறார். அவரது கட்டுமஸ்தான புஜங்களும் புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் தெரியும்படியான அவரது அந்த தோற்றம்,
52 வயதிலும், அவர் அனைவரும் ரசிக்கும் அழகனாக இருந்தார் என்பதைக்காட்டுகிறது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு, பாலைவனத்தில் ஒட்டகச் சண்டை, க்ளைமாக்ஸில் சிங்கத்துடன், எம்.ஜி.ஆர் நேருக்கு நேர் மோதும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என பல கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட படம் அடிமைப்பெண்.

சிங்கத்துடனான சண்டைக்காட்சிக்காக, எம்.ஜி.ஆர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கஸிடம் இருந்து, சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பிரத்யேக பயிற்சியாளர் உதவியுடன் ஆறு மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். இசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சுவாரஸ்யமான அம்சங்களுடனும், திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது. வசூலிலும், அந்த காலத்திலேயே இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதன் மதிப்பு 350 கோடியை தாண்டியிருக்கும் என்பது வியப்புக்குரிய விஷயம்.

இப்படி பல சிறப்பம்சங்களுக்கும் உரிய ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை 48 வருடங்களுக்குப் பிறகு வாங்கி அதிநவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்கிறார் சாய் நாகராஜன்.கே. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட, அடிமைப்பெண் திரைப்படம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும், சினிமாத்துறையினரையும் தியேட்டருக்கு வரவைக்கும் என்பது நிச்சயம்.