“என் ஆளோட செருப்பக் காணோம்” – டைட்டில் ஏன்?- இயக்குநர் ஜெகன்நாத் விளக்கம்

‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த போஸ்டர்கள் நிச்சயம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும். அது என்ன ? , இப்படி ஒரு தலைப்பு என இயக்குனர் ஜெகன்நாத்திடம் கேட்ட போது, “ஒரு செருப்பு கூட நம் வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்திவிடும். ஒரு சமயம் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்குக் கதை சொல்ல போன போது, நான் அணிந்து கொண்டிருந்த ஒரு ஷு, அவரைச் சந்திக்க சென்ற ஹோட்டலுக்கருகில் தனித் தனியாக வந்துவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல், அவருக்கு போன் செய்து வேறு ஒரு காரணத்தைச் சொல்லி மாலை சந்திப்பதாகச் சொன்னேன். அந்த ஷு பிரச்சனை இல்லாமல் இருந்து, நான் அவரைச் சந்தித்து, அந்தப் படத்தை எடுத்திருந்தால் தெலுங்கில் ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அவரைச் சந்திக்க முடியாமல் போனதால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

en aaloda seruppa kanom gallery_00003சென்னையில் மழை, வெள்ளம் வந்த போது எத்தனையோ வெள்ளத்தில் அடித்து வந்த செருப்புகள் எத்தனையோ பார்த்தோம். ஒவ்வொரு செருப்புக்குப் பின்னாலும் ஒரு கதை நிச்சயம் இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும் என் மனதில் தோன்றியது.

‘பசங்க’ படத்தில் ‘பக்கோடா’ பாண்டியாக  சிறப்பாக நடித்த பாண்டி-யை இந்தப் படத்தில் தமிழ் என்ற பெயர் மாற்றத்துடன் நாயகனாக நடிக்க வைத்துள்ளேன். ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் ஒரு முழுமையான காமெடிப் படம். படம் பார்க்கும் போது, பேப்பரில் குறித்துக் கொண்டு வந்தால் ஒரு 100 இடங்களிலாவது நிச்சயம் சிரிப்பீர்கள்.

நகைச்சுவைக் காட்சிகளில் சென்டிமென்ட்டும் கலந்திருக்கும், சென்டிமென்ட் காட்சிகளில் நகைச்சுவையும் இருக்கும்.

படத்தின் கதையைக் கேட்டதும் தயாரிப்பாளர் சம்மதித்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மழையும் இருக்கும். மழையும், செருப்பும்தான் இந்தப் படத்தில் முக்கியமான விஷயங்கள். நிச்சயம் உங்களுக்கு ஒரு நிறைவான படமாக இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர் ஜெகன்னாத்.

ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், ரேகா, சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இஷான் தேவ் பாடல்களுக்கு இசையமைக்க, தீபன் சக்கரவர்த்தி பின்னணி இசையமைத்திருக்கிறார்.

விரைவில் படத்தின் இசை வெளியீடும், பின்னர் பட வெளியீடும் நடைபெற உள்ளது.