புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி திருட்டுக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!

தனது கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் ‘திட்டிவாசல்’ என்கிற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ். இப்படத்தை அறிமுக இயக்குநர் மு.பிரதாப் முரளி இயக்கியுளார். நாசர், மகேந்திரன், தனிஷ்ஷெட்டி, வினோத்குமார், தீரஜ் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாகூட அண்மையில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்களை வெளியிட்டார். யூடிவி’ தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர் பெற்றுக் கொண்டனர். காடும் காடு சார்ந்த நல்ல கதை என்பதால் நடிகர் நாசர் சிரமப்பட்டுத் தேதி கொடுத்து நடித்ததாக இப்படத்துக்குப் பாராட்டு வழங்கியுள்ளார். அப்படிப் பட்ட ஒரு படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளரைப் பண மோசடி செய்து ஏமாற்றியிருக்கிறார் மோசடி ஆசாமி ஒருவர்.

இதோ தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ்ராவ் அதைப் பற்றிப் பேசுகிறார்.

”என் பெயர் ஸ்ரீனிவாஸ்ராவ் .நான் கன்னடத்தில் தெலுங்கில் சில படங்களைத் தயாரித்திருக்கிறேன்.தமிழ்ப்படங்கள் பற்றி எனக்கு மரியாதை உண்டு. எனவே தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க ஆர்வமாக இருந்தேன் . தமிழில் என் முதல் படம் ஏனோ தானோ வென்று இருக்கக் கூடாது, நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தேன். அப்படிப்பட்ட சூழலில் பிரதாப் முரளி வந்து ஒரு கதை சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதையே ‘திட்டிவாசல்’ என்கிற படமாக எடுக்கத் தயாரானோம். நாசர் மாஸ்டர் மகேந்திரன், தனுஷெட்டி நடிப்பில் படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம்.. . 2015 மிஸ் இந்தியாவான ஈஷா அகர்வாலை இதில் தமிழில் அறிமுகப் படுத்தியிருக்கிறோம்.

ஆரம்பத்தில் மேக்னா நாயுடு என்கிற ஒரு நடிகையை இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.. கதையே காட்டுப் பகுதியில் நடக்கிறது என்பதை எல்லாம் சொல்லித்தான் ஒப்பந்தம் போட்டோம். எல்லாம் தெரிந்துதான் அவரும் ஒப்புக் கொண்டார். சற்றுத்தள்ளி இருக்கும் விருந்தினர் விடுதியில்தான் தங்கவேண்டியிருக்கும் என்பதை எல்லாம் தெரிந்துதான் அவரும் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் படப்பிடிப்பு நடக்கும் தாளூர் என்கிற இடத்திற்குப் போனபின் எனக்கு ஸ்டார் ஓட்டல் வேண்டும் என்று பிரச்சினை செய்தார் .முதல் நாளே பிரச்சினை. கூடவே அடியாளை அழைத்து வந்தார். ஸ்டார் ஓட்டல் வேண்டும் என்று அவரை வைத்து மிரட்டினார். 7 நாட்கள் நாசருடன் நடித்து காட்சிகளை எடுக்க வேண்டும்.ஆனால் முடியவில்லை. படப்பிடிப்பு நின்றதால் பல கஷ்டங்கள்,பல நஷ்டங்கள் ஏற்பட்டன. எனவே அவரை மாற்றி விட்டோம். இதனால் எங்கள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அவர் ‘மஞ்சள்’ என்கிற ஒரே ஒரு தமிழ்ப் படத்தில்தான் நடித்திருக்கிறார். அதற்குள் இவ்வளவு ஆர்ப்பாட்டம். எங்கள் படத்தில் நடிக்கவுமில்லை. முன்பணத்தையும் திருப்பித்தரவில்லை.இப்படி இருக்கும் நடிகைகளுக்கு யாரும் வாய்ப்பே தரக்கூடாது .

இப்படிப் பல பிரச்சினைகளை எல்லாம் மீறி ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கி நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 50 லட்சரூபாய் இருந்தால் படத்தை சரியானபடி முடித்துவிடலாம் என்று தோன்றியது. அப்போது இயக்குநர் பிரதாப் முரளி மூலம் சம்சுதீன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் தனது ‘ ரசூல் மார்க்கெட்டிங் ‘ என்கிற நிறுவனத்தின் மூலம் பணம் வாங்கிக் கொடுப்பதாக கூறினார். பிரின்ஸ் பிக்சர்ஸ் கம்பெனி மூலம் கமல்ஹாசன் படம், பிரகாஷ்ராஜ் படம் போன்றவற்றுக்குக்கூட ஏற்கெனவே பைனான்ஸ் வாங்கிக் கொடுத்து இருப்பதாகக் கூறினார்.எங்களை அப்படி நம்பவும் வைத்தார்.

ஆரம்பத்தில் நாங்கள் 50 லட்சம்போதும் என்றோம். ஆனால் அவரோ ” அவர்கள் பெரிய இடம் ,அவர்களுக்கு 50 லட்சம் எல்லாம் சாதாரணமான தொகை, . கோடிக் கணக்கில்தான் கொடுப்பது வாங்குவது செய்வார்கள். ஒரு கோடி ரூபாய் வேண்டுமானால் வாங்கித் தருகிறேன்.” என்றார். சற்றே யோசித்த நாங்கள் ,பிறகு பட வெளியீடு வரை எல்லாவற்றுக்கும் தேவைப்படுமே எனச் சரி என்று கூறினோம். ‘அதற்கு நீங்கள் பிராசசிங் கட்டணம் 5லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் ‘என்றார். நீங்கள் கொடுக்க்கப் போகிற பணத்தில் கமிஷனைக் கழித்துக் கொண்டு தரலாமே என்றோம். அவர் ” அந்தக் கமிஷனைத் தந்தால்தான் இந்த வேலையை மேலே நகர்த்த முடியும் ”என்றார். எனக்கு அவர் மீது மனதின் ஒரு மூலையில் சந்தேகம் துளிர்த்தாலும் எங்கள் இயக்குநர் பிரதாப் முரளி அவரை நூறு சதவிகிதம் முழுதாக நம்பினார். என்னையும் நம்பும்படி கூறினார் சரியென்றும் ஒப்பந்தம் போட்டோம் .5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ப்ளாங்க் செக்காகக் கொடுத்தோம் அது அவரது கம்பெனியில் மறுநாளே பாஸாகி விட்டது.

ஆனால் அவரிடமிருந்து எந்த விஷயமும் நகரவில்லை.ஒருவாரம் ஆனது. ஒருமாதம் ஆனது போய்க் கேட்டோம் அவரிடம் பேசும் போது பணம் மும்பையிலிருந்து வரும் என்று கூறினார்.யார் யாரிடம் எல்லாமோ போனில் இந்தியிலே பேசினார்.
அவர் பேசிய இந்தி எதிராளி பேசாமலேயே இவரே எல்லாம் பேசியது என்பது புரிந்தது. பிறகு நான் போன் செய்தால் என்போனை எடுப்பதில்லை இயக்குநர் போனை மட்டுமே எடுப்பார்.

ஒருநாள் துபாயிலிருந்து பணம் வரும் என்றும் வெஸ்டர்ன் யூனியனில் பணம் வரும் என்றும் கூறி ஒரு டிரான்ஸாக்ஷன் எண்ணைக் கொடுத்தார் அது போலி என்று பிறகுதான் தெரிந்தது நம்பிக்கையாக அவர் கூறியதை நம்பி படப்பிடிப்புக்கே போய் விட்டோம் ..மீண்டும் பேசிய போது,கோவை எஸ் பேங்கில் பணம் போடப்பட்டு விட்டதாக ஒரு டிரான்ஸாக்ஷன் ஐடி கொடுத்தார் போய் விசாரித்த போது அப்படி எதுவுமில்லை என்றார்கள். தாளூரில் பணத்துக்குக் காத்திருந்து 3 நாள் ஆகிவிட்டன. இனியும் அந்த ஆளை நம்புவது வீண் என்று சிரமப்பட்டு வேறு ஏற்பாடு செய்து படப்பிடிப்பைப் முடித்து வந்தோம்

படப்பிடிப்பை முடித்து வந்த பிறகு ஒருநாள் போனோம்.ஏற்கெனவே அவரிடம் கொடுத்திருந்த என் ப்ளாங்க் காசோலைகள் மூன்றையும் வாங்கி வந்தோம்.. மூன்று மாதங்கள் போனது. மீண்டும் ஒருநாள் சம்சுதீன் இருந்த அலுவலகம் தேடிப் போனோம் மூடியிருந்தது. வீடு தேடிப் போனோம். அது நாலாவது மாடியில் இருக்கும்.அதுவும் மூடியிருந்தது. ஆளைக்காணவில்லை. இதுவரை ஆறுமாதமாகி விட்டது.

என்னிடம் 5லட்சத்து 60ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டார். இதையே நினைத்து கவலைப்பட்டால் படம் பாதிக்கப்படும் என்று சிரமப்பட்டு பணம் புரட்டி மீதமிருந்த படப்பிடிப்பை முடித்து விட்டோம். நான் கொடுத்த காசோலை ஒரு கணக்கில் போயுள்ளது .ஆனால் சம்பந்தப்பட்ட அந்த ஆளை மட்டும் காணவில்லை .அந்த மோசடி ஆளைப் பிடிக்க முடியாதா? அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கையில் இறங்க இருக்கிறோம்.

எனக்குள்ள கவலை எல்லாம் அந்த மோசடி ஆள் சம்சுதீன் என்பவர் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறாரோ ? என்பதுதான்.இப்படி ஏமாந்த கடைசி ஆளாக நான் மட்டுமே இருக்க வேண்டும் .இந்த மோசடி ஆளிடம் ,இவர் போன்ற ஆட்களிடம் யாரும் இனிமேலும் ஏமாறக்கூடாது என்றுதான் இதை வேதனையுடன் ஊடகங்களிடம் கூறுகிறேன்.

தமிழ்ச் சினிமாத் துறையை இதுவரை பெருமையுடன் நினைத்திருந்தேன் இவ்வளவு மோசடிப் பேர்வழிகள், 4 20 ஆட்கள், பித்தலாட்டக் காரர்கள் இருக்கிறார்கள் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. ” என்று வேதனையுடன் கூறினார் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ்ராவ் .பேட்டியின் போது ‘திட்டிவாசல்’ படத்தின் இயக்குநர் .மு.பிரதாப் முரளியும் உடன் இருந்தார்.