பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது!

0
554

டெல்லி மக்களின் மனதில், பொழுதுபோக்கு அம்சங்களில் மிகவும் இடம் பிடித்த ரீகல் தியேட்டர் இன்று – 30ம் தேதியோடு இழுத்து மூடப்படுகிறது. பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா ஷர்மா நடித்து தற்போது திரையிடப்பட்டு உள்ள ‘பில்லவ்ரி’ இந்தி சினிமாதான் ரீகல் தியேட்டரில் கடைசி படமாகும்.

மல்டிபிளக்ஸ் எனப்படும் ஷாப்பிங் மால், உணவகம் மற்றும் பல சினிமா அரங்குகள் ஒரே கட்டிடத்தில் அமைந்த பொழுதுபோக்கு மையங்கள், இன்றைய இளைஞர்கள் மற்றும் காதலர்கள் சந்திக்கும் மையமாக மாறிவருகிறது. அதையடுத்து, பழைய தியேட்டர்களுக்கு கிராக்கி குறையத் தொடங்கியது. எனினும், பாரம்பரியமிக்க தியேட்டர்களை இழக்க ரசிகர்கள் இன்றளவும் விரும்பவில்லை. எனவே, 84 ஆண்டுகளாகியும், ரீகல் தியேட்டரில் நிறுத்தாமல் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், இரண்டு பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து, பாரம்பரிய பகுதியும், காலனி ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிரம்பியதுமான கன்னாட்பிளேசில் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் ஆய்வுகள் நடத்த புதுடெல்லி நகராட்சி உத்தரவிட்டு உள்ளது. நகராட்சி அறிவிப்பை உதாசீனம் செய்ய தியேட்டர் நிர்வாகம் விரும்பவில்லை. மேலும், எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதிலும் நிர்வாகம் குறியாக உள்ளது. எனவே, வேறு வழியின்றி வரும் 31ம் தேதியோடு காட்சியை முடித்துக் கொள்கிறது ரீகல் தியேட்டர்.இது பற்றி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ள தகவலில், ‘‘தியேட்டரை மல்டிபிளக்ஸ் அமைப்பாக மாற்ற முடிவு செய்தோம்.

ஆனால், கட்டிடத்தின் பாதுகாப்பை உறுதி செய்து அதற்காக சான்றிதழ் வழங்க நகராட்சிக்கு நீண்டகாலம் பிடிக்கும் என தெரியவந்தது. ஆகவே, வேறு வழியின்றி, அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் நல்லெண்ணத்துடன் இந்த மாதத்துடன் அரங்கம் மூடப்படுகிறது’’, என கூறப்பட்டுள்ளது. கன்னாட்பிளேசில் கடந்த 84 ஆண்டுகளாக கம்பீரமாக கொலு வீற்றிருந்த தியேட்டர் மூடப்படுகிறது எனும் அதிர்ச்சி தகவல் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.