பத்மாவதி படக்குழு மீது மீண்டும் தாக்குதல்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தீ வைப்பு!

0
654

ஜெய்ப்பூரை அடுத்து  மகாராஷ்டிரா மாநிலத்திலும், பத்மாவதி படப்பிடிப்புத் தளத்திற்கு தீ வைத்து எரித்த கும்பல் ஒன்று, அங்கிருந்த படக்குழுவினரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரண்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் பத்மாவதி என்ற வரலாற்றுத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம், முகாலய அரசன் அலாவுதீன் கில்ஜி, ராஜபுத்திர ராணி பத்மாவதி மீது ஒருதலை காதல் கொண்டு, அவரை அடைவதற்காக, போர் செய்த வரலாற்றுச் செய்தியை கதையாகக் கொண்டுள்ளது.

ஆனால், இந்த படத்தை எடுக்க, ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பத்மாவதி படத்திற்கு செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு வந்தது. ஆனால், அங்கு திடீரென வந்த வன்முறையாளர்கள், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர்.

இதையடுத்து, அங்கிருந்து படப்பிடிப்புத் தளம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. அங்குள்ள கோலாப்பூர் பகுதியில் இந்த படத்திற்காக, செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அங்கு வந்த வன்முறையாளர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், படக்குழுவினரையும் கடுமையாக தாக்கிவிட்டு, தப்பியோடினர்.

இதில், பத்மாவதி படப்பிடிப்புத் தளம் முழுவதும் தீ பற்றி எரிந்து சேதமடைந்தது. படக்குழுவினர் சிலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.