சஞ்சய்தத் தாயாக நடிக்கிறார் மனிஷா கொய்ராலா!

சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை பாலிவுட்டில் உருவாகி ஹிட்டானது. சில்க்காக வித்யா பாலன் நடித்தார். இதையடுத்து முக்கிய நடிகர்களின் வாழ்க்கையை படமாக்க அவ்வப்போது ஸ்கிரிப்ட் தயாரிக்கின்றனர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான நடிகர் சஞ்சய்தத் வாழ்க்கை தற்போது படமாகிறது. ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சஞ்சய்தத்தின் தாய் நர்கிஸ். இவர் பிளாக் ஒயிட் காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது மனிஷா கொய்ராலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நர்கிஸ் நியூயார்க் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மனிஷா கொய்ராலாவும் சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நர்கிஸ் அப்போது சிகிச்சை பெற்ற அதே நியூயார்க் மருத்துவமனையில் மனிஷாவும் தங்கி சிகிச்சை பெற்றார். கேன்சர் வலி குறித்து மனிஷாவுக்கு நன்கு தெரியும் என்பதால் நர்கிஸ் பாத்திரத்துக்கு அவரை தேர்வு செய்ததாக இயக்குனர் தெரிவித்தார். நிஜத்தில் அனுபவித்த வேதனையை திரையில் மனிஷா வெளிப்படுத்த உள்ளார்.