பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி’. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், ‘பாகுபலி 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வந்தது.

நேற்று (ஜனவரி 6) ‘பாகுபலி – தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்தது படக்குழு. 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனால் தொடர்ச்சியாக பணியாற்றிய படக்குழுவினர் அனைவரோடு பிரபாஸ், அனுஷ்கா, இயக்குநர் ராஜமெளி, தயாரிப்பாளர் ஷோபு உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

படப்பிடிப்பு நிறைவு குறித்து தயாரிப்பாளர் ஷோபு, “‘பாகுபலி’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட பயணம், எங்களுடைய அற்புதமான படக்குழுவினால் மட்டுமே சாத்தியமானது. தற்போது கமலக் கண்ணன் மேற்பார்வையில் நடைபெற்று வரும் கிராபிக்ஸ் பணியில் கவனம் செலுத்தவுள்ளோம். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் பிரபாஸ் கொடுத்த தேதிகளை கணக்கு வைத்துக் கொள்ளவே இல்லை. அதற்கு தேவைப்படவில்லை. எந்த கட்டாயமும் இல்லாமல் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்தார். அதுதான் அவரது அர்ப்பணிப்பு” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, இந்தியில் இப்படத்தை வெளியிடும் கரண் ஜோஹர், “தர்மா தயாரிப்பு நிறுவனம், மீண்டும் ராஜமெளலியின் கனவுகளோடு இணைந்திருக்கிறது. ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் வெளியாகும்” என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.